ஐப்பசி அன்னாபிஷேகம்...
மன்னார்குடி என்றதும் ஸ்ரீராஜகோபால ஸ்வாமி திருக்கோயில்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அதே ஊரில், ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேதராக இருந்து அனைவருக்கும் அருள்மழை பொழிந்து வருகிறார் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் என்பது தெரியுமா?
இங்கே... ஸ்ரீபால காமாட்சியாக, ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டையுடன் கருணை பொங்கக் காட்சி தருகிறாள் ஸ்ரீகாமாட்சி அம்பாள். காசியம்பதியில் இருந்து கொண்டுவந்து பிரதிஷ்டை செய்த சிவலிங்கத் திருமேனி அமைந்துள்ளது. எனவே, இதை காசிக்கு நிகரான தலம் எனப் போற்றி, பித்ரு காரியங்களை கோயில் அருகில் நிறைவேற்றிச் செல்கின்றனர் பக்தர்கள்.
இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... ஸ்ரீகாளியும் ஸ்ரீதுர்கையும் அருகருகில் காட்சி தருவதுதான். பட்டீஸ்வரம் தலத்தைப் போலவே இங்கேயுள்ள ஸ்ரீதுர்கை காட்சி தருவது சிறப்பு. மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமையில், ஸ்ரீதுர்கைக்கு தயிர்ப்பாவாடை சார்த்தி வழிபாடு நடைபெறுகிறது.
ஐப்பசி அன்னாபிஷேகம் சிறப்புற நடைபெறும் கோயில்களில் இதுவும் ஒன்று. பக்தர்கள் வழங்குகிற அரிசி காணிக்கையைக் கொண்டு சாதமாக்கி, சிவலிங்கத் திருமேனிக்கு சார்த்துகின்றனர். அதேபோல், பக்தர்கள் தங்களுக்கு இஷ்டமான காய்கறிகளையும் வழங்குகின்றனர். அவற்றைக் கொண்டு சிவனாரை அலங்கரிக்கின்றனர். அதைக் காணக் கண் கோடி வேண்டும்!

சிவனாருக்கு அபிஷேகித்த சாதப் பிரசாதத்தை காக்கைக்கு சிறிதளவு வழங்கிவிட்டுச் சாப்பிட்டால், பித்ருக்களின் ஆசீர்வாதமும் இறைவனின் பேரருளும் ஒருசேரப் பெறலாம் என்பது ஐதீகம். இந்தப் பிரசாதத்தைப் பெறுவதற்காகவே, அன்னாபிஷேக நாளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர். இந்தப் பிரசாதத்தை வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டால், இல்லத்தில் தரித்திரம் வெளியேறும்; சகல ஐஸ்வரியங்களும் குடியேறும் எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.
இந்தக் கோயிலில், தெற்கு நோக்கி அருளும் ஸ்ரீஅனுமனும் விசேஷம். இவரை வழிபட தீவினைகள் யாவும் நீங்கும்.
No comments:
Post a Comment