திருப்புன்கூர்
அங்கே வயல்வெளியின் அருகில் புலைச்சேரியில் வசித்த நந்தனார், வெட்டிமைத் தொழில் செய்து வந்தார். சிவனாரின் கோயில்களில் உள்ள பேரிகை, மத்தளம் முதலான வாத்தியங்களுக்குத் தோலும், கட்டப்படும் வாரும், வீணை மற்றும் யாழ் போன்ற தந்தி வாத்தியங்களுக்கு நரம்பும் அளித்துத் தொண்டு செய்து வந்தார். முன்வினைத் தொடர்பாலும், உண்மையான பேரன்பினாலும், சிவபெருமான் திருக்கோயிலின் புறத்தே நின்று பக்திச் சிலிர்ப்பில் மெய்ம்மறந்து ஆடுவதும் பாடுவதுமாக வாழ்ந்து வந்தார்.
ஆதனூர் அருகில், ஸ்ரீசிவலோகநாதர் அருளும் திருப்புன்கூர் என்றொரு தலம் உள்ளது. அங்கே சென்று, கோயில் வாசலில் நின்று இறைவனைத் தரிசிக்க விரும்பினார் நந்தனார். அவரது அன்பாலும் தூய பக்தியாலும் மகிழ்ந்த சிவலோகநாதர், திருக்கோயிலின் துவார பாலகர் மூலம், தம்மை நந்தனார் தரிசிக்கும் விதம் சற்றே விலகியிருக்கச் சொல்லி நந்தியைப் பணித்தார்.
அவ்வாறே, அந்தக் கோயிலின் மிகப் பெரிய நந்தி விலகவும், சிவலோகநாதரை கண்ணாரக் கண்டு பேரின்பத்தில் திளைத்தார் நந்தனார். கண்களில் ஆனந்த அருவியாய் நீர் பெருக, சிரம் மேல் கரம் குவித்து இறைவனைத் தரிசித்து, பிறவிப் பயனைப் பெற்றார். அந்த மகிழ்ச்சியோடு கோயிலை வலம் வரும்போது, கோயிலின் மேற்குப்புறத்தில் மிகப் பெரிய பள்ளம் இருப்பதைக் கண்டார். அதனைத் திருக்குளமாக மாற்றினால், அடியார்கள் நீராடப் பயன்படுமே என எண்ணினார்.
அதன் பிறகு, ஒவ்வொரு முறை சிவலோக நாதரைத் தரிசிக்க வரும்போதெல்லாம் திருக்குளம் வெட்டவேண்டும் எனும் எண்ணம் மேலோங்கியது நந்தனாருக்கு. உதவிக்கு யாரும் இல்லாததால், சிவலோகநாதரைத் தியானித்து, திருக்குளத் திருப்பணி நிறைவேற அவரது அருளை வேண்டினார்.
'சற்றே விலகியிரும் பிள்ளாய்! சந்நிதானம் மறைக்குதாம்... நீ நற்றவம் புரியும் நம்மிடம் திருநாளைப் போவார் வந்திருக்கிறார்’ என்று நந்தியை விலகச் செய்து, நந்தனாருக்குத் தரிசனம் தந்த பரமன், அடியவரின் தூய எண்ணத்துக்கு உதவவும் வகை செய்தார். தம்முடைய மூத்த புதல்வராம் விநாயகரை அழைத்து, நந்தனாரின் குளம் வெட்டும் பணிக்கு உதவும்படி அனுப்பினார்.
ஆனைமுகனும் தட்டு, மண்வெட்டி சகிதம் ஒரு பணியாளைப் போன்று நந்தனாரிடம் வந்து, குளம் வெட்ட உதவுவதாகச் சொன்னார். தமது பூதகணங்களை விட்டு, பள்ளத்தின் நான்கு புறமும் அழகாக வெட்டி, மிகப் பெரிய திருக்குளத்தை உருவாக்கினார். திருக்குளப் பணி முடிந்ததும் பார்த்தால், பணியாளைக் காணவில்லை. நந்தனார் திகைத்தார். பிறகு, இறைவனார் இவரின் கனவில் காட்சியளித்து நடந்ததைக் கூற... இறையருளை எண்ணி வியந்து போற்றினார் நந்தனார்.
