சென்னைக்கு விஜயம் செய்த சபரிமலை ஐயப்பன்!
அம்பாளின் திருநாமம் ஸ்ரீசௌந்தராம்பிகை. திருநாமத்துக்குத் தகுந்தாற்போல், அழகு ததும்ப ஒய்யாரமாகக் காட்சி தருகிறாள் தேவி. இந்தத் தலத்தில், உமையவளுடன் ஸ்ரீலட்சுமியையும் ஸ்ரீசரஸ்வதியையும் ஒருசேரத் தரிசிக்கலாம். கருவறையில், மூலவர் ஸ்ரீகச்சாலீஸ்வரர் லிங்கத் திருமேனியாக இருக்க, அவருக்குப் பின்னே, ஐந்து முகங்களுடன் ஸ்ரீசதாசிவமாக தேவி ஸ்ரீமனோன் மணியுடன் திருக்காட்சி தருகிறார் சிவனார். இவர்களை வணங் கினால், நம் பாவங்கள் யாவும் பறந்தோடும்!
மேலும் 12 ராசிகள், 28 நட்சத்திரங்கள், 60 வருடங்கள், 4 யுகங்கள், அஷ்டதிக் பாலகர்கள்... என மண்டப விதானத்தில் உள்ள சிற்பங்களும், ஸித்தி-புத்தியுடன் அருளும் ஸ்ரீபஞ்சமுக கணபதி தரிசனமும் இந்த ஆலயத்தின் சிறப்பம்சங்கள்! நவக்கிரகங்களில் நடுநாயகமாகத் திகழும் சூரியனாரும் தேவியருடன் அருள்கிறார். ஆலயத் தூண் ஒன்றில் அருளும் அனுமனும் வரப்ரசாதி!
அப்பப்பா... அழகுச் சிற்பங்களையும் ஆலய சாந்நித்தியத்தையும் வியந்தபடி பிரதட்சணத்தைத் தொடர்ந்தால், மேலும் ஒரு சிலிர்ப்பு காத்திருக்கிறது. அது, சுவாமி ஐயப்பனின் தரிசனம். சின்முத்திரையுடன் அருள்கோலம் காட்டுகிறான் ஐயப்பன்; பொன்னாய் மணியாய் ஜொலிக்கும் அவன் திருமுகமும், அது காட்டும் புன்னகையும்... இப்போதே இக்கணமே என்னைச் சரண் அடையுங்கள் எனச் சொல்லாமல் சொல்கிறது!
சுமார் 60 வருடங்களுக்கு முன்பு, சபரிமலை தேவஸ்தானத் தில் இருந்த ஸ்ரீஐயப்ப ஸ்வாமியின் விக்கிரகத்தை சிலர் பின்னப் படுத்தியதையும், அதன் பிறகு வேறொரு ஐயப்ப விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ததையும் அறிவோம். அப்படி புதிதாகப் பிரதிஷ்டை செய்த ஐயப்ப விக்கிரகத்தை, ஒவ்வொரு தலங்களிலும் வைத்து பூஜை செய்தனர். சென்னையில் வைத்து பூஜிக்கப்பட்டது, இந்தக் கோயிலில்தான்! இதன் பிறகு அந்த விக்கிரகத்தை எடுத்துச் சென்று, சபரிமலையில் பிரதிஷ்டை செய்தனர்! இதையடுத்து, ஐயப்பனின் பெருமை களை அறிந்து, மதராஸ் ஐயப்ப சேவா சங்கம் மற்றும் ஐயப்ப சேவா சங்கம் ஆகியன உருவானது. சபரிமலை ஸ்ரீஐயப்ப ஸ்வாமியை வைத்து மூன்று நாட்கள் பூஜை செய்து வழிபட்ட அதே கோயிலில், அடுத்த வருடமே புதிதாக ஸ்ரீஐயப்ப விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்றளவும் சிறப்புற வணங்கி, வழிபடப்பட்டு வருகிறதாம். இந்த வருடத்துடன் சுமார் 60 வருடங்கள் நிறை வடைகிறது எனப் பூரிக்கின்றனர் நிர்வாகிகள்.
வருடந்தோறும் ஜனவரி மாதத்தில் விமரிசையாக விழா நடைபெறுகிறது. தினமும் சிறப்பு அபிஷேக- ஆராதனைகள், பஜனைப் பாடல்கள் என அமர்க்களப்படும் விழா, மகர தீப நன்னாளில் நிறைவுறுமாம். சபரிமலையில் தருகிற நைவேத்தியப் பிரசாதங்கள் மற்றும் சந்தனக் காப்பு, லட்சார்ச்சனை என அந்த நாட்களில் ஆலயம் அமர்க்களப்படும்!
அதேபோல், ஐயனுக்கு நிகழும் 1008 கலசாபிஷேகம் மற்றும் புஷ்பாபிஷே கத்தை காணக் கண்கோடி வேண்டும். பஞ்ச வாத்தியங்கள் முழங்க, ஸ்ரீஐயப்ப ஸ்வாமியை இங்கே சென்னையில் தரிசிக்கிறோமா அல்லது சபரிமலையில் தரிசிக்கிறோமா எனும் அளவுக்குப் பிரமாதமாக நடைபெறும் மகர தீபப் பெருவிழா. சபரிமலை போலவே, இங்கும் திருவாபரண ஊர்வலம் விமரிசையாக நடைபெறும்.
No comments:
Post a Comment