Sunday, 22 October 2017

முதல் வணக்கம் முதல்வனுக்கே! - 13

காஞ்சிபுரம்
சாற்றரிய ஆயிரக்கால் மண்டபத்தின் சார்வாக
ஏற்றமுடனே இனிதிருந்து- போற்றும்
விறல் விகட சக்ர விநாயகனை ஏத்தும்
திறல் விகட சக்ராயுதம்
ஏகாம்பரநாதர் உலா
(இரட்டையர் பாடியது)
ரு முறை, பெரும் யாகம் நடத்த ஏற்பாடு செய்தான் தட்சன். மருமகன் சிவனாரைத் தவிர, மற்ற அனைத்து தேவர்களையும் முனிவர்களையும் யாகத்துக்கு அழைத்திருந் தான். தாட்சாயினி யாகத்துக்குச் செல்லத் தீர்மானித்தாள். 'தட்சன் உன்னை மதிக்க மாட்டான்; அங்கு சென்று அவமானம் அடைய வேண்டாம்’ என்று அறிவுறுத்தினார் ஈசன். எனினும், அவரிடம் விண்ணப்பித்துக்கொண்டு, யாகத்துக்குச் சென்றாள் தேவி.
அவளைக் கண்ட தட்சன், ''உன்னை யார் அழைத்தது? உடனே திரும்பிச் செல்'' என்று அவளைப் பலவாறு அவமதித்தான். அவள் வருத்தத்துடன் கயிலைக்குத் திரும்பி, 'தட்சனின் யாகத்தை அழித்து, அவனுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்’ என்று ஈசனை இறைஞ்சினாள். உடனே, சிவனாரின் கழுத்தில் தங்கியிருந்த விஷத்தின் ஒரு கூறு, அவருடைய நெற்றிக் கண் வழியாக, 'வீரபத்ரர்’ எனும் வடிவில் கோபாவேசத்துடன் வெளிப்பட்டது. வீரபத்ரர், தட்சனின் யாகசாலைக்குள் புகுந்து, அனைவரையும் தாக்கி அழித்தார்.
இந்த நிகழ்வின்போது... முன்பு விஷ்ணுவுக்கு சிவபெருமான் கொடுத்த சுதர்சன சக்கரத்தை, வீரபத்ரர் அணிந்திருந்த வெண்டலை (கபாலம்) ஒன்று கவ்விக்கொண்டது. அதைக் கண்ட திருமாலின் சேனாதிபதியாகிய விஷ்வக்சேனன், 'வெண்டலையிடமிருந்து சுதர்சன சக்கரத்தைத் திரும்பப் பெற்று, திருமாலிடம் ஒப்படைக்க வேண்டுமே... அதற்கு என்ன செய்யலாம்?’ என்று யோசித்தார். ஓர் உபாயம் தோன்றியது. தம்முடைய கை-கால்களை வளைத்து, மூக்கு மற்றும் கண்களைக் கோணலாக அசைத்து, சில விகடக் கூத்துகளை ஆடினார். அதைக் கண்டு அனைவரும் சிரிக்க, வெண்டலையும் நகைத்தது. உடனே, அதன் வாயி லிருந்த சுதர்சன சக்கரம் பூமியில் விழுந்தது. சட்டென அதை எடுத்துக்கொண்ட விநாயகர், ஒன்றும் அறியாதவர் போல் நின்றிருந்தார். இதைக் கவனித்த விஷ்வக்சேனன், மீண்டும் விநாயகர் முன் விகடக் கூத்தாடி வேண்டினார்.
அந்தக் கூத்தை கண்ட விநாயகரும் சிரித்து, சுதர்சன சக்கரத்தை விஷ்வக்சேனனிடம் கொடுத்தார். எனவே, விநாயகருக்கு ஸ்ரீவிகட சக்ர விநாயகர் என்ற திருப்பெயர் உண்டா யிற்று. விகடக் கூத்து, தற்காலத்தில் கோணங்கிக் கூத்து என வழங்கப்படுகிறது.
'நகரங்களில் சிறந்தது காஞ்சி’ என்பார் காளிதாசன். உமையவள், கம்பை நதிக்கரை யில் மணலால் லிங்கம் அமைத்து, சிவ பூஜை செய்து, 32 அறங்களையும் வளர்த்தருளிய தலம் அது. பஞ்சபூத தலங்களில், பிருத்வி (மண்) தலமாகக் கருதப்படுகிறது. மாமரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட, இங்குள்ள ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு 'காஞ்சி மாவடி’ என்றும் பெயர். இந்தக் கோயிலின் ஆயிரக்கால் மண்டபத்தில் அருள்கிறார், ஸ்ரீவிகட சக்ர விநாயகர்! 'திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்...’ எனத் துவங்கி விகடச் சக்ர விநாயகரைத் தொழுது, கந்த புராணத்தைப் பாடத் துவங்குகிறார் கச்சியப்ப சிவாச்சார்யர்.
இந்த ஆயிரக்கால் மண்டபம், ஒரு காலத்தில் மிகச்சிறந்த தமிழ்ப் புலவர்கள் கூடும் இடமாகவும், நூல்கள் அரங்கேற்றும் இடமாகவும், இலக்கிய இலக்கணம் பயிலும் இடமாகவும் திகழ்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார் தமிழ்ப் பேராசிரியர் கா.அப்பாத்துரை.
14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் இரட் டைப் புலவர்கள் (ஒருவர் முடவர்; மற்றவர் பார்வையற்றவர்). இவர்கள் ஒரு முறை, காஞ்சியில் ஏகாம்பரநாதர் உலா எனும் பிரபந்தத்தை அரங்கேற்றத் துவங்கினர். காப்புச் செய்யுளில் வரும் ஆயிரக்கால் மண்டபமும், விகட சக்ர விநாயகரும் அங்கு காணப்படாததால், சபை யில் உள்ள புலவர்கள் ஏற்க மறுத்தனர். மண்டபத்தையும் கணபதியையும் காணாமல் நூலை அரங்கேற்றுவதில்லை என உறுதியேற்ற இரட்டையர், சிவத்தல யாத்திரைக்குச் சென்றனர்.
சில மாதங்கள் கழித்து திருப்பணிக்காக பூமியைத் தோண்டும்போது, மண்மூடிக் கிடந்த மண்டபத்தையும், விநாயகர் வடிவையும் கண்டு வியந்தனர். உடனே, காஞ்சிப் புலவர்கள் இரட்டைப் புலவர்கள் இருக்குமிடம் தேடிச் சென்று மன்னிப்பு வேண்டியதுடன், மீண்டும் காஞ்சிக்கு வரும்படி அழைத்தனர். இரட்டைப் புலவர்களும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, காஞ்சியை அடைந்து, ஏகாம்பரநாதர் உலாவை அரங்கேற்றி, சிறப்பு பெற்றனர்.
- பிள்ளையார் வருவார்...

No comments:

Post a Comment