பிறகு, தில்லை நடராஜரைத் தரிசிக்க விருப்பம் மேலிட்டது நந்தனாருக்கு. தினமும் அவர் சிதம்பரத்துக்கு, 'நாளை போவேன்... நாளை போவேன்’ எனச் சொல்லிக்கொண்டிருப்பார். எனவே, நந்தனாருக்கு 'திருநாளைப்போவார்’ என்னும் திருநாமம் உண்டானது.
ஒரு நாள், தில்லைவாழ் அந்தணர்களின் கனவில் தோன்றிய ஸ்ரீநடராஜர், நந்தனாரை அழைத்து வந்து அக்னியில் மூழ்கச் செய்து, ஆலயத்துக்குள் அழைத்து வரும்படி பணித்தார். அவர்களும் அவ்வாறே செய்ய, ஸ்ரீநடராஜரைத் தரிசித்து அவருடன் திருவருளில் கலந்தார் நந்தனார். இதுதான் நந்தனார் எனப்படும் திருநாளைப்போவார் நாயனாரின் வரலாறு.
நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புன்கூர். புங்கமரம் ஸ்தல விருட்சம் ஆதலால், புன்கூர் என்ற திருப்பெயர் உருவானது. ஸ்ரீசௌந்தர்யநாயகி சமேத ஸ்ரீசிவலோகநாதர் அருளும் இந்தத் தலத்தை தேவார மூவரும் பாடியிருக்கிறார்கள். கோயிலின் முன்புறம் தேரடி அருகில் நின்று, ஸ்ரீசிவலோக நாதரைத் தரிசித்ததன் அடையாளமாக, நந்தனாரின் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், நமக்கு இடப்புறம்... திருக்குளம் அமைக்க இறையருள் வேண்டிப் பிரார்த்திக்கும் நிலையில், தியான கோலத்தில் காட்சி தருகிறார் நந்தனார்.
இந்தத் தலத்தின் மிகப் பெரிய நந்தி, கலையம்சம் நிறைந்தது. சுமார் 15 அடி நீளம்; 7 அடி அகலம்; 7 அடி உயரம் உடையது. மூலவருக்கு முன்புறம் உள்ள துவார பாலகர்களில், வலப்புறம் இருப்பவர் தலையைச் சற்றே இடப்புறம் சாய்த்து, ஸ்வாமி கூறுவதைக் கேட்கும் பாவனையில் அமைந்துள்ளது ரசிக்கத்தக்கது.இங்குள்ள ஸ்ரீநடராஜர் திருவடிவின் பாதத்தில், பஞ்சமுக வாத்தியம் இசைக்கும் தேவர் இருப்பது தரிசிக்கத்தக்கது.
நந்தனாருக்காகத் திருக்குளம் வெட்டும் திருப்பணிக்கு உதவிய 'குளம் வெட்டிய விநாயகர்’ சந்நிதி, வெளிப் பிராகாரத்தின் தென் மேற்கு மூலையில் அமைந்துள்ளது. கோயிலுக் குப் பின்புறம் மேற்கில் காணப்படும் 'ரிஷப தீர்த்தம்’, விநாயகர் உதவியுடன் வெட்டப் பட்ட திருக்குளமாகும். நந்தனாருக்கு அருளிய திருப்புன்கூர் ஸ்ரீகுளம் வெட்டிய விநாயகரையும், ஸ்ரீசிவலோக நாதரையும் தரிசிக்க, திருப்புன் கூருக்கு ஒரு முறை சென்று வாருங்களேன்!
- பிள்ளையார் வருவார்...
No comments:
Post a Comment