விநாயகரின் அகன்ற காதுகள்- நிறைய கேட்கவேண்டும் என்பதையும், வாயை மறைத்திருக்கும் துதிக்கை- அளவுடன் பேசவேண்டும் என்பதையும் அறிவுறுத்தும் என்பார்கள் ஆன்றோர்கள். 'வாயை மூடியிருக்கும் தும்பிக்கை, பேசுவதில் ஜாக்கிரதை வேண்டும் என்பதைக் குறிக்கிறது’ என்று சொல்வார் காஞ்சி மகா பெரியவர்.
இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வாகனம் உண்டு. சிவனாருக்கு- ரிஷபம் (காளை); அம்பிகைக்கு- சிங்கம்; திருமாலுக்கு- கருடன்; பிரம்மனுக்கு- அன்னப் பறவை; முருகப்பெருமானுக்கு- மயில். பிள்ளையாரோ யானை மாதிரி பெரிய உருவம் கொண்டவர். ஆனால், அவருடைய வாகனமோ மிகச் சிறிய மூஞ்சூறு!
இதற்குச் சுவாரஸ்யமான வரலாறு ஒன்று உண்டு.
சவுபரி என்ற முனிவரின் மனைவி மனோமயை. இவளை பலாத்காரம் செய்ய முயன்ற கிரவுஞ்சன் எனும் கந்தர்வனை மூஞ்சூறு ஆகும்படி சபித்தார் சவுபரி முனிவர். பராசர முனிவரின் ஆஸ்ரமத்தில் வளர்ந்த விநாயகர், மூஷிகம் ஆகிய அந்த மூஞ்சூறு வை அடக்கித் தன் வாகனமாக்கிக் கொண்டார் என்கிறது புராணம். காமத்தால் மூஷிகம் ஆனான் கந்தர்வன். எனவே, அது காமத்தின் சின்னம். ஞானமே காமத்தை அடக்கி ஆளும். ஆக, ஞான வடிவினராகிய விநாயகர், காமத்தை அடக்கி அருளுகிறார் என்பதே இதன் தத்துவம்.
மூஷிகத்தை வாகனமாக வைத்திருப்பதில், விநாயகருக்குக் கௌரவம் ஏதுமில்லை. அவரால்தான் மூஷிக வாகனத்துக்குக் கௌரவம். அதற்குக் கௌரவம் கொடுக்கும் வகையில் அதனுடைய சக்திக்கு ஏற்றபடி, கனம் இல்லாமல் ஒரு தக்கையை (நெட்டி) போல் திகழ்கிறாராம் கணநாயகன். அதாவது, மூஷிக வாகனத்துக்குச் சிரமம் எதுவும் இல்லாமல், அதேநேரம் அதற்கு உரிய கௌரவம்- மரியாதை உண்டாகும்படி, தன் திருமேனியை வைத்துக் கொண்டிருக்கிறாராம் பிள்ளையார். இதன் தத்துவம் என்னவெனில், மிகப் பருமனான- எடை மிகுந்த உருவமானாலும், பக்தர்கள் இதயத்தில் கனமில்லாமல் மிகவும் லேசாக வீற்றிருப்பதுதான்!
பொதுவாக, நாம் எல்லோரும் எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத விஷயங்கள் மூன்று. ஒன்று யானை; இரண்டாவது- சந்திரன்; மூன்றாவது கடல். எத்தனை மணி நேரமானாலும் சலிக்காமல், பெரியவர்களும் குழந்தை போலாகி ஆசை ஆசையாகப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள் யானையை.
யானை அசைந்து அசைந்து நடப்பது, காதை ஆட்டிக் கொண்டிருப்பது, தும்பிக்கையை நீட்டிச் சாப்பிடுவது, அதனைச் சுழற்றுவது, குட்டிகளுடன் நடந்து செல்வது, மிகச் சிறிய கண்களால் அழகாகப் பார்ப்பது... என யானையின் செயல்கள் அனைத்தும் நமக்கு மகிழ்ச்சி அளிப்பவை! குழந்தைகள், மனதில் கள்ளம்- கபடம் இல்லாமல், விளையாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும்... தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் ஆனந்தம் அடையச் செய்வார்கள் இல்லையா? அதுபோல், பிள்ளையாரும் எல்லோரையும் மகிழச் செய்வார். எனவே, குழந்தைகள் மிகவும் விரும்பும் குழந்தைசாமி அவர்.
