நடராஜர்
(தொடர்ச்சி)
ஐந்தொழில் தாண்டவங்களாக- அகோரத் தாண்டவம், ஊர்த்துவத் தாண்டவம், ஆச்சர்யத் தாண்டவம், ஆனந்தத் தாண்டவம், சௌந்தர்யத் தாண்டவம் ஆகியவற்றை பரத சூடாமணி நூல் குறிப்பிடுகிறது. நடராஜருக்கு உரிய பஞ்ச சபைகளில் முதன்மையான திருவாலங்காடு- ரத்ன சபையில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாக இறைவன் காட்சியளிக்கிறார். சிதம்பரம் பொற்சபையில்- ஆனந்த நடராஜ மூர்த்தியாகவும், மதுரை ரஜத சபையில்- கால் மாறி அதாவது இடக் காலை முயலகன் முதுகில் ஊன்றி, வலக் காலை உயர்த்தி ஆடுகிறார். குலசேகர பாண்டியனின் வேண்டுதலுக்காக இவ்வாறு கால் மாற்றி ஆடினார் என்கிறது தல புராணம். இந்தத் தாண்டவம் அதிர வீசி ஆடுதல் எனப்படுகிறது. திருவாரூர் அருகிலுள்ள கீழ்வேளூர், திருப்பத்தூர்- வன்னியன் சுரக்குடி, சென்னை- குமரன் குன்றம் (குரோம்பேட்டை) கோயில்களில் உள்ள கால் மாறி ஆடிய நடராஜர் வடிவம் குறிப்பிடத் தக்கது. திருநெல்வேலி தாமிர சபையும், திருக்குற்றாலம் சித்ர சபையும் பஞ்ச சபைகளில் சிறப்பு வாய்ந்தவை. தல புராணப்படி சில திருக்கோயில்களில் நடராஜர் வடிவம் சிற்சில வேறுபாடுகள் கொண்டு திகழ்கின்றன. சிவபெருமானின் 108 கரணங்கள் கொண்ட சிற்பங்களை தில்லை, தஞ்சை, குடந்தை சார்ங்கபாணி கோயில்களிலும், விருத்தாசலம், திருவண்ணாமலை கோயில்களிலும் காணலாம். சிதம்பரம் கோயிலில் உள்ள ரத்தின சபாபதி எனும் மாணிக்க நடராஜ மூர்த்தமும், திரு உத்தரகோசமங்கை தலத்திலுள்ள மரகத நடராஜ மூர்த்தமும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ‘சப்த விடங்கத் தலங்கள்’ எனப் படும் ஏழு தலங்களில் திருவாரூர்- அஜபா நடனம், திருக்கோளிலி- பிரமர தாண்டவம், திருநள்ளாறு- உன்மத்த நடனம், நாகப்பட்டினம்- பாரவார தரங்க நடனம், திருமறைக்காடு- ஹம்ச நடனம், திருவாய்மூர்- கமல நடனம், திருக்காறாயில்- குக்குட நடனம் ஆகிய நடனக் கோலங்கள் சிறப்புடையன. தலையாரக் கும்பிட்டு கூத்தும் ஆடி... என்று திருநாவுக்கரசு பெருமான் பாடுவதைப் போல, இறைவனை வணங்கும் வழிகளில் ஒன்றாகக் கூத்து கருதப்படுகிறது. திருக்கோயில்களில் நடன மாதர்கள் பணியாற்றியமை கல்வெட்டுகளால் புலப்படும். ராஜராஜ சோழன் அமைத்த தஞ்சைப் பெரிய கோயிலில் நடனமாட நானூறு நடன மகளிரை தஞ்சையில் குடியமர்த்தியதை வரலாறு கூறுகிறது. இந்தியாவில் நடன வடிவங்கள் முதன்முதலில் கல்லில் செதுக்கப்பட்டது தஞ்சைப் பெரிய கோயிலில்தான் என்பது அறிஞர்கள் முடிவு.
