Tuesday, 24 October 2017

சென்னியமங்கலம் சிவன் கோயில்

CHENNI_MANGALAM_5

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்திற்கு தென்கிழக்கே அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் சென்னியமங்கலமாகும். இது 1000 ஆண்டுகளுக்கு முன் வரலாற்று சிறப்புமிக்க பேரூராக இருந்தது என்று வரலாற்று ஆய்விலிருந்து தெரிய வருகிறது.
 
இவ்வூர் பல்லவர் காலம் தொட்டு பிற்கால சோழர் காலம் வரை சிறப்புற்று விளங்கியது. இது கி.பி 7-ம் நூற்றாண்டில் இரண்டாம் புலிகேசி மன்னன் படையெடுப்பின் போது இவ்வூரை அவனது படைகள் வென்றதாக தெரிகிறது. மகேந்திரவர்ம பல்லவன் இவனுடன் சமாதானம் செய்து கொண்ட பின் படையுடன் திரும்பி செல்லும் போது சாரளநல்லூர், சகடமங்கலம், அடியமங்கலம், சென்னியமங்கலம், ஐடியமங்கலம், சதுர்லேதிமங்கலம், அம்மன்குடி, காஞ்சிபுரம் அருகேயுள்ள மணிமங்கலம் ஆகிய ஊர்களை சூறையாடி கோயில்களை சிதைத்து ஐம்பொன் சிலைகளையும், நகைகளையும் கைப்பற்றி சென்றதாக கூரம் செப்பேடுகள் கூறுகின்றன. 
மீண்டும் இக்கோயில்களை புதுப்பிக்கப்பட்டன. சோழர் காலத்தில் பல கொடைகளையும் பெற்று அவர்கள் பட்டப் பெயராலேயே சென்னியமங்கலம் என அழைக்கப்பட்டது. சென்னியமங்கலம் - சென்னிய+மங்கலம் சென்னி என்றால் சோழன் என்றும் மங்கலம் என்றால் வேதியர்களுக்கு தானமாக அளிக்கப்பட்ட ஊர் என்ற பொருள்.
பல்லவர் கால செப்பேடுகளில் ஒன்று திருவள்ளூவர் தாலூக்காவில் உள்ள சிவன் வாயில் கிராமத்தில் கிடைத்த சமஸ்கிருத கல்வெட்டில் பல்லவ மன்னான சிம்ம விஷ்ணு தசாச்சவமேதம் பகுசுவர்ணம் ஆகிய யாகங்களை கோலியக்குடி சென்னியமங்கலம் அம்மன்குடி ஆகிய ஊர்களில் செய்து பல்லவ சாம்ராஜ்யத்தை சோழநாட்டிலும் விரிவு படுத்தினான் என்று கூறுகிறது.
 
இவ்வாறாக பல்லவர்காலம் முதல் பிற்கால சோழர் காலம் வரை சிறப்புற்று விளங்கிய சென்னியமங்கலம் 13-ம் நூற்றாண்டில் மாலிக்கபூர் படையெடுப்பால் கொள்ளையடிக்கப்பட்டும், அழிக்கபட்டும் சீர்குலைந்தது. 
பல நூற்றாண்டுகளாக மண்ணில் புதைந்திருந்த லிங்கத்தினை சில வருடங்களின் முன் இங்கிருந்த திடலில் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் ஊர் மக்கள் கூடி இதற்கு கோயில் அமைக்க எண்ணியபோது அருகில் உள்ள ஊரில் ஒரு லிங்கம் இதுபோல் கண்டெடுக்கப்பட்ட்டது இரு லிங்கத்தினையும் சேர்த்து கோயில் ஒன்றினை சென்னை மகாலட்சுமி அவர்கள் உதவியால் கோயில் எழுப்பப்பட்டது. 
 
கிழக்கு நோக்கிய அருணாச்சலேஸ்வரர் தெற்கு நோக்கிய உண்ணாமுலை அம்மன் இறைவன் கருவறை வாயிலில் இருபுறமும் சொக்கநாதர் மீனாட்சி சிலைகளும் வைக்கப்பட்டு பூசிக்கப்படுகிறது. பிரகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி சிற்றாலயங்கள் உள்ளன. நவகிரகங்களும் உள்ளன.

No comments:

Post a Comment