சதுரகிரியின் பிரதான கடவுளான சுந்தர மகாலிங்கம், இந்த மலை உச்சியில் வழிபாட்டுக்கு வரக் காரணமான சம்பவத்தைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சென்ற இதழில் பார்த்த கதையின் தொடர்ச்சியை இப்போது கவனிப்போம். தில்லைக்கோன்- திலகமதி தம்பதியின் அருமைப் புத்திரனாக 'பச்சைமால்' என்கிற திருநாமத்துடன் அவதரித்தார் தேவலோகவாசியான யாழ்வல்ல தேவர். இவர் மீது காதல் கொண்ட தேவலோக மங்கையான தேவமாது, தில்லைக்கோனின் தங்கை யான சிங்காரமங்கைக்கும் அவள் கணவன் செங்கமலக் கண்ணனுக்கும் மகளாகப் பிறந்தாள். இவளது பெயர் 'சடைமங்கை'. இறைவனின் கட்டளைப்படி இந்த அவதாரங்கள் பூலோகத்தில் நிகழ்ந்தன.
பச்சைமாலும் சடைமங்கையும் சீரும் சிறப்புமாக அவரவர்களது வீட்டில் வளர்ந்து வந்தனர். பருவங்கள் பறந்தன. வருடங்கள் உருண்டோடின. பச்சைமால் பதினாறு வயதையும், சடைமங்கை பன்னிரண்டு வயதை யும் எட்டினர். இருவரது வீட்டிலும் திருமணப் பேச்சுகள் துவங்கின. பச்சைமாலின் பெற்றோரும் சடைமங்கையின் பெற்றோரும் ஒரு தினத்தில் கூடிப் பேசினர். உறவு முறையின் சந்தோஷத்தை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டனர். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்களும் பெரியோர்களும் அப்போது சம்மதம் தெரிவித்தனர். சம்மதம், சடங்காக மாறியது. ஒரு சுப தினத்தில் சடைமங்கையின் கழுத்தில் தாலி கட்டி, அவளைத் தன் மனைவி ஆக்கிக் கொண்டான் பச்சை மால்.
இல்லறம் இனிதே துவங்கிற்று. தன் குலத் தொழிலின் வழக்கப்படி பசு மாடுகளை ஓட்டிச் சென்று சதுரகிரி பகுதிகளில் மேய்த்து வந்தான் பச்சைமால். வளமாக மேய்ந்த பசுக்களின் பாலைக் கறந்து, உரிய பாத்திரங்களில் நிரப்பி, சடைமங்கையிடம் கொடுப்பான் பச்சைமால். பாலை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இருவரும் இனிதே வாழ்ந்தனர்.
பசுக்கள் பல்கிப் பெருகின. எட்டிப் பார்ப்பதற்குள் இருபது வருடங்கள் கடகடவென்று ஓடின. யாழ்வல்ல தேவருக்கும், தேவமாதுக்கும் கயிலாயத்தில் இறைவன் கொடுத்த வாக்குப்படி அவர்கள் இருவரையும் ஆட்கொள்ள வேண்டிய நேரம் வந்தது. சாபத்தின் காரணமாக பூலோகத்தில் வசிக்கும் அந்தத் தம்பதிக்கு திருக்காட்சி தந்து முக்தி அளிக்கத் தீர்மானித்த பரமேஸ்வரன், ஒரு மகா சித்தராக பூலோகத்தில் எழுந்தருளினார். ஜடா மகுடம் தரித்து, ருத்திராட்ச மாலைகளைத் திருமார்பில் தாங்கி, காவி வஸ்திரம் அணிந்து, நெற்றியிலும் திருமேனியிலும் திருநீறு துலங்க... கமண்டலம் ஏந்தி புறப்பட்டு வந்தார் ஸ்ரீகயிலாய நாதர்.
