Wednesday 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 26

அரளி க்ஷோத்திரத்தில் அமாவாசை வழிபாடு! 


டிப்பில் முதலிடம், எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் பேராற்றல், போதுமென்ற மனப்பான்மை, மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் வாழும் தன்மை, பொறாமை கொள்ளாமை, அளவோடு பேசுதல், ரகசியம் காப்பாற்றுதல், எடுத்த காரியத்தை எப்படியேனும் செய்து முடிக்கும் தன்மை, தாயின் மீது அதீத பாசம்... மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் இவை.
மிதுன ராசி மற்றும் புதன் கிரகத்துடன் தொடர்பு கொண்ட இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, மே 21 முதல் ஜூன் 20 வரையிலான நாட்கள், பலன் மிகுந்த காலகட்டமாகும். சில நேரங்களில், இந்த நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகளும் வெளிப்படும். இதனால் விளையும் நட்சத்திர தோஷத்தை நீக்கி, உடல்-உள்ளத்துக்கு ஆரோக்கியத்தைத் தரும் நற்குணங்களை அரளிச் செடியில் வைத்திருக்கிறான் இறைவன்.

மிருகசீரிட நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகளை ஈர்த்து வைத்திருக்கும் இந்தச் செடியை ஸ்பரிசிப்பதும், தினமும் அரை மணி நேரம் அருகில் அமர்ந்திருப்பதும், இந்தச் செடியினால் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்துவதும் சிறப்பு. இதனால், இந்த நட்சத்திரத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதுடன், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புத்துணர்வும் மனமகிழ்ச்சியும் கிடைக்கும். திருவாரூர்- குடந்தை சாலையில், சுமார் 10 கி.மீ. தொலைவில் (குடவாசல் தாலுகாவில்) உள்ளது கரையபுரம். இங்கே ஸ்ரீகரைவீரநாதர் கோயிலின் ஸ்தல விருட்சமும் அரளிச் செடியே!
பிரம்மன் வழிபட்டதால், மூலவருக்கு ஸ்ரீபிரம்ம புரீஸ்வரர் என்றும் திருநாமம் உண்டு. அம்மையின் திருப்பெயர்- ஸ்ரீபிரத்யட்சமின்னம்மை. இந்தத் தலம் குறித்த தனது பதிகம் ஒவ்வொன்றிலும், 'இந்தத் தலத்தை வழிபட வினை நீங்கும், பாவம் அகலும்’ எனக் குறிப்பிடுகிறார் திருஞானசம்பந்தர்.அமாவாசை தினங்களில் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபட, இன்னல்கள் நீங்கும்; சகல சம்பத்துகளும் கிடைக்கும்.
மூலவருக்கு வலப்புறம் காட்சி தருகிறாள் அம்பாள். அர்த்த மண்டபத்தில், திருவுலாவுக் காகச் சென்ற ஸ்வாமியின் வரவை எதிர்நோக்கி காத்திருந்த இந்த அம்பிகையிடம், ''வெளியே போன புருஷன் வரலையேனு நீ கவலைப்படுறே! எங்களுக்குக் கல்யாணமே ஆகலையே... நாங்கள் யாருக்காகக் கவலைப்படுவது?'' என்று கேட்டார் களாம் ஊரிலுள்ள கன்னிப் பெண்கள்! உடனே, 'இந்த ஆலயம் வந்து தொழும் கன்னிகளுக்கு விரைவில் திருமணம் நடக்கும்’ என்று அசரீரி ஒலித்ததாம்! இன்றும் இங்கு வந்து பிரார்த்திக்கும் கன்னிப் பெண்கள், வெகு விரைவில் திருமாங்கல்ய பலன் பெறுகிறார்கள் என்பது நம்பிக்கை. அம்பாள்- ஸ்வாமிக்கு நடுவே, திருமணக் கோலத்துக்கு சாட்சியாக நிற்கிறார் சூரியதேவன்.
ஆதியில் செவ்வரளிக் காடாகத் திகழ்ந்தது இந்தத் தலம். இங்கிருந்த லிங்கத்தை கௌதம முனிவர் பலகாலம் வழிபட்டதாகவும், பின்னர் அவர் கடும் தவம் செய்து, சிவ தரிசனம் பெற்றதா கவும் தல புராணம் கூறுகிறது. அந்த முனிவர், ''இறைவா, எப்போதும் உம்மையே பூஜித்திருக்க வேண்டும். பிறகு உம்முடனேயே ஐக்கியமாகிவிட வேண்டும்'' என இறைவனிடம் வேண்டினாராம். அதன்படி, இங்குள்ள சிவலிங்கத்துக்குள் கௌதமர், உறைந்திருப்பதாக ஐதீகம்.
