ஸ்ரீராமர் பூஜித்த சிவனார்
மனைவி சீதாதேவியைத் தேடி வந்தபோது, இலுப்பை மரங்களும் நெல்லி மரங்களும் சூழ்ந்த இந்த வனப்பகுதிக்கு வந்தார் ஸ்ரீராமர். அங்கே ஒரு நெல்லி மரத்தடி வேர்ப் பகுதிக்குள் சிவலிங்கத் திருமேனி இருப்பதை அறிந்த ஸ்ரீராமர், 'அடடா... சிவனாரின் சிரசில் பாதத்தை வைத்துவிட்டேனே...’ என வருந்தியபடி, அங்கேயே சிவபெருமானை எண்ணி தவமிருக்கத் துவங்கினார். அப்போது, பூமிக்குள்ளிருந்து வெளிப்பட்டது சிவலிங்கம். பிறகு சிவ - பார்வதியின் அற்புதத் தரிசனமும் கிடைக்கப் பெற்றார் ஸ்ரீராமர்.
அவருக்கு, 'தென்திசை நோக்கிச் செல். சீதை கிடைப்பாள்’ என வழிகாட்டி அருளினார் சிவனார். ஸ்ரீராமருக்கு அருள்பாலித்த இறைவன், ஸ்ரீராமநாதீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டு, அங்கேயே கோயில் கொண்டார் என்கிறது ஸ்தல புராணம். அழகிய சிற்ப வேலைப்பாடுகளும் அழகு மண்டபங்களும் கொண்டு திகழ்கிறது ஆலயம். மூலவர் ஸ்ரீராமநாதீஸ்வரர், சுமார் ஆறடி உயரத்தில் மிகப் பிரமாண்ட லிங்கத் திருமேனியராக அருள்கிறார்.
ராவணனைக் கொன்ற தோஷம் நீங்க ஸ்ரீராமர் வழிபட்ட தலம், ராமேஸ்வரம் என்றானது. ஸ்ரீராமர் வழிபட்ட இந்தத் தலத்தை உத்தர ராமேஸ்வரம் என்கின்றனர் பக்தர்கள். எனவே, ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீராமநாதீஸ்வரை வணங்கித் தொழுதால், முன்னோர்களின் ஆசீர்வாதமும் இறையருளும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!
இங்கு அம்பாளின் திருநாமம் ஸ்ரீசிவகாமசுந்தரி. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீபைரவர் மற்றும் வாகனங்களுடன் கூடிய நவக்கிரகங்கள் ஆகியோருக்கும் இங்கு சந்நிதிகள் உள்ளன.
இறைவன் குருவாக இருந்து ஸ்ரீராமருக்கு வழிகாட்டிய திருத்தலம் என்பதால், குரு பகவானுக்கு உரிய சிறப்பு பூஜைகள் அனைத்தும் சிவனாருக்குச் செய்யப்படுகிறது. எனவே, ஸ்ரீராமநாதீஸ்வரரை வணங்கினால், இறையருளுடன் குருவருளும் கிடைக்கப் பெறலாம். ஆலயத்தின் வேப்பமரத்தடியில் உள்ள நாகர் விக்கிரகங்கள் சக்தி வாய்ந்தவை. இந்த விக்கிரகங்களை வணங்கினால், நாக தோஷங்கள் யாவும் விலகும்; திருமணத் தடை அகலும். கோயிலின் தல விருட்சம் நெல்லி. இந்த மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தால், ஞானம் பெறலாம் என்பது ஐதீகம்.
தொடர்ந்து 10 வியாழக்கிழமைகள் இங்கு வந்து, ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு நெய் தீபமேற்றி வழிபட்டு, 11-வது வியாழக்கிழமை அன்று, நெய்தீபம் ஏற்றுவதுடன் தயிர்சாதம் மற்றும் சுண்டல் நைவேத்தியம் செய்து வணங்கினால், வழக்கு முதலான பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். வைணவக் கோயில்களைப் போன்று தீர்த்தம் வழங்கி, சடாரி சார்த்துவது இங்கே வழக்கம்!
No comments:
Post a Comment