சதுரகிரியின் அடிவாரப் பகுதியும், தெய்வத் தன்மை வாய்ந்த பூமியுமான 'மாவூத்து' என்ற ஊரில் எழுந்தருளினார் இந்த மகா சித்தர் (மதுரை - ஸ்ரீவில்லிப்புத்தூர் சாலையில் வரும் கிருஷ்ணன்கோவிலில் இருந்து வத்திராயிருப்பு, தம்பிபட்டி வழியாகச் சென்றால், சுமார் 18 கி.மீ. தொலைவில் இருக்கிறது மாவூத்து). துறவிகளும் ரிஷிகளும் தவம் செய்து வாழ்ந்து வரும் பேற்றைப் பெற்ற கிராமமான மாவூத்தில், புதியவரான இந்த மகா சித்தருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. தினமும் அங்குள்ள திருக்குளத்தில் நீராடினார்.
புண்ணியம் பெற்ற அந்தத் திருக்குளம், மாவூத்தில் இன்றைக்கும் ஒரு மகா சாட்சியாக இருக்கிறது.
விடிந்தும் விடியாத அதி காலை நேரத்தில், நீர் தளும்பும் அந்தக் குளத்தின் நடுவில் இருந்து நீர்க்குமிழிகள் பெரிய அளவில் 'மளுக் மளுக்'கென்று தோன்றி, சற்று நேரத்தில் மறைந்து விடுவதாக ஊர்க்காரர் ஒருவர் சொன்னார். அதாவது, இறைவன் இன்றும் அந்தத் திருக்குளத்தில் அதிகாலை நேரத்தில் நீராடுவதாக ஐதீகமாம்!
சித்தராக வந்தவர் சாமான்யப்பட்டவரா? திரு விளையாடல் அரங்கேற வேண்டாமா? சடை மங்கையை அன்புடன் ஆசிர்வதித்து, ''குழந்தாய்... தாகமும் பசியும் சேர்ந்து என்னை வாட்டுகிறது. உன்னிடம் இருக்கும் பாத்திரத்தில் இருந்து கொஞ்சம் பாலை எனது பசிக்கு உணவாகத் தருவாயா?'' என்று கேட்டார்.
மறுபேச்சு எதுவும் பேசாமல், சாவி கொடுத்த பொம்மை போல், பால் பாத்திரத்தை எடுத்து மிகுந்த பவ்யத்துடன் சித்தரிடம் கொடுத்தாள் சடைமங்கை. உலகுக்கே உணவூட்டும் அந்த கயிலாய நாதன், பாத் திரத்தை வாங்கி, தலையைச் சற்றுச் சாய்த்து, பாலை அருந்தினார். செந்நிற மேனியனின் அதரமெங்கும் நொங்கும் நுரையுமாக பாலின் சுவடுகள். பால் பாத்திரத்தை சடைமங்கையிடம் கொடுத்தவர், ''மிகுந்த சந்தோஷம் பெண்ணே... எனது தாகமும் பசியும் அடங்கி விட்டது. நான் இன்னும் சில நாட்கள் இந்தப் பகுதியிலேயே தங்கிச் செல்லலாம் என நினைக்கிறேன். தினமும் என் பசியைப் போக்குவதற்கு இது போல் வந்து பால் தந்து உதவுவாயா?'' என்று கெஞ்சும் பாவனையில் கேட்டார், சித்தர் வடிவில் இருந்த சிவனார்.
''நிச்சயமாகத் தருகிறேன் ஐயா'' என்று சொல்லி, தனது இல்லம் புறப்பட்டாள். அடுத்த நாளில் இருந்து - இறையனாருக்குத் தான் கொடுத்த வாக்குப்படி, தினமும் அவருக்குப் பசுவின் பாலைக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டாள் சடைமங்கை. அதோடு, அந்த சித்தரின் அன்றாட நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்து, அவரது ஆசியும் பெற்று வந்தாள். இந்தச் சம்பவங்கள் எதுவுமே, சடைமங்கையின் குடும்பத்தினர் அறியார்!
