Wednesday 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 45

நீதி, நேர்மை, நல்லறிவு, பிறருக்கு உதவும் குணம் மற்றும் நல்லொழுக்கம் ஆகியவை சதய நட்சத்திரக்காரர்களின் குணங்கள். சதயம் (சதம்) என்பது, சம்ஸ்கிருதம். இதற்கு நூறு என்று பொருள். நூறு நட்சத்திரங்களின் கூட்டம், வானில் கோள வடிவில் காணப்படுவதால், இந்த நட்சத்திரத்துக்கு சதம் என்று பெயர் வந்து, அதுவே சதயமானதாகச் சொல்வர்!  
இது, கும்ப ராசி மற்றும் சனிக் கிரகத்துடன் தொடர்பு கொண்டது. சனிக்கிழமைகள் மற்றும் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18-ஆம் தேதி வரையுள்ள தேதிகளில் பிறந்தவர்களை சதய நட்சத்திரம் ஆட்சி செய்கிறது. இதன் நல்ல கதிர் வீச்சுகள், ஆரோக்கியம் தரவல்லவை; கெட்ட கதிர்வீச்சுகள், நோய்களை உண்டாக்குபவை. இந்த நோய்களைக் குணப்படுத்த, கடம்ப மரம் பெரிதும் உதவுகிறது.
மேலைக்கடம்பூர் ஸ்ரீஜோதி மின்னம்மை சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலின் தல விருட்சம் கடம்ப மரம். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் வழியே சுமார் 31 கி.மீ. தொலைவு பயணித்தால், இந்தத் தலத்தை அடையலாம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள், பாம்பன் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் போன்ற பல அடியார்கள் வழிபட்ட தலம் இது. திரேதா யுகத்தில் சூரிய- சந்திரர்கள், இந்திரன், ரோமரிஷி ஆகியோரும், துவாபர யுகத்தில் அஷ்ட பர்வதங்களும், பர்வத ராஜனும், கலியுகத்தில் பதஞ்சலி முனிவரும் இங்கு வழிபட்டதாகத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம். பங்குனி 3, 4, 5 ஆகிய தேதிகளில், காலையில் சூரியன் தன் கதிர்களால் மூலவரை வழிபடுகிறான். இந்தத் தலத்து நாயகி, காலையில் கலைமகளாகவும், மாலையில் திருமகளாகவும், இரவில் மலை மகளாகவும் அருள்பாலிப்பதாக ஐதீகம்.
தில்லை ஸ்ரீநடராஜரிடம் பதஞ்சலி முனிவர் விடுத்த வேண்டுகோளின்படி, இந்தத் தலத்தில் ஸ்ரீநடராஜர் ஆனந்தக் கூத்தாடினார். பதஞ்சலி முனிவர் தன் சிரசின் மீது ஸ்ரீநடராஜரைச் சுமந்தபடி ஆடும் கோலத்தை இங்கு தரிசிக்கலாம்.இங்குள்ள விநாயகரும் விசேஷமானவர்.
அரக்கர்களும் தேவர்களும் திருப்பாற் கடலைக் கடைந்தபோது, விநாயகரை வழிபட மறந்தனர். இதனால் அமிர்த கலசத்தை பூலோகத்தில் மறைத்துவைக்க விநாயகர் எடுத்து வரும் வேளையில், அமிர்தத்திலிருந்து ஒரு துளி தெறித்து, கடம்பவனத்தில் விழுந்தது. அந்த இடத்தில் லிங்கத் திருமேனி ஒன்று தோன்றியது. பிற்காலத்தில் அந்தக் கடம்பவனம், திருக்கடம்பூர் என்றானது; ஸ்தல விருட்சம், கடம்ப மரமாகத் திகழ்கிறது. ஸ்ரீவிநாயகர், அமிர்தத்தை மறைத்து வைத்த தலம், திருக்கடவூர் (திருக்கடையூர்). எனவே, இந்த இரண்டு தலங்களிலும் ஸ்வாமி யின் திருநாமம் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் என அழைக்கப்பட்டது. திருக்கடவூர் இறைவன் கால சம்ஹார மூர்த்தியாகவும், திருக்கடம்பூரில் சாந்த மூர்த்தியாகவும் அருள்கிறார். திருக்கடம்பூரிலும் மக்கள் மணிவிழாச் சடங்குகளைச் செய்து, இறையருளைப் பெறுகின்றனர்.
கடம்ப இலையின் சாற்றை எடுத்து, அதில் சீரகமும் சர்க்கரையும் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க, வயிற்றுப் பொருமல் மற்றும் அழற்சி நீங்கும்; அதிக தாகத்துடன் கூடிய ஜுரத்துக்கும் நல்லது. இலைச்சாறு வாய்ப்புண், தொண்டைப் புண் ஆகியவற்றைக் குணப்படுத்தும். 50 கிராம் பட்டையை நீரில் இட்டுக் காய்ச்சி அருந்தி வர, காய்ச்சல் குணமாகும். பட்டையை இடித்து, வலியுள்ள இடத்தில் வைத்துக் கட்டுப் போட்டால், வலி குணமாகும். ஜுரத்துக் கும், வயிற்றுப் போக்குக்கும் கடம்ப பழச்சாறுடன் சிறிது சர்க்கரை சேர்த்துக் கொடுப்பது நல்லது. இதன் விதையை அரைத்து நீரில் கலந்து குடித்தால், கடும் விஷமும் முறிந்துவிடும். விதையைப் பொடித்து மூக்கில் உறிஞ்ச, தலைவலி நீங்கும். பூக்களைச் சமையலுக்குப் பயன் படுத்தலாம். இதற்கு ரத்தத்தைச் சுத்தம் செய்யும் குணம் உண்டு.
மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் திருக்கோயில், குளித்தலை திருக்கடம்பூர் ஆலயத்திலும் தல விருட்சம், கடம்ப மரமே!
- விருட்சம் வளரும்...

No comments:

Post a Comment