Thursday 26 October 2017

தோஷம் போக்கும் சேஷபுரீஸ்வரர்!

v5
வளம் மிகுந்த சோழ நாட்டிலே குன்றாத வீரக்குடி மக்கள் விளக்கமுற்று ஞான செல்வர்களாய் வாழும் தொன்மையான நன்னகரம், திருப்பாம்புரம்! காவிரி தென்கரையில் 59 ஆவது பாடல் பெற்ற திருத்தலமாகத் திகழ்வதும் மூர்த்தி, தலம், தீர்த்தம், என மூன்றிலும் சிறப்புடையதும் ஆகும். இத்திருக்கோயில் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது. 
திருக்கயிலாயத்தில் விநாயகர் சிவபெருமானை வழிபட்டபோது சிவன் கழுத்தில் இருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி 
கர்வம் அடைந்தது. அதனை அறிந்து சினமுற்ற இறைவன் நாக இனம் முழுவதும் தம் சக்தி அனைத்தும் இழக்கும் படி சாபம் இட்டார். சாபக் கழுவாய் வேண்டி நாகங்கள் எல்லாம் பல காலம் பல தலங்களில் வழிபட்டும் பலனில்லை. 
ஆதிஷேசன் தலைமையில் அஷ்ட மகா நாகங்களாகிய அனந்தன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் எனும் நாகங்கள் திருப்பாம்புரம் இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றனர். 
ஆதிஷேசன் உலகைத்தாங்கும் சுமையால் நலிவுற்றபோது மகாசிவராத்திரி அன்று இரவு, மூன்றாம் ஜாமத்தில் திரும்பாம்புரம் வந்து ஆதிசேஷ தீர்த்தம் உண்டாக்கி நீராடி அகத்தி மலரை ஆலம் விழுதால் தொடுத்து சேஷபுரீஸ்வரரை வணங்கி நலம் பெற்றார். 
மேலும் திருக்குடந்தை நாகேஸ்வர், திருநாகேஸ்வரம் நாகநாதர், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர், திருநாகூர் நாகநாதர் ஆகிய பெருமான்களை வழிபட்டு புத்துணர்ச்சி பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.  
பிரம்மன், இந்திரன், பார்வதி, அக்னி, சூரியன், கங்கை, அகத்தியர், தக்கன், கோட்செங்கசோழன் ஆகியோரும் திருப்பாம்புரம் ஈசனை வழிபட்டு நலம் பெற்றுள்ளனர். 
இத்தலத்தில் நாகங்கள் மூலஸ்தானத்திலும் பிற இடங்களிலும் காணப்பட்டாலும் அவை அடியார்களானமையால் எவரையும் தீண்டியதில்லை. இத்தலத்தை எண்ணற்றோர் வழிபட்டு பாம்பு போல் சுற்றும் தீவினைகள் எல்லாம் நீங்கப்பெற்றுச் சிவானந்தப்  பெருவாழ்வில் திளைத்து இன்புறுகின்றனர். 
ராகுவும், கேதுவும் ஏகசரீரமாகி இறைவனை பூஜித்த தலமாதலின் இத்தலத்திற்கு வரும் பக்தர்கள், சகல தோஷங்களும் நீங்கப்பெற்று ஈசனருள் பெறுகின்றனர். 
ஞானசம்மந்த பெருமானால் திருப்பதிகம் பெற்றதும், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்றதும் ராஜராஐன், ராஜேந்திரன், சுந்தரபாண்டியன், சரபோஜி மன்னன், சுபேதார் ரகுநாத பண்டித ராஜன் ஆகியோரால் திருப்பணிகள் செய்விக்க பெற்றதுமானது இத்திருக்கோயில். சமீபத்தில் இவ்வாலயத்தில் குடமுழுக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
வழித்தடம்: திருவாரூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து இத்திருக்கோயிலுக்கு பேருந்து வசதிகள் உள்ளன. 

No comments:

Post a Comment