Wednesday, 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 9


                                           மூங்கில் மகிமை
கேதுத் தேவே கீர்த்தித் திருவே 
பாதம் போற்றி, பாவம் தீர்ப்பாய்! 
வாதம் வம்பு வழக்குக ளின்றி 
கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி!
கேது ஸ்துதி
பிற்காலச் சோழர்களின் ஆட்சியின்போது, சோழவள நாட்டில் எண்ணற்ற கோயில்கள் எழுப்பப்பட்டன. அவற்றுள், நாகை மாவட்டம்- கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள ஸ்ரீநாகநாத ஸ்வாமி கோயிலும் ஒன்று. சீர்காழியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தலம், கேது பரிகாரத் தலமும்கூட!
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக மந்திர மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அப்போது வலி பொறுக் காமல், வாசுகிப் பாம்பு விஷத்தைக் கக்க, தேவ-அசுரர்கள் அலறித் துடித்து, சிவபெருமானைத் தஞ்சம் அடைந்தனர். அவர்களைக் காப்பாற்றஎண்ணிய சிவனார், விஷத்தைத் தாமேபருகினார்.
அருகில் இருந்த பார்வதிதேவி பதறியபடி, சிவனாரின் கழுத்தைப் பிடித்துக்கொண்டாள். இதனால் விஷம் சிவனாரின் கண்டத்திலேயே தங்கிவிட, அவருக்கு நீலகண்டர் எனும் திருநாமம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, பாற்கடலில் அமிர்தம் வெளிப்பட... திருமால் மோகினியாக வந்து அந்த அமிர்தத்தை தேவர்களுக்குப் பகிர்ந்தளித்தார். அப்போது அசுரன் ஒருவன், அசுரகுரு சுக்ராச்சார்யரின் துணையுடன், தேவர் களில் ஒருவனாக வடிவம் எடுத்துவந்து மோகினியாளிடம் அமிர்தம் வாங்கிப் பருகினான். அதையறிந்த சூரிய- சந்திரர்கள், அசுரனின் வஞ்சகத்தைத் திருமாலிடம் தெரிவித்தனர். கோபம் கொண்ட திருமால், கையில் இருந்த கரண்டியால் அசுரனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் தலைவேறு, உடல்வேறாக அசுரன் வெட்டுப்பட்டு வீழ்ந்தபோதும், அமிர்தம் பருகியிருந்த தால் சாகவில்லை. அவனின் தலைப் பகுதி, பாம்பின் உடலுடன் பொருந்தி ராகுவாகவும், உடல் பகுதி பாம்பின் தலையுடன் பொருந்தி கேதுவாகவும் ஆனதாகச் சொல்கிறது புராணம்.
பாற்கடலைக் கடைந்தாயிற்று; அமிர் தமும் வந்தது. ஆனால், அது நமக்குக் கிடைக்கவில்லையே எனும் கோபத்தில், அசுரர்கள் வாசுகிப் பாம்பை வைக்கோல் பழுது போலத் தூக்கி வீசிவிட்டனர். அது, ஒரு மூங்கில் காட்டில் போய் விழுந்தது. உடல் நைந்து, உயிர் போகும் நிலையில் இருந்த அந்தப் பாம்பு, உயிருக்குப் போராடிப் பிழைத்தது. எனினும், 'தன்னால்தானே சிவனார் விஷம் அருந்த நேர்ந்தது' என வருந்தி, தனது பாவத்துக்குப் பரிகாரம் தேடி, சிவனாரை வேண்டித் தவம் இருந்தது.
அதன் தவத்துக்கு மனமிரங்கிய சிவனார், அந்தப் பாம்புக்கு காட்சி தந்தார். ''கேது தோஷத்துடன் வருந்தும்
மக்கள், இந்த மூங்கில் வனத்துக்கு வந்து வணங்கினால், அவர்களின் தோஷங்களை நிவர்த்தி செய்து அருளுங்கள். இதுவே, நான் செய்த பாவத்துக்குப் பரிகாரமாக அமையட் டும்'' என வேண்டியது வாசுகிப் பாம்பு. 'அப்படியே ஆகட்டும்' என்ற ஈசன், அந்த மூங்கில் வனத்திலேயே லிங்க வடிவமாக எழுந்தருளினார். இதனால், இறைவனுக்கு ஸ்ரீநாகநாத ஸ்வாமி எனும் திருநாமம் உண்டானதாம்; அம்பாளின் திருநாமம்- ஸ்ரீசௌந்தர நாயகி. அற்புதமான இந்த ஆலயத்தில், மேற்கு நோக்கி அருள்கிறார் ஸ்ரீகேதுபகவான்.
இந்த ஆலயத்தின் ஸ்தல விருட்சம் - மூங்கில். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம், சிதம் பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு அருகில் திருவேட்களம்- ஸ்ரீவேணுவனநாதர் கோயில், சீர்காழி ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம் போன்ற தலங்களிலும் மூங்கில் மரமே ஸ்தல விருட்சம்.
பெருமூங்கில் என்பது சுமார் 60 வருடங்கள் வரை வளர்ந்த பிறகே பூக்கும். இந்த மலரை 'ஆய் மலர்' எனக் குறிப்பிடுகிறார் நக்கீரர். 'விரி மலர் ஆவிரை வேரல் ஆரல்' என குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடுகிறார் கபிலர். கூத்தர், பாணர் ஆகியோரை ஆற்றுப்படுத்திய பெரும்கௌசிகனார், ''வழுக்கக்கூடிய வழியில் செல்லும்போது, அங்கே வழி முழுவதும் பின்னி வளர்ந்த நுண்ணிய கோல்களைக் கொண்ட சிறு மூங்கிலோடே, வேழத்தினது மெல்லிய கோல்களையும் பற்றுக் கோடாகப் பிடித்துக்கொண்டு போவீராக!'' என்று அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார். சங்க இலக்கியங்களில் மூங்கில், 'உந்தூழ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 50 வருடங்கள் வரை வளருமாம் மூங்கில்! இதன் இலைகள், வேர், விதைகள், மரத்தின் உள்ளே உள்ள வெள்ளை நிற உப்பு ஆகியன மருந்தாகப் பயன்படுகின்றன. வயிறு மற்றும் வாய்ப்புண்களுக்கும், உடல் உஷ்ணம், விட்டுவிட்டு வரும் ஜுரம் மற்றும் பித்தத்தால் உண்டாகும் ஜுரம் ஆகியவற்றைக் குணப் படுத்தும் வல்லமை மூங்கில் உப்புக்கு உண்டு. ஆடும் பற்களை உறுதிப்படுத்தவும் இது பயன்படுகிறது. இன்னொரு விஷயம்... இந்த உப்பை, மருத்துவரின் ஆலோசனைப்படி, ஒரு கிராமில் இருந்து எட்டு கிராம் வரை பயன்படுத்தலாம். அதற்கும் அதிகமாகப் பயன்படுத்தினால், ஆண்மைத்தன்மையும் நுரையீரலும் பாதிப்படையும் அபாயம் உண்டு!
அம்மை நோயால் உண்டான புள்ளிகளை அகற்று வதற்கு, மூங்கிலின் வேரை தனித்தோ அல்லது உரிய மருந்துகளுடன் கலந்தோ பயன்படுத்தலாம். இதன் வேரை எரித்துப் பவுடராக்கி சொட்டைத் தலை, சொறி மற்றும் சிரங்கு உள்ள இடத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். வாயுத் தொல்லை மற்றும் வயிற்றுவலியால் அவதிப் படுபவர்கள், மூங்கில் இலைகளைக் கஷாயமாக்கிப் பருகினால் நிவாரணம் பெறலாம். மாதவிடாய்க் கோளாறுகளால் அவதிப்படுபவர்களும் இதனைப் பயன்படுத்திப் பலனடையலாம். மூங்கிலின் துளிர் இலைகளைக் கஷாயமாக்கி உட்கொள்ள, நாக்குப் பூச்சிகள் அழியும்; ரத்த வாந்தி எடுப்பது நிற்கும்; நாள்பட்ட அல்சர் புண்கள் முற்றிலும் ஆறும்; மூட்டு வலியையும் போக்க வல்லது எனப் போற்றுகின்றனர் மருத்துவர்கள். சர்க்கரை நோய்க்காரர்கள், மூங்கிலின் விதைகளைப் பயன்படுத்தினால், சர்க்கரை நோய் கட்டுப்படுமாம்.
பொதுவாக, எந்த வைத்திய முறையானாலும், தானே எடுத்துக்கொள்ளாமல், அதில் அனுபவம் உள்ள மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்வதே நல்லது!
பல வண்ண வஸ்திரம் பிடிக்கும்!

