Wednesday, 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள் ! - 18

                              

                                        அரச மரம்.

பஞ்ச பூதங்களில், நெருப்புடன் தொடர்புடைய தனுசு ராசிக் காரர்கள், பெரும்பாலும் பயணத்தில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பர். இந்த ராசிக்காரர்களுக்கும், மீன ராசிக்காரர்களுக்கும், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர் களுக்கும், வியாழக்கிழமை மற்றும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்களுக்கும் உகந்தது அரச மரம்.
இவர்கள், அரச மரத்தை தினமும் அரைமணி நேரம் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தாலோ, அதன் நிழலில் இளைப்பாறினாலோ நற்பலன்களைப் பெறலாம். குழந்தை வரம், திருமண வரம், பண வரவு ஆகிய காரியங்களுக்கு உதவும் கிரகமாக வியாழனைச் சிறப்பிக்கின்றன சாஸ்திரங்கள்.  இந்தக் கிரகத்துக்கும் அரச மரத்துக்கும் நேரடித் தொடர்பு உண்டு.
அரச மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளைச் சாப்பிட்டால், நல்ல நிவாரணம் பெறலாம். பொதுவாக எல்லா தாவரங்களும், 12 மணி நேரம் ஆக்ஸிஜனையும், 12 மணி நேரம் கார்பன்டைஆக்ஸைடையும் வெளியேற்றுமாம். ஆனால், அரச மரம் மட்டுமே 24 மணி நேரமும் ஆக்ஸிஜனை வெளியேற்றக்கூடியது. அதனால்தான் ஆலயங்களைச் சுற்றிலும், சுற்றுப்புறச் சூழலைப் பேணும் பொருட்டு அரச மரங்களைப் பராமரித்து வளர்க்கின்றனர்போலும்!
காவிரி தென்கரைத் தலங்களில் 36-வது தலமான திருவாவடுதுறை ஸ்ரீஒப்பிலாமுலையம்மன் சமேத ஸ்ரீகோமுத்தீஸ்வரர் (ஸ்ரீமாசிலாமணீஸ்வரர்) கோயிலின் ஸ்தல விருட்சம்- அரசமரம் (படர் அரசு). பசுக்கள் கூட்ட மாக வந்து இளைப்பாறவும், மேயவும் வசதியான காவிரியாற்றுத்துறைஎன்பதால், திரு ஆ அடு துறை என்று தலப்பெயர் அமைந்ததாம்.
மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில், திருவாவடு துறை ஆதீன மடமும், ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன. அகத்தியர், திருமூலர், போகர், போகரின் சீடர்களில் முக்கியமானவர் களான திருமாளிகைத் தேவர், கருவூர்த் தேவர், கொங்கணர் முதலான நவகோடி சித்தர்களும், இங்கு வந்து இறைவனை வழிபட்டு அட்டமா ஸித்திகளைப் பெற்றதால், இதனை நவகோடி சித்தர்புரம் என்றும் அழைப்பர்.
பசுவாக உருவெடுத்த ஸ்ரீபார்வதிதேவி, திருவா வடுதுறை இறைவனை வழிபட்டுச் சாபம் நீங்கப் பெற்றாளாம். பூச நன்னாளில், அம்பிகையின் கோ (பசு) உருவை நீக்கி, அவளின் திருவுருவை அணைத்து எழுந்தருளியதால், ஸ்வாமிக்கு 'அணைத்தெழுந்த நாயகர்’ எனும் பெயரும் உண்டு. பிரிந்த தம்பதியர்,  இங்கு வந்து, ஸ்ரீஅணைத்தெழுந்த நாயகரை வழிபட, பிரச்னைகள் நீங்கும்; பிரிந்தவர்கள் சேருவர் என்பது ஐதீகம்.
நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் அருள்கிறாள் அம்பிகை. ஸ்ரீதுணை வந்த விநாயகர், ஸ்ரீஅழகிய பிள்ளையார், ஸ்ரீதட்சிணாமூர்த்தி (அகத்தியரின் வெண்குஷ்டத்தை நீக்கியருளியவர் இவர் என்கிறது ஸ்தல புராணம்) ஆகியோருக்கும் சந்நிதிகள் உண்டு. மேலும், வடக்கு நோக்கியவராக ஸ்ரீதிருநிறைகண்ட விநாயகர் காட்சி தருவது சிறப்பு. இங்குள்ள நந்தி. தஞ்சை பெரியகோயில் நந்தியைவிட பெரியது என்கிறார்கள். மாடுகளுக்கு ஏதேனும் வியாதி வெக்கை வந்தால், உடனே கோயிலுக்கு அழைத்து வந்து, இந்த நந்தியின் முன்னே நிறுத்தி பூஜிக்க, நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை!
அந்தக் காலத்தில் அரச வனமாகத் திகழ்ந்த பகுதியாம் இது. மரங்களின் அரசன் என்பதால், இந்த மரத்துக்கு இப்படியரு பெயர் அமைந்ததாம். ஓர் அரசங்கன்றை நட்டு வளர்த்தால் போதும்... நம் சந்ததியினர் அனைவருக்கும் சொர்க்கத்தில் இடம் உண்டு என்கிறது விருட்ச ஆயுர்
வேதம்! இந்த மரத்துக்கு கார்மேகங்களைக் கவரும் வல்லமை உண்டு. எனவே, வேள்விகளில் அரசங்குச்சியை சமித்தாகப் பயன்படுத்துவர்.
'மரங்களில் நான் அரச மரம்’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். காலையில் நீராடியதும் இந்த மரத்தை வலம் வர வேண்டும் என் கிறது மகாபாரதம். மரத்தை வலம் வரும்போது, நம் மீது படுகிற மரத்தின் காற்றால், நோய் நிவாரணம் கிடைக்கும்; ஆயுள் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் வேண்டுவோர், அரச மரத்தைச் சுற்றி னால், சூலகம் தூண்டப்படும்; ஆண்கள் வலம் வந்தால், சுக்கிலம் தூண்டப்பட்டு, ஜீவ அணுக்கள் அதிகரிக்கும் என்கிறது ஆயுர்வேதம்.
அரசும் வேம்பும் இணைந்து வளரும் போது, அங்கே மின்சக்தி நிலவுவதாகத் தெரிவிக்கிறது அறிவியல். அரசம் பழங்களைப் பவுடராக்கி, மாதவிலக்கு முடிந்ததும், சுமார் 3 கிராம் அளவில், தாய்ப்பாலில் கலந்து சாப்பிட, குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த மரத்தின் பழங்கள், பித்த நோய்களையும் ரத்தக் குறைபாடுகளையும் குணமாக்குமாம். இதன் உலர்ந்த பழங்கள் ஆஸ்துமா, மலச்சிக்கல் ஆகியவற்றை நீக்குகிறது. எலும்பு முறிவு சிகிச்சைக்கு, இளம் மரத்தின் பட்டை பயன்படுகிறது; இது இடுப்பு வலி மற்றும் புண்களையும் குணப்படுத்தும் என்பர்.
அரசஇலைத் துளிரைப் பாலில் அல்லது தண்ணீரில் வேகவைத்து வடிகட்டி, சர்க்கரை கலந்து குடித்தால், மூளைக்குச் சக்தி கிடைக்கும். இலைகளை நிழலில் உலர வைத்து அரைத்து குல்கந்து சேர்த்து, தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட, மலச்சிக்கல் நீங்கும்! அரச இலையையும் வேப்பிலையையும் நன்றாக அரைத்து மூலக் கட்டி மீது பூசினால், வலி குறையும்.
அரச மரத்தின் ஏழு முதிர்ந்த இலைகளை எரித்துத் தண் ணீரில் போட்டு, சிறிது நேரம் கழித்து, வடித்துக் குடித்தால் வாந்தி நிற்கும். மரத்தின் பட்டையையும் இலைகளையும் தண்ணீரில் கொதிக்கவைத்துத் தேன் கலந்து குடித்தால் வெட்டை நோய், குஷ்ட நோய் ஆகியன நீங்கும்; ரத்தம் சுத்தமாகும்!
திருநல்லம், திருப்பரிதிநியமம், திருக்கச்சி, திருப்புட் குழி, திருப்புல்லாணி ஆகிய ஆலயங்களிலும் அரச மரமே ஸ்தல விருட்சமாகப் போற்றப்படுகிறது.
விருட்சம் வளரும்

No comments:

Post a Comment