Friday 6 October 2017

அரிசிச் சோறு ஆரோக்கியம்தானா?

டையைக் குறைக்கணுமா? அரிசியை கட் பண்ணுங்க... சாதம், இட்லி, தோசை... எல்லா அரிசி உணவுகளையும் நிறுத்திட்டு, சப்பாத்தி, ஓட்ஸ் சாப்பிடுங்க” என நிறைய ஃப்ரீ அட்வைஸ் கிடைக்கிறது. இளம்பெண்கள் பலர் ஃபிட்டாக இருக்கவேண்டும் என்பதற்காக, அரிசி உணவைத் தவிர்க்கிறார்கள். அரிசி நம் பாரம்பர்ய உணவு. நம் ஊரில் விளையும் அரிசியைத் தவிர்த்து, அயல்நாட்டில் இருந்து இறக்குமதியாகும், மற்றோர் உணவைச் சாப்பிடுங்கள் எனும் பிரசாரம் மேலோங்கும் நிலையில், அரிசி தவிர்க்க வேண்டிய உணவுதானா என்கிற குழப்பம் பரவலாக இருக்கிறது.

இயற்கை எப்போதுமே ஒவ்வோர் இடத்திலும் அந்தந்த மக்களுக்கு அவர்களின் காலநிலைக்கு ஏற்றவாறுதான் உணவைத்  தருகிறது. அரிசி சாதம் சாப்பிடுவதால் உடல் எடை கூடும் என்பது உண்மைதான். 100 கிராம் சமைக்காத அரிசியில் 300 - 350 கலோரி இருக்கிறது. அதிக கலோரி உள்ள உணவுகளில் அரிசிக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. ஆனால், எளிதில்  செரிமானமாகும் உணவும் அரிசிதான். இனி, அரிசியைப் பற்றி விலாவாரியாக அலசுவோமா?
அரிசியில் பல வகைகள் இருக்கின்றன. மஞ்சள் - பழுப்பு நிறங்கள் கலந்த அரிசிதான் உடலுக்கு நல்லது. அதில்தான் நார்ச்சத்து, புரதம் ஆகியவை இருக்கும்.
ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் அரிசி ‘பளீர் வெள்ளை’ நிறத்தில் இருக்கும். அரிசியை மேலும் மேலும் பாலீஷ் செய்வதன் காரணமாகவே வெள்ளை நிறத்துக்கு மாறுகிறது.
வெள்ளை நிற அரிசி உடலுக்குக் கேடுவிளைவிக்காவிட்டாலும், அதில் உள்ள சத்துக்கள் நீங்கிவிடுவதால் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது இல்லை.
பொன்னி அரிசி விலை அதிகமாகவும் சுவையாகவும் இருக்கலாம். ஆனால், அதிக முறை பாலீஷ் செய்யும்போது, அதில் சத்துக்கள் நீங்கிவிடும். மாவுச்சத்து மட்டுமே இருக்கும்.
மாவுச்சத்து மட்டுமே இருக்கும் உணவுகள் எளிதில் உணவு சாப்பிட்ட திருப்தியைத் தராது. அளவுக்கு அதிகமான மாவுச்சத்து, கொழுப்பாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படும். உடல் எடையைக் கூட்டும்.
எந்த அரிசியைச் சாப்பிடுவது?
நார்ச்சத்து, புரதச்சத்து ஓரளவு இருக்கும் அரிசியை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
அரிசியை மில்லில் அரைக்கும்போது, அதில் உள்ள தவிடுகளை முழுமையாக நீக்கிவிடுவார்கள்.
தவிட்டில் நார்ச்சத்து, புரதச்சத்து, அமினோ அமிலங்கள் இருக்கின்றன. எனவே, முழுமையாக தவிடு நீக்கப்பட்ட அரிசியைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
கைகுத்தல் அரிசி, தவிடு நீக்கப்படாத பழுப்பு அரிசி போன்றவற்றைச் சாப்பிடலாம். இவற்றைவிடவும் கேரளாவில் பயன்படுத்தப்படும் சிவப்பரிசியில் அரியவகை ஆன்தோசயனின் சத்து இருக்கிறது.
அரிசி உணவுகளை எப்படிச் சாப்பிடவேண்டும்?
அரிசி உணவுகளை அறவே தவிர்ப்பதும் அதிகமாகச் சாப்பிடுவதும் தவறான பழக்கம். உடல் எடையைக் குறைக்க அரிசி உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது தவறான கருத்து.
அரிசி உணவுகளைச் சாப்பிட்டே உடல் எடையைச்  சீராகக் குறைக்க முடியும்.
மதிய உணவில் இரண்டு கப் காய்கறி, அரை கப் சாம்பார், அரை கப் ரசம் ஆகியவற்றோடு ஒரு கப் சாதம் மட்டுமே இருக்க வேண்டும்.
சாதத்துடன் சாம்பார் அல்லது கூட்டு, சாதம் - மீன், சாதம் - தோல் நீக்கிய, வேகவைத்த கோழி, சாதம் - முட்டை என்ற காம்போவில் சாப்பிடும்போது மாவுச்சத்துடன், புரதச்சத்து, அமினோ அமிலங்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை சரிவிகிதத்தில் கிடைக்கின்றன.
குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இட்லி மிகச் சிறந்த உணவு. அனைவருமே சாப்பிட ஏற்றது. வெள்ளை அரிசியைவிட கைத்குத்தல் அரிசி, சிவப்பு அரிசி, பழுப்பு அரிசி, குதிரைவாலி அரிசி போன்றவற்றில் இட்லி, தோசை, இடியாப்பம், ஊத்தாப்பம் செய்து சாப்பிடுவது சிறந்தது. 
இட்லியுடன் சாம்பார் அல்லது புதினா சட்னி ஆகியவற்றைச் சேர்த்து, மெதுவாகச் சாப்பிட வேண்டும். நடுத்தரமான அளவுள்ள இட்லி நான்குக்கு மேல் சாப்பிடுவது நல்லது அல்ல. எண்ணெயை மிகக் குறைவாகப் பயன்படுத்தி, தோசை செய்து சாப்பிடலாம்.
அரிசி, கலோரி அதிகமானது என்பதால், எப்போதும் அதனுடன் கலோரி குறைந்த உணவுகளைத்தான் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். சாம்பார் சாதம், தயிர் சாதம், புதினா சாதம், கீரை சாதம் போன்றவற்றை அளவாகச் சாப்பிடலாம்.
என்னென்ன அரிசி உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?
ஹோட்டலில் அதிக எண்ணெய் ஊற்றி சுடப்படும் தோசையைத் தவிர்க்க வேண்டும்.
பிரியாணியில் நெய், எண்ணெய் போன்றவை சேர்க்கப்பட்டு இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
ஃப்ரைடு ரைஸை அறவே தவிர்ப்பது சிறந்தது.
எண்ணெய் அதிகம் ஊற்றிச் செய்யப்படும் எலுமிச்சை சாதம், புளி சாதம் போன்றவற்றையும் அடிக்கடி சாப்பிடக் கூடாது.

No comments:

Post a Comment