விநாயகர் வழிபாட்டில் மட்டுமே தலையில் குட்டிக் கொள்வது, தோப்புக்கரணம் போடுவது, சிதறு (சூறைத்) தேங்காய் போடுவது எல்லாம்! மற்ற தெய்வ வழிபாடுகளில் இவை இல்லை.
இரண்டு கை விரல்களையும் மடித்துத் தலையில், அதாவது நெற்றிப்பொட்டில் குட்டிக்கொள்கிறோம். யோக சாஸ்திரப்படி, நாம் தலையில் குட்டிக்கொள்ளும் இடத்தில் உள்ள நரம்பு(நாடி)களால் சலனம் மாறி, மனதில் தெய்வீகமான அதிர்வு உண்டாகிறது என்பது நம் முன்னோர் கண்ட உண்மை.
அதுபோலவே, இரண்டு கைகளையும் மாற்றி காதுகளைப் பிடித்துக்கொண்டு, முட்டிக்கால் தரையில் படுமாறு தோப்புக்கரணம் போடுவதால், காது சதைகள் உந்தப்பட்டு, மூளையில் தெளிவு ஏற்படும். கால்களை மடக்கி எழுவதால், ஒட்டுமொத்த உடலுக்கும் புத்துணர்வு ஏற்படுகிறது. இதனால், மூட்டுவலி வராமலும் பார்த்துக்கொள்ள முடியும் என்பது மருத்துவர்களும் ஏற்றுக்கொள்ளும் விஷயம். தோர்பி: கர்ணம் என்பதே தோப்புக் கர்ணம் என்றாயிற்று. தோர்பி: என்றால் கைகள்; கர்ணம் என்பது காது. கையால் காதைப் பிடிப்பது. இதனை, தொப்பணம் என்றும் அழைப்பர்.
பிள்ளையார் வழிபாட்டில் சூறைத் தேங்காய் முக்கிய வழிபாடு. இதுவும் தமிழகத்திலேயே அதிகம் காணப்படுகிறது. தேங்காயைத் தரையில் மோதி உடைப்பதை, சூறைத் தேங்காய் அல்லது சிதறு தேங்காய் என்பர். சிதறிய தேங்காய்த் துண்டுகளை எடுத்துக்கொள்ளும் (பிரசாத) உரிமை சிறுவர்களுக்கே! இதுவும் மறைமுகமாகச் செய்யப்படும் ஒருவகை தருமம். இதில் தேங்காய் மட்டும் சிதறுவதில்லை. விநாயகரின் முன்பு பக்தர்களின் தீயவினைகளும் மும்மலங் களும் சிதறிப் போகின்றன. ஆணவத்தின் மண்டையோடு பல துண்டுகளாகச் சிதறுகிறது என்பது தத்துவ நுட்பம். உடலையும் உள்ளத்தையும் உயிரையும் கவ்விக்கொண்டிருக்கும் அனைத்துத் துன்பங்களும் சிதறி நொறுங்கவேண்டும் என்ற பிரார்த்தனையே இந்த வழிபாட்டின் தத்துவமாகும்.
பிள்ளையாரின் தத்துவ உருவம், வினை தீர்க்கும் வழிபாடுகள் போன்றே, பல்வேறு தலங்களில் அவர் சூடிக் கொண்டிருக்கும் திருப்பெயர்களும், அவற்றுக்கான காரணக் கதைகளும்கூட சுவாரஸ்யமானவையே!
சிந்தை மகிழ்விக்கும் அந்தத் திருக்கதைகள், வல்வினைகளைத் தீர்க்கும் வல்லமை வாய்ந்தவை. நம் ஒவ்வொருவரது இல்லத்திலும் அற்புதம் நிகழ்த்தப்போகும் அந்தக் கதைகளை, இனி... அடுத்தடுத்த இதழ்களில் பார்க்கப் போகிறோம்.
முதல் கதை என்ன தெரியுமா?
- பிள்ளையார் வருவார்..
No comments:
Post a Comment