Wednesday 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 34


வானில் ஈஸ்வரனின் திருக்கரம் (ஹஸ்தம்) போன்ற அமைப்பில், நட்சத்திரக் கூட்டம் ஒன்று இருக்கிறது. இதை ஹஸ்த நட்சத்திரம் என்பார்கள். இதன் கதிர்வீச்சு அதிகம் வெளிப்படும் திருநாளிலேயே விநாயக சதுர்த்தியைக் கொண்டாடுகிறோம்!
இந்த நட்சத்திரம்- கன்னி ராசி மற்றும் புதன் கிரகத்தின் ஆளுகைக்கு உட்பட்டது. புதன்கிழமை மற்றும் ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 22 வரையிலான நாட்களிலும் பிறந்தவர்கள், ஹஸ்த நட்சத்திரத்துக்குக் கட்டுப்பட்ட வர்கள். இந்த நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சு, அநேக நன்மைகளைத் தரவல்லது. அதேநேரம், இதன் தீய கதிர்வீச்சு தோல் நோய்கள், சர்க்கரை நோய், ரத்த மூலம், கர்ப்பப் பையில் கட்டிகள், குடல் புண், குடல் சம்பந்த மான நோய்கள், அதிக ரத்தப்போக்கு, மலச்சிக்கல் ஆகிய உபாதைகளுக்குக் காரணமாகும். இதுபோன்ற ஹஸ்த நட்சத்திர தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்குச் சிறந்த நிவாரணியாகத் திகழும் விருட்சம்- பன்னீர் மரம்.
ஹஸ்த நட்சத்திரத்துக்கு உகந்த பன்னீர் மரம், கீழை திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீஆரண்ய சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் ஸ்தல விருட்சமாகத் திகழ்கிறது. சீர்காழியில் இருந்து தென் கிழக்கில், காவிரிப்பூம்பட்டினம் செல்லும் வழியில், சுமார் 7 கி.மீ. தொலைவிலும்; திருவெண்காட்டில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிலும் உள்ளது இந்தத் தலம். சோழநாட்டில், காவிரி வடகரைத் தலமாகவும் திகழ்கிறது.
வழக்கத்துக்கு மாறாக ராஜகோபுரம் இன்றி, சிறு மண்டபம் போன்ற அமைப்புடனான ஆலய முகப்பும், சுற்றிலும் அமைந்த மரங்களும், அமிர்த தீர்த்தமுமாக... மிக அற்புதமாக அமைந்துள்ளது திருக்கோயில். இறைவன் ஸ்ரீஆரண்ய சுந்தரேஸ்வரர், சதுரபீட ஆவுடையாருடன் மேற்கு நோக்கி சந்நிதி கொண்டிருக்க, தெற்கு நோக்கிய வளாக அம்பாள் ஸ்ரீஅகிலாண்டநாயகியும் அருளாட்சி நடத்தும் ஆலயம் இது!
அசுர குருவாகிய துவட்டாவின் மகனான விசுவ ரூபன், தேவர்கள் அழிய வேண்டி தவம் இருந்தானாம். இதனால் வெகுண்ட இந்திரன், விசுவரூபனைக் கொன்றான். மகனை இழந்த துவட்டா, இந்திரனை அழிப்பதற்காக வேள்வி செய்தார். அதில் தோன்றியவனே விருத்திராசுரன். இவனை அழிக்க நினைத்த இந்திரன், ததீசி முனிவரின் முதுகுத் தண்டை ஆயுதமாகப் பெற்று, இந்த அசுரனை அழித்தானாம். இந்தப் பழியும் பாவமும் நீங்க, தேவேந்திரன் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டதாகப் புராணம் சொல்கிறது.
படைப்புக் கடவுளாம் பிரம்ம தேவன் இந்தத் தலத்தில் வியாக்ரபா தேஸ்வரர், கபாலீசர், அகத்தியீசர், முனீசர், சக்ரேஸ்வரர், பிரம்மேஸ்வரர் ஆகிய லிங்கமூர்த்தங்களை ஸ்தாபித்து வழிபட்டதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீபிரம்மேஸ்வர லிங்கத்தை வழி படுவோர், 100 அஸ்வமேத யாகங்கள் செய்த பலனைப் பெறுவார்களாம்.
