Sunday 22 October 2017

முதல் வணக்கம் முதல்வனுக்கே! - 9

சிவத் தலங்களை பலவற்றையும் தரிசித்து மகிழ்ந்த சுந்தரரும் சேரமான்பெருமாள் நாயனாரும், அடியார் பலர் சூழ, காவிரி தென்கரையில் உள்ள திருக்கண்டியூருக்கும் வந்து வழிபட்டார்கள். அங்கிருந்து காவிரியைக் கடந்து, அதன் வடகரையில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு ஐயாறப்பரையும் தொழ எண்ணினார் சுந்தரர். சேரமான்பெருமாள் நாயனாருக்கும் அதே விருப்பம். ஆனால், ஆற்றில் கரைபுரண்டு ஓடியது வெள்ளம்! என்ன செய்வது?
சுந்தரருக்குத்தான் ஒரு வழி தெரியுமே! தம்பிரான் தோழர் அல்லவா அவர். அழைத்தார் எம்பெருமானை!
''உம்மை வணங்கும் முறையைச் சிறிதும் அறியேன். முன் இருப்பவனும் நீ; பின் இருப்பவனும் நீ. அனைத்துக்கும் முதல்வன் நீயே! மிகுந்த பசியை உடையவன், நெற்கதிர்களைக் கண்டதுபோல், உம்மைக் கண்டேன். எனினும், நெல்லைக் கண்டவன் உடனே உணவைக் காண முடியாததுபோல் (அதனைக் குத்தி அரிசியாக்கி உணவாக்கினால்தானே உண்ண முடியும்), அக்கரையில் உள்ள உன் கோயிலைக் கண்ட அடியேன், நின்னைக் காணேன் ஆயினன். ஆற்றில் எதிரேறி நீந்தவும் இயலாது. என் செய்வேன்?'' என்று உள்ளம் உருக, ஆற்றின் மறு கரையில் இருக்கும் ஸ்ரீஐயாறப்பரை நோக்கி ஒரு பதிகம் பாடினார்; ஒவ்வொரு பாட்டின் முடிவிலும், 'ஐயாறுடைய அடிகளோ... அடிகளோ’ என்று ஓலமிட்டார், சுந்தரர்.
சுந்தரரின் ஓலம் ஸ்ரீஐயாறப்பன் செவியில் விழுந்தது. உடனே, தம்முடைய மூத்த மகனான விநாயகரை அழைத்து, எதிர் ஓலம் கொடுக்கும்படி பணித்தார். அதன்படியே திருவையாறில் அருளும் விநாயகரும் 'ஓலம்... ஓலம்... ஓலம்...’ என்று பதிலுக்கு ஓலமிட்டார். அவ்வளவுதான்... காவிரியின் நீரோட்டத்தில் தடை ஏற்பட்டது; ஆற்றின் நடுவே பாதை தெரிந்தது! சேரமான் நாயனார் மகிழ்ந்தார்; சுந்தரரை வாயாரப் புகழ்ந்தார். சுந்தரரோ, ''இது எமக்காக அல்ல! உம்பர் நாதன் தேவ தேவன் உமக்கு அளித்த வழி!'' என்றார்.
அனைவரும் ஆற்றைக் கடந்து சென்று, ஐயாறுடைய இறைவனை மனம், மொழி, மெய்யால் வணங்கி மகிழ்ந்தனர். பிறகு, மீண்டும் காவிரியின் நடுவில், முன்வந்த வழி யிலேயே தென்கரைக்கு வந்து சேர்ந்தனர். அதுவரை ஓடாதிருந்த காவிரி, மீண்டும் பெருக்கெடுத்துப் பாய்ந்தாள்! சுந்தரரின் செந்தமிழுக்காக இறைவன் காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தினார் என்றால், அதன் பெருமைதான் என்னே!
தென்கயிலாயமாகப் போற்றப்படும் தலம் திருவையாறு. வடவாறு, வெண்ணாறு, சம்புகாவிரி, வெட்டாறு, குடமுருட்டி ஆகிய கிளை ஆறுகள் ஐந்தும், சோழநாட்டில் இந்த எல்லையில் (திருவையாறு) துவங்கு வதால், தலைமையான காவிரி ஆறு 'ஐயாறு’ எனப் பெயர் பெற்றது. ஐ- என்றால் முதன்மை, தலைமை என்றெல்லாம் பொருள். 'காவிரிக் கோட்டத்து ஐயாறுடைய அடிகள்’ எனப் போற்றுகிறார் சுந்தரர். தேவார மூவரும் போற்றிய இந்தத் தலத்தின் இறைவனுக்கு ஸ்ரீஐயாறப்பர், செம்பொற் சோதீச்வரர், பஞ்சநதீச்வரர் ஆகிய திருநாமங்களும், அம்பிகைக்கு ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி, ஸ்ரீதர்மசம்வர்த்தினி என்ற திருப்பெயர்களும் வழங்கப் படுகின்றன.
தென் கயிலாயம், இறைவன் தம்மைத் தாமே பூசித்த திருத்தலம், சப்தஸ்தானம் எனும் ஏழூர்த் திருவிழாவால் புகழ்பெற்ற ஊர், அப்பரின் 76-வது வயதில், அவருக்கு இறைவன் திருக்கயிலாயக் காட்சி அளித்ததால் பெருமை பெற்ற திருவிடம்... எனப் பல்வேறு சிறப்புகள் உண்டு திருவையாறுக்கு! சங்கீத மும்மணிகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்து, ராமபிரானின்  திருவடிகளில் கலந்த தலமும் இதுவே. இங்கு, அவரது சமாதியில் ஆண்டுதோறும் சிறப்பாக ஆராதனை நடைபெறுகிறது.
திருவையாறு கோயிலின் தெற்கு கோபுர வாயிலில், ஆட்கொண்டார் எனும் க்ஷேத்ர பாலகர் சந்நிதி மிகவும் பிரபலம். அதற்கு அருகில் ஸ்ரீஓலமிட்ட விநாயகர் தரிசனம்!
ஞாலமெல்லாம் நயந்து நிறையிடுங்
காலன் அஞ்சும் கடும்பிணி நீங்கிடும்
கோல நல்கும் குறையா நிதிதரும்
ஓலம் என்ற களிற்றினை உள்குவாம்
- எனப் போற்றுகிறது திருவையாற்றுப் புராணம். 'உலகமெல்லாம் விருப்பமுடன் உறுதியாகச் சொல்லுமாறும், எமன் அஞ்சு மாறும், கொடிய நோயானது நீங்கிடும் வகை யிலும், மிக அழகான வடிவத்தை அளித்து, குறைவற்ற செல்வத்தை அருளும்... ஓலம் எனும் அபயக்குரல் அளித்து அழைத்த விநாயகரைத் தியானித்து வணங்குவோம்'' என்கிறது இந்தப் பாடல்.
2-ஆம் ராஜராஜன், தான் கட்டிய ராஜராஜேச்வரம் (தாராசுரம்)  ஸ்ரீஐராவதீஸ் வரர் திருக்கோயிலில், அறுபத்து மூவரின் வரலாற்றை சிற்பங்களாக வடித்து வைத் தான். இந்தக் கோயில் விமானத்தின் அடித் தளத்தில், மாடப்புரைகளின் கீழ்- சுமார் ஆறு அங்குல உயரத்தில் அமைந்துள்ள அடிப்புற பட்டியாகிய நடுப்பத்தியில், தென்கிழக்கு முனையிலிருந்து வடகிழக்கு முனை வரைக்கும், திருத்தொண்டத் தொகை அடியார்களது வரலாற்றை, புடைச் சிற்பங்களாகக் காணலாம். இதில், சேரமான்பெருமாள் நாயனார் கரம்குவித்து நிற்க, காவிரியைக் கடக்க வழி வேண்டி நிற்கும் நம்பியாரூரர், காவிரியின் வெள்ளம், திருவையாற்று கோயிலில் இருந்து பதில் ஓலம் ஒலிக்கும் அடையாளம், அதன்படி ஆற்றின் நடுவில் வழி ஏற்படும் காட்சி, காவிரியின் வெள்ளத்தில் மீன்கள், கரையில் மரங்கள்... அனைத்தையும் ஒரே சிற்பத் தொகுப்பில் காட்டியுள்ளது சிறப்பு! சிற்பத்தின் கீழே, ''உடைய நம்பிக்கு ஓலம் என்று அருளியபடி...’ என பொறித்து வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
'சராசரங்கள் எல்லாம் கேட்க 'ஓலம்’ என மொழிந்தார்’ எனும் பெரியபுராண வரிகள் இங்கே நினைவுகூரத் தக்கவை. படிக்கத் தெரியாத பாமரரும் பார்த்துத் தெரிந்துகொள்ளும் வகையில், நாயன்மார் வரலாற்றை சிற்பங்களாக்கித் தந்த, 2-ஆம் ராஜராஜனை (அநபாய சோழனின் இரண்டாவது மகன் இவன்; 1146-1173) எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவனது காலத்தில்தான் சேக்கிழார் வாழ்ந்தார் என்பதும், அவர் முன்னிலையிலேயே இந்தச் சிற்பங்கள் உருப்பெற்று இருக்கும் என்பதும் அறிஞர்களது கருத்து!
- பிள்ளையார் வருவார்

No comments:

Post a Comment