விஷயம் வெளிச்சத்துக்கு வரும் நாளும் வந்தது. பச்சை மால் கறந்து கொடுத்து அனுப்பும் பாலில் கணிசமான அளவு தினமும் குறைவதைக் கண்டு குடும்பத்தினர் அவ்வப்போது குழம்பினர். விவரத்தை அவர்கள் பச்சைமாலிடமே ஒரு நாள் கேட்க... அவன் அதிர்ந்தான். ''என்னது... பால் அளவு குறைகிறதா? இருக்காதே... தினமும் கொடுத்து அனுப்பும் அதே அளவு பாலைத்தான் பாத்திரங்களில் வழிய வழிய சடைமங்கையிடம் நான் கொடுத்து அனுப்புகிறேன். அப்படி இருக்க நீங்கள் சொல்வது எப்படி சாத்தியம்? சரி, இதை நானே கவனிக்கிறேன்'' என்று அவர்களுக்கு விளக்கம் சொல்லி, சடைமங்கையை அவள் அறியாமல் கண்காணிக்கத் தீர்மானித்தான்.
மறுநாள் வழக்கம்போல் சடைமங்கையிடம் பாலைக் கொடுத்து அனுப்பி விட்டு, அவளுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து போனான் பச்சைமால். அவளும் தன் அன்றாட நடவடிக்கைப்படி, சித்தருக்குச் சிறிதளவு பாலைக் கொடுத்து விட்டு, எஞ்சியதை வாங்கிக் கொண்டு எதுவுமே அறியாதவள் போல் வீடு திரும்பினாள். பச்சைமாலுக்கு இப்போதுதான் விவரம் புரிந்தது. நடந்த சம்பவத்தைப் பார்த்து சினம் கொண்டான். கண்களில் கோபம் அனல் பறக்க வீட்டுக்கு ஓடோடி வந்தவன் ''சடைமங்கை... சடைமங்கை...'' என்று அலறி, அவளைத் தேடினான். 'கணவரது அன்பான குரல் வழக்கத்துக்கு மாறாக சினம் கலந்து ஒலிக்கிறதே' என்று ஐயப்பட்ட சடைமங்கை, பதறியபடி ஓடி வந்து, அவன் முன் நின்றாள். பச்சைமாலின் கொடூர முகம் கண்டு அவள் கை- கால்கள் நடுங்கின.
சடைமங்கையின் இடக் கையைப் பிடித்துத் தன் அருகே பலமாக இழுத்தான் பச்சைமால். அவன் முகத்தில் பொங்கும் கோபம் கண்டு ஏகத்துக்கும் தவித்துப் போனாள் அவள். ''அடியேய்... ஒவ்வொரு நாளும் பனியிலும் வெயிலிலும் கஷ்டப்பட்டு, மலைப் பிரதேசங் களில் மாடுகளை மேய்த்து, பாலைக் கறந்து, காசுக்கு விற்கச் சொல்லி உன்னிடம் கொடுத்து அனுப்பினால், கண்ட கண்ட பரதேசிக்கெல்லாம் பாலைப் பருகக் கொடுக்கிறாயே... உன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று ஏகத்துக்கும் திட்டியதோடு, அவளைத் தண்டிக்கவும் செய்தான்.
கணவர் கொடுத்த தண்டனையை எந்த வித மறுப்பும் இல்லாமல் வாங்கிக் கொண்ட சடைமங்கை, மாவூத்தில் எழுந்தருளி இருக்கும் மகா சித்தரிடம் மறுநாள் சென்று முதல் நாள் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறி, கண் கலங்கினாள். சித்தரும் அவளைத் தேற்றினார்.
''சடைமங்கை... நீ சாதாரணப் பிறவி அல்ல. பூலோகத்தில் நீ அவதரித்ததன் நோக்கம் இனிதே நிறைவேறியது. இனி, நவசக்திகளில் நீயும் ஒருத்தியாக இருந்து, தெய்வ சக்தியோடு திகழ்வாய். 'சடாதாரி' எனும் திருநாமத்துடன் இதே மாவூத்தில் கோயில் கொள்வாய். உன்னை வந்து தொழும் பக்தர்களது குறைகளைத் தீர்த்து, அவர்களுக்கு வேண்டும் வரம் கொடு!'' என்று ஆசிர்வதித்து, சடைமங்கையை மாவூத்தில் நிலை கொள்ளச் செய்தார்.