''கேது பகவான் குறித்து, வேதத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற கிரகங்களுக்கு இல்லாத பெருமை இது'' .
''கேது பகவானை வழிபட்டால் தோஷம் நீங்குவதுடன், ஸ்வர்ண சம்பத்தை அடையலாம். வெளிநாட்டில் வேலை, கடின உழைப்பு, ஞானம், மோட்சம் ஆகியவற்றையும் அருளுவார். கேதுவுக்குப் பல வண்ணங்கள் கொண்ட வஸ்திரம்தான் இஷ்டம். பிடித்த தானியம் - கொள்ளு.
ஆகவே, கொள்ளு தானம் செய்து, பல வண்ணங்கள் கொண்ட வஸ்திரத்தை கேது பகவானுக்குச் சார்த்தி, கொள்ளுப் பொடி கலந்த அன்னத்தை நைவேத்தியம் செய்து வழிபட... நல்லது நடக்கும்; வாழ்க்கையில், கேதுகாரகன் துணை நிற்பார்!
ஜாதகத்தில் இவரின் நிலை சரியில்லை எனில், கெட்ட சிநேகிதம், மயக்கம், தோல் நோய், தீராத வலி, ஜுரம், சட்டச் சிக்கல்கள் எனப் பல பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும்.
கேதுவின் தசைக்காலம் என்பது ஏழு வருடங்கள்! அஸ்வினி, மகம் மற்றும் மூலம் ஆகியவை கேதுவுக்கு உரிய நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரக்காரர்களுக்கு, முதலில் கேது தசை துவங்கும். இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், கேதுவால் உண்டான தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்!'' .
- விருட்சம் வளரும்

No comments:

Post a Comment