Friday, 8 September 2017

பிரம்மன் வழிபட்ட திருத்தலம்!

சோகம் போக்கும் யோக நரசிம்மர்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது வந்தவாசி. சென்னையில் இருந்து சுமார் 96 கி.மீ. தொலைவிலும் திருவண்ணாமலையில் இருந்து சுமார் 77 கி.மீ. தொலைவிலும் உள்ளது இந்த ஊர்.
இங்கிருந்து நல்லூர் செல்லும் சாலையில், சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சோகத்தூர். இந்த அழகிய கிராமத்தில், அற்புதமாகக் காட்சி தந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீயோக நரசிம்மர்.
வேதத்தை அசுரர்களிடம் பறிகொடுத்த ஸ்ரீபிரம்மா, லக்ஷ்மி ஸரஸ் எனும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, மகாவிஷ்ணுவை நோக்கிக் கடும் தவம் இருந்தார். இதையடுத்து அவருக்கு திருக்காட்சி தந்து அருள்பாலித்தார் திருமால். பிரம்மனின் சோகம் போக்கிய திருத்தலம் என்பதால், இந்தத் திருவிடம்... சோஹாபஹத்ருபம் என அழைக்கப்பட்டது. பிறகு சோகத்தூர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
இந்தத் தலத்தில்தான் அருளும் பொருளும் அள்ளித் தரும் கருணாமூர்த்தியாக கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி. கிழக்கு நோக்கியபடி காட்சி தரும் ஸ்ரீநரசிம்மர், தன் உக்கிரத்தையெல்லாம் விட்டுவிட்டு, தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தருகிறார்.
இங்கே தாயாரின் திருநாமம் - ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார். திருமணத் தடையால் கலங்குவோர், இங்கு வந்து ஸ்ரீஅமிர்தவல்லித் தாயாருக்கு புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால், திருமணத் தடைகள் நீங்கி, விரைவில் நல்ல வரன் அமையும் என்பது ஐதீகம்!  
இந்தத் தலத்தில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயரும் விசேஷமானவர். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஸ்ரீஅனுமனுக்கு வெற்றிலை மாலை அல்லது வடை மாலை சார்த்தி, 11 முறை வலம் வந்து பிரார்த்தித்தால்... எதிரிகள் தொல்லை ஒழியும்; மனதுள் தைரியம் பிறக்கும் என்கின்றனர் பக்தர்கள்!
மாதந்தோறும் சுவாதி நட்சத்திர திருநாளில், ஸ்ரீநரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனைகள், பூஜைகள் நடைபெறும். இந்த நாளில் இங்கு வந்து, ஸ்ரீநரசிம்மரை கண்ணாரத் தரிசித்து பிரார்த்தனை செய்தால், வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
குறிப்பாக, சுவாதி நட்சத்திரக்காரர்கள், அந்த நாளில் வந்து வணங்குவது, கூடுதல் பலனைத் தரும்!
திருமணத் தடை மற்றும் தோஷங்கள் உள்ளவர் கள், இங்கேயுள்ள லக்ஷ்மிஸரஸ் தீர்த்தக் குளத்தில் நீராடி, ஸ்ரீநரசிம்ம ஸ்லோகத்தைச் சொல்லி, பானக நைவேத்தியம் செய்து மனமுருகி வழிபட்டால், விரைவில் நல்லது நடக்கும். திருமண வரம் கைகூடும். தோஷங்கள் விலகி, சந்தோஷமும் நிம்மதியும் நிலைத்திருக்கும்!  
தொடர் நஷ்டம் மற்றும் வழக்கில் இழுபறி நிலை என கண்ணீர் விடும் அன்பர்கள், நோயால் துன்பப்படும் அன்பர்கள் இந்த புண்ணியத் தலத்துக்கு வந்து, ஸ்ரீயோக நரசிம்மருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிறப்பு ஹோமம் செய்து வழிபட்டால்... வியாபாரம் விருத்தியாகும்; தேக ஆரோக்கியம் கூடும் என்கின்றனர் பக்தர்கள்!  

No comments:

Post a Comment