Friday, 8 September 2017

ரம்பை - ஊர்வசி வழிபட்ட தலம்

ஞ்சள் நகரம் எனப் புகழப்படும் ஈரோடு மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோயில். அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த ஆலயத்துக்கு வந்து ஒருமுறை வணங்கினால் போதும்... நம் வாழ்க்கையையே ஒளிமயமாக மாற்றிவிடுவார், சிவனார் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.
ஆருத்ரம் என்றால் ஈரம் என்றும், கபாலம் என்றால் ஓடு என்றும், அதுவே பின்னாளில் ஈரோடு என்று இந்தத் தலத்தின் பெயராக அமைந்தது எனச் சொல்கிறது ஸ்தல புராணம்.
தேவலோக நங்கையரான ரம்பையும் ஊர்வசியும் ஒருமுறை  நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த தேவகுரு பிரகஸ்பதியைக் கண்டுகொள்ளாமல் அவர்கள்பாட்டுக்கு ஆடிக்கொண்டிருந்தார்கள். இதைக் கண்டு கோபாவேசமானார் பிரகஸ்பதி. ரம்பை மற்றும் ஊர்வசி ஆகிய இருவரும் பூமியில் பிறக்கக்கடவது என்று சபித்தார்.
இதைக் கேட்டு இருவரும் துடித்தார்கள். 'குருவை நிந்தித்தது தவறு’ என்பதை உணர்ந்து, தேவகுருவிடம் மன்னிப்புக் கேட்டார்கள்.
''பூலோகத்தில் பூந்துறை எனும் தலத்தில் பிறந்து, சிவ- பார்வதியை நினைத்து 12 வருடங்கள் கடும் தவம் மேற்கொள்ளுங்கள். சாப விமோசனம் பெற்று, மீண்டும் இந்திரலோகம் வருவீர்கள்'' என அருளினார் பிரகஸ்பதி.
அதையடுத்து பூந்துறை தேசத்தில் ரம்பையும் ஊர்வசியும் பிறந்து, சிறுநல்லாள்- பெருநல்லாள் ஆகிய பெயர்களில் சிவ- பார்வதியை நினைத்துக் கடும் தவம் மேற்கொண்டனர். இதில் மகிழ்ந்த சிவனார், 12-வது வருடம் அவர்களுக்கு முன்னே திருக்காட்சி தந்து அருளினார். அதன்பின்னர் ரம்பையும் ஊர்வசியும் தேவலோகம் சென்றடைந்தனர் என்கிறது ஸ்தல புராணம்.
ரம்பையும் ஊர்வசியும் வழிபட்ட அந்தத் திருவிடத்தில் பின்னாளில் கோயில் அமைக்கப்பட்டது. அங்கே, அனைவருக்கும் அருளையும் பொருளையும் அள்ளி வழங்கி வருகிறார் ஸ்ரீவாரணாம்பிகை சமேத ஸ்ரீஆருத்ர கபாலீஸ்வரர்.
ஸ்ரீமூல விநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீகல்யாண சுப்ரமணியர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீதுர்கை ஆகியோரும் இங்கு தனிச்சந்நிதியில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர்.  
மாத சிவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை மற்றும் பிரதோஷ நாட்களில் இங்கு வந்து சிவ- பார்வதிக்கு வஸ்திரம் சார்த்தி, வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும்; வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கப்பெறுவர் என்பது ஐதீகம்!
பிரதோஷ வேளையில் இங்கு வந்து நந்திதேவருக்கு பால், தயிர், விபூதி, சந்தனம், திரவியப்பொடி, பன்னீர், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வழிபட்டால், தீராத நோயும் தீரும்; மனதுள் நற்குணங்கள் பெருகும்; எதிரிகள் தொல்லை ஒழியும் என்கின்றனர் பக்தர்கள்.

No comments:

Post a Comment