Sunday, 22 October 2017

திருப்பட்டூர் அற்புதங்கள்! -10


'இந்த என்னுடைய வெற்றிக்கு, நானே காரணம்’ என்று நினைப்பது ஒருவகை. 'இறையருளே என்னை முயற்சி செய்யத் தூண்டியது; இறையருளே என் முயற்சிகள் அனைத்திலும் பக்கத் துணையாக இருந்து காத்தது’ என்று சொல்வது இன்னொரு வகை. முதல் வகை ஒருவனது கர்வத்தைப் பறைசாற்றும்; அடுத்த வகை, அவனுடைய இறைபக்தியை உணர்த்துவதாக இருக்கும். அந்தக் காலத்தில், மன்னர்கள் பலரும் இரண்டாவது வகையினராகத்தான் இருந்தார்கள். அதனால்தான், இன்றைக்கும் இறவாப் புகழுடன் திகழ்கின்றனர்.  
சைவமும் வைணவமும் செழித்து வளர்ந்த காலகட்டம் அது. குறிப்பாக, சோழ வளநாட்டில், மன்னர் பெருமக்கள் சிவாலயங்களைக் கட்டி வழிபடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். அதே காலகட்டத்தில் சாத்தனார் வழிபாடுகளும் இருந்ததாகத் தெரிவிக்கின்றன சங்கநூல்கள். படைகளைத் திரட்டிக் கொண்டு எதிரி தேசத்துக்குக் கிளம்புவதற்கு முன்னால், சாத்தனாருக்கு மிகப்பெரிய படையலைப் போட்டுவிட்டு, 'இந்தச் செயலை வெற்றியாக்கிக் கொடு!’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு, கிளம்புவார்கள் அரசர்கள். அதன்படி வெற்றியுடன் வந்ததும், முதல் வேலையாக சாத்தனாருக்கு வஸ்திரம் அணிவித்து, மலர்மாலைகள் சூட்டி, 'இந்த வெற்றிக்கு நீயே காரணம். உன்னுடைய அருளே காரணம்’ என்று சொல்லி, தங்கள் உடைவாளைக் கழற்றி, சாத்தனாரின் திருவடியில் வைத்து, வழிபடுவார்கள்; அவருக்குக் கோலாகலமாகப் படையல் நடைபெறும். அதேபோல், எதிரி தேசத்துக்கு படைதிரட்டிச் செல்லும்போது, தேசத்தின் எல்லை மண்ணெடுத்து, அந்த மண்ணை சாத்தனாரின் திருவடிக்கு அருகில் வைத்து, 'இந்த தேசத்து மன்னனும் வீரர்களும் அந்நிய நாட்டுக்குச் செல்கின்றனர். காடு- மேடுகளில் படுத்துறங்கி, கிடைக்கிற உணவைச் சாப்பிட்டு, ஆயுதங்களைக் கொண்டு போர் செய்யும் அவர்கள், நலமுடன் திரும்பி வர நீதான் அருள்புரியணும். அவர்கள் திரும்பி வரும்வரை, எதிரி தேசத்து காற்றுக்கூட புகாமல், நீதான் தேசத்தைக் காக்கணும்!’ என வேண்டிக்கொண்டு, விரதம் மேற்கொள்வாராம் சாமியாடி. அப்படி விரதம் இருக்கும் நாட்களில், சாத்தனாருக்கு அருகிலேயே குடிசை போட்டுக் கொண்டு, அங்கேயே பூஜை செய்வாராம் சாமியாடி. இந்தத் தருணத்தில், எதிரி தேசத்தில் இருந்து ஒரு ஈ- காக்கா கூட நுழைவதற்கு அனுமதிக்கமாட்டாராம் சாத்தனார். இப்படியாக... தேசம் செழிப்பதற்கும் நாட்டு மக்கள் சிறப்புடன் வாழ்வதற்கும் மண்ணும் பொன்னுமாக வளர்ந்து வளம் கொழிப்பதற்கும் அருளினார் சாத்தனார் என்கின்றன ஸ்தல புராணங்கள்.  
சாத்தனார் வழிபாடு மெள்ள மெள்ளப் பரவியது.  பல்லவ தேசத்திலும் பாண்டிய நாட்டிலும் சாத்தனாருக்கு விக்கிரகம் அமைத்து, வழிபடத் துவங்கினார்கள், மக்கள். மாசாத்தனாரின் பேரருளை வியந்தவர்கள், கருவூர்ச் சேரமான் சாத்தான், பாண்டியன் கீரஞ்சாத்தான், சோழ நாட்டுப் பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தான், ஒல்லையூர்கிழார் மகன் பெருஞ்சாத்தான் என, தங்களது பெயரில் சாத்தனாரின் திருநாமத்தையும் சேர்த்துக் கொண்டனர். சீத்தலைச் சாத்தனார், உறையூர் முதுகன்னன் சாத்தனார், பெருந்தலைச் சாத்தனார் போன்ற பெருமக்கள் பலரும் சாத்தனார் என்றும் மாசாத்தனார் என்றும் அழைத்து, ஆண்டவனை மனமுருகப் பிரார்த்தித்தனர்.
திருமண்டபமுடைய நாயனார் என சாத்தனா ரைப் போற்றி வணங்கியதாக சோழர் காலக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக சாத்தன், சாத்தனார், மாசாத்தனார் என அழைத்தது மாறி, சாஸ்தா என வடமொழியில் அழைத்து அவரை வணங்கினர் சிலர். ஒரு சாரார், அய்யனார் எனத் தமிழில் திருநாமம் சூட்டி, வழிபட்டனர்.
அய்யனார் கோயில் என்றால் ஊரின் எல்லையில்தானே அமைந்தி ருக்கும்? ஒரு சின்ன மேடையில், பெரிய பரந்தவெளியில், மேற்கூரையின்றிக் கோயில் கொண்டிருக்கும் அய்யனார்தானே நம் கண் முன்னே வருகிறார்? பிரமாண் டமான, கற்றளிக் கோயிலாகத் திகழும் அய்யனார் கோயிலை அறிந்திருக்கிறீர்களா நீங்கள்?
தமிழ்கூறும் நல்லுலகில், திருச்சிக்கு அருகில்,  திருப்பிடவூர் என்றும் திருப்பட்டூர் என்றும் போற்றப்படுகிற தலத்தில், ஸ்ரீஅய்யனாருக்கு பிரமாண்ட ஆலயம் அமைந்துள்ளது. இங்கே குடிகொண்டிருக்கும் சாத்தனார்தான், 'திருக் கயிலாய ஞான உலா’ அரங்கேறுவதற்காக, கையில் ஓலைச்சுவடிகளுடன் இங்கும் அங்குமாக இந்தத் தலத்தில் பரபரத்திருந்தவர்.  
திருக்கரத்தில் 'திருக்கயிலாய ஞான உலா’ சுவடிகளை ஏந்தியபடி, இந்தத் தலத்தின் கருவறையில் காட்சி தரும் அவரை வணங்குங்கள்; முடிந்தால் வஸ்திரம் சார்த்துங்கள்; கூடவே, இனிக்க இனிக்க சர்க்கரைப் பொங்கல் அல்லது குளிரக் குளிர தயிர்சாதம் அல்லது மணக்க மணக்கப் புளியோதரை என ஏதேனும் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். வாழ்வின், அடுத்தடுத்த தருணங்களில், அவரின் அருளாடலை உணர்வீர்கள்!
- பரவசம் தொடரும்

No comments:

Post a Comment