ரிஷபாரூடர் - ரிஷப வாகனர்
சிவபெருமான், தன் அடியார்களுக்கு ரிஷப வாகனராகத் திருக்கோலம் காட்டி ஆட்கொண்டு அருளியதை பெரிய புராணத்தில் பல அடியார்களது வரலாற்றின் மூலம் அறிய முடிகிறது. திருநீலகண்டர், இயற்பகையார், இளையான்குடி மாறர், மானக்கஞ்சாறர், அரிவாட்டாயர், ஆனாயர், திருக்குறிப்புத் தொண்டர், சண்டேசர், திருஞானசம்பந்தர், சாணக்கியர், சிறுத்தொண்டர் ஆகிய நாயன்மார்களது வரலாறு இதற்குச் சான்றாகத் திகழ்கிறது. சிவபெருமானின் திருக்கோலங்களுள் உன்னத வடிவாகத் திகழ்வது ரிஷபாரூட மூர்த்தி. திருக்கோயில் திருவிழாக்களில் பெருமானது, ரிஷப வாகனக் காட்சி காண அடியார்கள் காத்து நிற்பர். ‘‘பிரம்மோற்சவத்தில் நாலாம் திருநாள் அன்று ரிஷப வாகனம்; அவசியம் சென்று தரிசிக்க வேண்டும்!’’ என்று மக்கள் சொல்லக் கேட்டிருப்போம். திருவீதி உலாவில் ரிஷபாரூடக் காட்சியே மிகவும் போற்றி வழிபடப் பெறுகிறது. இறைவன், இறைவியோடு இடப வாகனத்தில் பவனி வருவதில் ஒப்பற்ற ஒரு தத்துவம் பொதிந்துள்ளது. கருணையே திருமேனியாகக் கொண்ட அம்பிகையோடு, எம்பெருமான், அறத்தின் வடிவமான ரிஷபத்தின் மீது எழுந்தருளி, உயிர்களை நோக்கி வரும் எளிமையையும், பெருங்கருணையையும் இந்தக் கோலம் காட்டுகிறது. அறத்தை நிலைநிறுத்த வரும்போது இடபத்தின் மேல், அருட் சக்தியாகிய அன்னையோடு அவர் அமர்ந்து வருதல் பொருத்தமே! கோளறு பதிகத்தில், மடவாள் தனோடும் விடை ஏறும் எங்கள் பரமன்’, உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்’, ‘பல பல வேடமாகும் பரன்நாரிபாகன் பசுவேறும் எங்கள் பரமன்’ என்று இந்த வடிவை திருஞானசம்பந்தர் போற்றுவது குறிப்பிடத் தக்கது. தாரகாசுரனின் மைந்தர் மூவர்: வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன். இவர்கள் முறையே தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆன கோட்டைகளை அமைத்துக் கொண்டு உலகுக்குத் தொல்லை கொடுத்தனர். தேவர்கள் கூடி முயன்றும் இவர்களை அழிக்க முடியவில்லை. அவர்கள் சிவபிரானிடம் சரண் புகுந்தனர். அதற்காக ஒவ்வொருவரும் தமது ஆற்றலில் பாதியைப் பெருமானுக்கு அளிக்க முன்வந்தனர். அவர்களது எண்ணம், எப்படியாவது மூன்று அசுரர்களையும் முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்பதே. அனைவரும் சேர்ந்து ஒரு தேரை உருவாக்கினர். முதன் முதலாகக் கூட்டணி அமைத்தவர் சிவபெருமானே! சூரிய- சந்திரர்கள் சக்கரமாகவும், பூமியைத் தேராகவும், மேரு மலையை வில்லாகவும் கொண்டு போருக்குப் புறப்பட்ட சிவபெருமான் தேரில் ஏறினார். ‘தமது உதவி இல்லையேல் சிவபெருமான் முப்புரங்களை அழிக்க இயலுமா?’ என தேவர்கள் நினைத்தனர். அவர் தம் எண்ணம் அறிந்து இறைவன் புன்முறுவலித்தார். தேரும் முறிந்தது; முப்புரமும் எரிந்தது! உடனே திருமால் ரிஷப வடிவம் கொண்டு சிவ பெருமானைத் தாங்கினார் என்கிறது திருமுறை. இந்த ரிஷப வாகனத்தில் சிவபெருமான் உமையோடு ஆரோகணித்ததால், அவருக்கு ‘ரிஷபாரூட மூர்த்தி’ என்று பெயர் என்கிறது சிவபராக்ரமம் நூல். இந்த வடிவ அம்பிகை ‘தர்மசித்திப்பிரதாயினி’ எனப்படுகிறார். தட மதில்கள் மூன்றும் தழல் எரித்த அந்நாளில் இடப மதாய்த் தாங்கினான் திருமால் காண் சாழலோ என்று இந்த நிகழ்ச்சியை திருவாசகத்தில் போற்றுகிறார் மாணிக்கவாசகர். ‘சிவபெருமான் பின் இரு கரங்களில் மான்- மழு ஏந்தி, இடப் புறம் உமாதேவியுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்திருப்பார். வலப் பக்கத்தில் மடியில் கணபதியை அணைத்தபடி கடக ஹஸ்தம் மற்றும் வலக் கரத்தில் ஜபமாலையுடன் காட்சியளிக்கும் தோற்றம் ரிஷபாரூடர்!’ என்கிறது ஸ்ரீதத்வநிதி எனும் சிற்ப நூல். இது வித்தியாசமாக உள்ளது. இந்த மூர்த்தியை வணங்குபவருக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்றும் அது குறிப்பிடுகிறது. |
Friday, 8 September 2017
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 9
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment