Sunday 22 October 2017

முதல் வணக்கம் முதல்வனுக்கே! - 8

ஆருரன் சன்னிதிபோல் ஆருரன் ஆலயம்போல்
ஆருரன் பாதத்தழகு போல் - ஆருர்
மரு வெடுத்த கஞ்சமலர் வாவிபோல் நெஞ்சே
ஒருவிடத்திலுண்டோ உரை
- தனிப்பாடல்.
'பிறக்க முக்தி தரும் க்ஷேத்திரம். பஞ்சபூதத் தலங்களில் பிருத்வி (மண்) தலம். சப்தவிடங்க தலங்களில் முதலிடம் பெற்றவரான ஸ்ரீதியாகராஜ மூர்த்தி, 'அஜபா நடன மூர்த்தி’யாக அருளும் ஊர், 18 வகைப் பண்களால் அப்பர், சம்பந்தர், சுந்தரர்
ஆகியோர் போற்றிய தலம், சங்கீத மும்மணிகள் அவதரித்த பூமி! அதுமட்டுமா? ஆழித்தேர், கல் நாகஸ்வரம், பஞ்சமுக வாத்தியம்... என திருவாரூருக்குச் சிறப்புகள் ஏராளம்!
இந்தச் சிறப்புகளுக்கெல் லாம் சிறப்பாக... ஸ்ரீதியாகராஜர் சந்நிதிக்கு அருகில் தரிசனம் தருகிறார் ஸ்ரீமூலாதார கணபதி. ஐந்து தலைப் பாம்பு சுருண்டு கிடக்க, அதன் சுருள் உடலின் மத்தியில், விரிந்த தாமரையின் மேல், ஸ்ரீநர்த்தன கணபதியாகக் காட்சி தருகிறார். இடக் காலை ஊன்றி, வலக் காலை தூக்கியபடி, திருக்கரங்களில் முறையே பாச- அங்குசம், மோதகம் மற்றும் தந்தத்தை ஏந்தியபடி நடனம் ஆடுகிறார். இருபுறமும்... தாளமும் மத்தளமும் வாசிக்கும் பூதகணங்கள்! ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர், ஸ்ரீ ராகத்தில் 'ஸ்ரீமூலாதார சக்ர விநாயக’ என்ற கீர்த்தனையில், இவரைப் பாடியுள்ளார்.
இந்தத் திருவடிவம், சிவயோக சாஸ்திரத்தின் அடிப்படையில் அமைந்தது. இந்த இடத்தில்... திருவாரூர் ஸ்ரீகமலாம்பிகையும் யோக நிலையில் அருள்வதை கவனத்தில் கொள்ளவேண்டும். பாசம், ஜப மாலை, தாமரை மற்றும் அபய முத்திரையுடன் திகழும்... கமலை முனிவரால் ஸ்தாபிக்கப் பெற்ற இந்தத் தேவி, சிவயோக நெறியில் குண்டலினி சக்தியை அடையும் அருள்நெறியைக் காட்டும் வண்ணம், யோகத்தில் அமர்ந்திருப்பதாக 'அஜபா கல்பம்’ எனும் நூல் விளக்குகிறது.
யோகநெறியில் ஆறு ஆதாரங்கள் உண்டு. அவை: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை. மனித உடலில் 6 ஆதாரங்களுடன், உச்சியைத் திறக்கும் (கபாலம்) வாயிலையும் சேர்த்து ஏழு தளத்தின் குறியீடாகக் கூறப்படுகிறது. சிவயோக சாதனையால் எழும் குண்டலினி சக்தியானது, ஒரு ஆதாரத்திலிருந்து மற்றொரு ஆதாரத்துக்குச் செல்லும் நிலையையே, தியாகராஜ நடனங்கள் குறிக்கின்றன. இதனை, திருவாரூர் முதலான சப்தவிடங்க தலங்கள், சிவ யோக முறையில் சிறப்பாக விளக்குகின்றன.
திருவாரூரில், சிவராஜ யோகியாக காட்சி தருகிறார் ஈசன்.சிவயோக சாதனையின் முதற்படி- கருவாய்க்கும் எருவாய்க்கும் நடுவில் உள்ள மூலாதாரத்தில், பாம்பு வடிவில் சுருண்டு உறங்கிய நிலையில் இருக்கும் மூலாதார சக்தியை விழிப்புறச் செய்து, அதனை மேல் நோக்கி எழுப்புவதே.
இதற்கு, குருவருளுடன் கூடிய பிராணாயாமம் எனும் மூச்சுக் காற்று பயிற்சியும் அவசியம். இதையே மூலாதாரத்தின் மூண்டெழு கனலை காலால்(கால்- காற்று) எழுப்பும் கருத்தறிவித்தே... என விநாயகர்அகவலில் குறிப்பிடுகிறார் ஒளவையார்.
யோக சாதனையில் எழுந்த அந்த சக்தியானது, பின்னர் மூலாதாரத் துக்கு மேலுள்ள சுவாதிஷ்டானம், தொப்புளுக்கு நேரேயுள்ள மணி பூரகம், இதயத்திலுள்ள அநாகதம், கழுத்திலுள்ள விசுத்தி, புருவ மத்தியில் உள்ள ஆக்ஞை ஆகிய ஆறு இடங்களில் படிப்படியாக மேலேறி சஞ்சரித்து, பின்னர் கபால வாயில் என்னும் பிரமரந்திரம் வழியாக வெளிப்பட்டு, தலைக்கு மேலேயுள்ள சஹஸ்ராரம் எனும் இடத்தை அடைந்து, இறை இன்பத்தை அனுபவிக்கிறது. நமது உடல் லேசாகப் போய்விடாமல் இருக்கவும், தரையில் அழுந்திப் போய் விடாமல் இருக்கவும் காரணம்... மூலாதார சக்கரமே!
ஆக, ஏழு தலங்களில் திருவாரூர், மூலாதார தலம். மூலாதாரத்தில் உயிர்ச் சக்தியாகிய குண்டலினி, பாம்பு வடிவில் கிடக்கிறது என்ப தைக் குறிக்கவே, அங்கு பாம்புப் புற்றில் ஸ்ரீபுற்றிடங்கொண்ட ஈசன் வீற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.இங்கே, மூலாதாரத்தின் அதி தேவதை விநாயகர். மனித உடலில் உள்ள தண்டுவடம் முடியும் இடத்தில், முக்கோண வடிவில் மூலாதாரம் உள்ளது. அதில், நான்கு இதழ்களோடு கூடிய தாமரை வடிவும் உள்ளது. அதன் நடுவில் உறங்கும் மூலாதார குண்டலினி சக்தியை விழிப்புறச் செய்யும் வகையில், மூலாதார கணபதி விளங்குகிறார்! அவரே, பரமானந்தத்தின் உருவக மான ஸ்ரீநடராஜரைப் போன்று ஆடிக் காண்பித்து, சிவயோகத்தை உலகுக்கு உணர்த்துகிறார்.
சஹஸ்ராரம் என்பது சிதம்பரப் பெருவெளி. இங்கே சிவபிரான் ஓயாது நடனம் செய்கிறார். அதனால்... குண்டலினியின் ஆதி இருப்பிடமான திருவாரூரை, சிதம்பரத்துக்கும் மூத்த முதல் தலம் என்று குறிப்பிடு கின்றர். திருவாரூர் மூலாதார கணபதியை அன்பர்கள் தரிசித்து இன்புறுவார்களாக!
- பிள்ளையார் வருவார்

No comments:

Post a Comment