மூலவருக்கு முன்னால் ஸ்ரீவிநாயகரும் ஸ்ரீமுருகனும் காட்சி தருகின்றனர். மேலும் நாகர், சைவக் குரவர் நால்வர், அம்பிகைக்கு முன்னால் இடப்புறம் சப்த கன்னியர், பிராகாரத்தில் ஸ்ரீராஜகணபதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, கருவறைக்குப் பின்புறம் லிங்கோத்பவருக்கு பதில் ஸ்ரீமகா விஷ்ணு, வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீபிரம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர், துர்கை ஆகியோரையும் இங்கு தரிசிக்கலாம். மேலும், இந்தக் கோயிலில் சுமார் ஐந்தரை அடி உயரத்தில் ஒரு நடராஜர் விக்கிரகம், தூசு படிந்த நிலையில் இருந்ததாம். பிற்பாடுதான், அது முழுக்க முழுக்கத் தங்கத்தாலான சிலை என்பது தெரியவந்ததாம். தற்போது, அரசாங்கப் பாதுகாப்பில் உள்ளது அந்த விக்கிரகம். இங்கு வந்து வழிபட... சிவனாரின் அட்டவீரட்டான தலங்களைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
கழுதை ஒன்று இந்தத் தலத்தின் இறைவனைப் பிரார்த்தித்து தவம் இருந்ததாம். அது இறக்கும் நிலையில் ஈசனின் திருக்காட்சி கிடைத்தது. ஸ்வாமியைக் கண்ட மகிழ்ச்சியில், எழுந்து வெகு தூரம் ஓடிய கழுதை, கடற்கரையை அடைந்து, அங்கிருந்தபடி
ஸ்வாமியை வணங்கியது. ஸ்வாமியும் ஆலயம் இருக்கும் இடத்தில் இருந்தே கழுதைக்குக் காட்சி தந்தாராம். இன்றும் கோயிலிலிருந்து பல கி.மீ. தூரமுள்ள கடற்கரை வரை... ஒரே நேர்க்கோடாக உள்ள பகுதியில் வீடுகள் இல்லை! ஸ்வாமி, அக்னிப் பார்வையில் கரைகண்டநாதராகக் காட்சி தருவதால், அவருக்கு ஸ்ரீகரைவீரநாத ஸ்வாமி என்று பெயர் ஏற்பட்டதாக ஒரு குறிப்பு உண்டு. இங்குள்ள ஸ்தல விருட்சமான செவ்வரளிக்கு, பக்தர்கள் மூன்று முறை நீருற்றி வழிபடும் முறை காலகாலமாக இருந்து வருகிறது. அப்படி... வழிபாட்டின் பொருட்டு, எவ்வளவு நீர் ஊற்றினாலும், அந்தத் தண்ணீர் அப்படியே பூமிக்குள் உறிஞ்சப்பட்டு விடுகிறது!
செவ்வரளியின் பூ, இலை, பட்டை, மரப்பால், மரத் தண்டு ஆகியன மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இலைகளைச் சூடுபடுத்தி வீக்கங்களின் மீது கட்டினால் வீக்கம் வற்றும். பூமொட்டுகளை வெற்றிலையுடன் கலந்து (மருத்துவர் ஆலோசனையுடன்) மென்றால், காய்ச்சல் தணியும். இதன் பட்டைக்கு ஆஸ்துமா கிருமிகளைக் கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது. வேரின் பட்டை, வெள்ளை வெட்டை எனும் நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. விருட்சத்தின் பாலுக்கு வயிறு மற்றும் குடலை இயக்கக் கூடிய சக்தி உண்டு. கீல்வாதத்துக்கு இந்தப் பாலைப் பூசினால், குணம் அடையலாம்.
சந்தனம், கற்பூரம் ஆகிய வற்றைச் சேர்த்து நமைச்சல் குணமாகப் பூசலாம். மிருதுவான செவ்வரளியைக் கரையான் அரிப்பது இல்லை. அரளி விதை விஷத்தன்மை வாய்ந்தது. ஆகவே, அரளியை மருத்துவத்துக்குப் பயன்படுத்துமுன், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிக அவசியம். சுயமாக முயற்சி செய்வது விபரீதத்தில் முடியலாம். ஜாக்கிரதை!
- விருட்சம் வளரும்
முத்து முத்தாக நீரூறும் அதிசயம்!
''செவ்வரளிக் காட்டில் தோன்றிய ஸ்ரீகரைவீரநாதர் சக்தி வாய்ந்தவர். அமாவாசை நாட்களில், மூலவரின் கருவறைச் சுவரில் முத்து முத்தாக நீர் சுரக்கும் அதிசயத்தைக் காணலாம்'' .

''இங்கு, நந்திக்கு தனிச் சந்நிதி இருக்கிறது. அமாவாசை நாட்களில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடக்கும்; அன்று அபிஷேக- ஆராதனைகளும் ஹோமமும் சிறப்புற நடைபெறும். தவிர, மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடும் விசேஷம். தேவாரத்தில் புகழ்பெற்ற திருத்தலங்கள் பலவற்றைக் குறிப்பிடும்.

திருநாவுக்கரசர், அந்த ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன்கள், இந்தத் தலத்திலேயே கிடைக்கும் என்று பாடியுள்ளார். குறிப்பாக, இங்கு வந்து வழிபடுவோருக்குப் பாவ- தோஷ நிவர்த்தியும், கன்னிப் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியமும் கைகூடுவதும் திண்ணம்'' . காலை 9:00, பகல் 11:00, மாலை 7:00, இரவு 8:30 மணி என தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

No comments:

Post a Comment