நண்டு பூஜித்த விநாயகர், இந்தக் கோயிலின் சிறப்பம்சம். இந்தப் பிள்ளை யார் அமர்ந்திருக்கும் பீடத்திலும் நண்டு உருவம் அமைந்துள்ளதை தரிசிக்கலாம்.
கோயிலின் தெற்குப் பிராகாரத்தில், சுவர் சிற்பம் ஒன்று நம் கவனத்தை ஈர்க்கிறது. உற்று நோக்கினால், இந்தத் தலத்தின் திருப்பெயருக்குக் காரணமான ஆரண்ய முனிவரையும், அருகிலேயே மகாகாளரின் திருவுருவையும் காண முடிகிறது. இந்தத் தலத்தில் தனது வழிபாடு முடியும் வரை, தமக்குத் துணையாக அருகிலேயே இருந்து உதவுமாறு மகாகாளரை வேண்டிக்கொண்டாராம் முனிவர். அதற்கேற்ப, அரக்கர்கள் மற்றும் விலங்குகளால் எந்தவித ஆபத்தும் நேராமல், மகாகாளர் காவல் புரிந்ததாகவும் சொல்வர்.
கோயிலுக்குள் நுழைந்ததும் இடப்பக்கம் ஸ்ரீபிரம்மேசர், முனி ஈசர் என இரண்டு சிவலிங்கங்கள். அடுத்து ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீபைரவர், சூரியன் சந்நிதிகள். கருவறைச் சுவரின் வெளிப்புறத்தில், மன்னவன் ஒருவன் சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் உள்ளது. இந்த மன்னர் யாரென்ற தகவல் இல்லை. அதேபோல், ஸ்ரீதட்சிணா மூர்த்தி சந்நிதிக்கு அருகில் சுவரில் காது வைத்துக் கேட்டால், கடலோசை போலச் சத்தம் கேட்பது விசேஷ அம்சம்!
அதுமட்டுமா? பராசவன புராணம் சிறப்பாக விவரிக் கும் 12 சிவாலயங்களுள் (சிவபீடங்கள் என்கிறார்கள்) ஒன்றாகவும் கூறப்படுகிறது இந்த சிவாலயம்.
இந்தத் தலத்தின் விருட்சம், பன்னீர் மரம். பண்டைய காலத்தில் கோயில்கள், அரண்மனைகள் மற்றும் மாளிகைகள் கட்ட இந்த மரத்தைப் பயன்படுத்துவார்களாம். கூரைத் தளத்தில் சிறிய தராய்களைக் கொடுத்து, அந்த பாரத்தைச் சுமப்பதற்கு நடுவில் கெட்டியான சரம் கொடுப்பார்கள். அந்த சரம் அமைப்பதற்கு, உறுதிமிக்க பன்னீர் மரத்தைப் பயன் படுத்துவார்கள்.
ரோஜாப் பூக்களைக் கொண்டு பன்னீர் தயாரிப்பதை (ரோஸ் வாட்டர்) நாம் அறிவோம். இதேபோல், பன்னீர் மரத்தின் பூக்களைக் கொண்டு 'நீராவி’ தயாரிப்பார்கள். இதில் உள்ள நறுமணமும் மருத்துவ குணங்களும் ரோஜா மலர்களின் பன்னீர் போலவே இருப்பதால், இதற்கு 'பன்னீர் மரம்’ என்று பெயர் வந்தது. ஒருகாலத்தில் கோயில்களிலும் அரண்மனைகளிலும் வளர்க்கப்பட்ட பன்னீர் மரங்களை, தற்போது வெகுசில இடங் களில் மட்டுமே காணமுடிகிறது.
இந்த மரத்தின் பட்டை, மருந்தாகப் பயன்படுகிறது. நாள்பட்ட சீதபேதியை இது குணப்படுத்தும். குறிப்பாக, அமீபியாசிஸ் எனும் கிருமிகளால் அடிக்கடி உண்டாகும் சீதபேதியை இது குணப்படுத்தும். இது, நச்சுக்கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டது. வெட்டுக்காயம், சீழ் பிடித்த கட்டிகள் ஆகியவற்றைக் குணப்படுத்த, பாதிக்கப்பட்ட இடத்தின் மீது பன்னீர் மரப் பட்டையின் தூளை வைத்துக் கட்டுவார்கள். இது, அழுகிய புண்களை விரைவில் குணப்படுத்தும்.
- விருட்சம் வளரும்

No comments:

Post a Comment