Thursday 26 October 2017

திருமணப்பேற்றை அருளும் திருவேதிக்குடி!

v8
தேவாரப் பாடல்களுள் திருமணமாகாத கன்னியருக்கும் காளையருக்கும் விரைவில் திருமணபாக்கியம் நல்கும் திருத்தலமாகக் கூறப்படுவது காவிரியின் தென்கரைத் தலமான "திருவேதிக்குடி' மட்டுமே! இத்திருக்கோயில் கண்டியூருக்குத் தென்கிழக்கில் இரண்டு கி.மீ. தொலைவில் திருவையாறு திருத்தலத்திற்கு அருகிலேயே உள்ளது.
இது சப்த ஸ்தான தலங்களில் ஒன்றாகும். இறைவனின் திருநாமம் வேதபுரீஸ்வரர். இறைவி மங்கையர்க்கரசியம்மை. தலவிருட்சம் வில்வமரம். இங்குள்ள தீர்த்தம் வேத தீர்த்தம் அல்லது சுந்தர தீர்த்தம் எனப்படுகிறது.
இத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இறைவன் மீது திருஞானசம்பந்தர் பெருமான் ஒரு பதிகமும் திருநாவுக்கரசர் பெருமான் ஒரு பதிகமும் பாடிச் சிறப்பித்துள்ளனர்.
இத்தல இறைவன், வாழை மடுவில் தோன்றியதால் "வாழை மடு நாதர்' என்ற சிறப்புப் பெயரும் இவருக்கு உண்டு. வேதம் ஒலித்த வண்ணம் இருக்கும் திருத்தலம் இதுவாகும். அதனால் வேதம் கேட்பதில் விருப்பமுடன் பிள்ளையார் இங்கு ஒருபுறம் சாய்ந்த கோலத்தில் காணப்படுவதால் இவரை, "வேதப்பிள்ளையார்' என்றே அழைக்கிறார்கள்.
இக்கோயிலில் வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் வலப்புறத்தில் உமையம்மையும் இடப்புறத்தில் சிவனுமாக அற்புதக்கோலம் கொண்டுள்ளார்.
"திருமணமாகாத கன்னியர்களும் காளையர்களும் இங்குள்ள வேதிக்குடி இறைவன் அர்த்தநாரீஸ்வரனை தரிசித்து முறைப்படி வழிபாடு மேற்கொண்டால் விரைவில் திருமணம் கைகூடி வரும்' என்கிறார் திருஞானசம்பந்தர். இதையே, திருநாவுக்கரசர் பெருமானும் தமது தோவாரப்பதிகத்தில் "உமையொரு பாகனான அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வழிபட்டால் நம் விருப்பங்கள் பூர்த்தியாகும்' என்று கூறுகிறார்.
இங்கு வந்து அம்மையப்பனை தரிசனம் செய்யும் அன்பர்கள் வளமான வாழ்க்கையும் நற்பலன்களும் பெறுகின்றனர்.

நன்றி :- டி.எம். இரத்தினவேல்
தொகுப்பு : சீதா பாரதிராஜா

No comments:

Post a Comment