சடைமங்கையை காணாமல் தவித்த உடன் பிறந்த அண்ணன்கள் ஏழு பேரும், மாவூத்து மகா சித்தரிடம் ஓடோடி வந்தார்கள். தங்கள் தங்கையைப் பற்றிக் கண்ணீருடன் விசாரிக்க... அவளது இறை நிலையை எடுத்துச் சொல்லி, அவதார நோக்கத்தையும் விளக்கினார். 'சடாதாரி' என்ற பெயரில் தெய்வமானதையும் பக்குவமாகச் சொன்னார். பின்னர், சகோதரர்கள் ஏழு பேரையும் தெய்வத் தன்மை வாய்ந்த ஏழு ஐயனாராக்கி, திசைக்கு ஒருவராய் சதுரகிரியில் நிலை கொள்ளச் செய்தார்.
நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கேட்ட பச்சை மால், அழுது புலம்பினான். மனைவியே தெய்வம் ஆனதையும், அவளுடன் பிறந்த சகோதரர்கள் ஐயனாராகி, திசைக்கொருவராகக் காவல் காப்பதையும் ஊரார் மூலம் அறிந்தான். ஜனங்கள் அனைவரும் இந்த தெய்வங்களுக்குப் பொங்கலிட்டுப் படைப்பதையும், வழிபாடுகள் பிரமாதமாக நடப்பதையும் பார்த்து மனம் உருகினான். பித்துப் பிடித்தவன் போல் சில நாட்கள் அலைந்தான். பிறகு, பந்த- பாசம் அனைத்தையும் துறந்து, தனக்குச் சொந்தமான பசுக்களை மட்டும் ஓட்டிக் கொண்டு சதுரகிரி மலையில் ஏறினான். அங்கேயே பசுக்களை வைத்து வளர்த்தான். 'பசி' என்று வந்தவர்களுக்கெல்லாம் பால், தயிர், மோர் போன்றவற்றைக் கொடுத்தான். தனக்கு மோட்சத்தை அருளுமாறு கயிலயங்கிரிவாசனை நித்தமும் வேண்டி வந்தான்.
சித்தரின் ஆணையைச் சிரமேற்கொண்டு செயல் படுத்தினான் செங்கோல் மன்னன். திறமையான சிற்பிகளையும், ஸ்தபதிகளையும் வரவழைத்து ஆலயப் பணிகளை ஆரம்பித்தான். மாவூத்தில் மகேசன் ஆலயம், மகோன்னதமாக உருவானது. ஆலயப் பணிகள் அற்புதமாக முடிந்தன.
ஒரு நாளில் அதிகாலை வேளையில், கதிரவன் தன் கதிர்களைப் பரப்பி மாந்தர்களைத் துயில் எழுப்பிய பொழுதில், மன்னர் மற்றும் உள்ள ஆன்றோர்களுக்குத் தனது சுயரூபத்தைக் காட்டி அருளிய மகா சித்தர், புதிய ஆலயத்தின் உள்ளே சந்நிதியில் புகுந்து லிங்க சொரூபமாக மாறினார்.
இது கண்டு மன்னரும் மற்றவர்களும் 'நம சிவாய' கோஷத்தை எழுப்பி, இறைக் காட்சியைக் கண்டு இன்புற்றார்கள். அந்த லிங்கமே 'உதயகிரிநாதர்' என வழங்கப்பட்டு வருகிறது. மாவூத்தில் புனித குளத்தில் நீராடி, உதயகிரிநாதரையும், சடாதாரியையும் தரிசிப்பவர்கள் தங்களது பாவங்களைத் தொலையப் பெற்று, புனிதம் நிரம்பியவர்களாக மாறுகிறார்கள்.
சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் எழுந்தருளும் முன்பு தோன்றியவர் இந்த உதயகிரிநாதர் என்பதால், சதுரகிரி செல்லும் அன்பர்கள் இவரையும் வணங்குவது சிறப்பு!
| |||
Friday, 8 September 2017
சதுரகிரி யாத்திரை ! - 11
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment