திருநாலூர் மயானம் கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயிலாகும். காவிரியின் தென்கரையில் 96 ஆவது தலமாகப் போற்றப்படுகிறது. இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் கும்பகோணம்- குடவாசல் சாலையில் திருச்சேறையை அடுத்து அமைந்துள்ளது. இவ்வூர் முன்பு சதுர்வேதிமங்கலம் என்றும், நால்வேதியூர் என்றும் அழைக்கப்பட்டு பின்னர் மருவி திருநாலூர் ஆனதான தலவரலாறு கூறுகிறது.
நாலூர் மயானத்தைப் போல தமிழ்நாட்டில் மயானம் என்ற பெயரில் உள்ள கோயில்கள் கச்சிமயானம், கடவூர்மயானம், காழிமயானம் என்பனவாகும். நாலூர் மயானம் ஞானசம்பந்த சுவாமிகளால் பாடப்பெற்ற பெருமையுடையது. (இக்கோயிலின் தென்மேற்கே நாலூர் என்ற வைப்புத்தலம் உள்ளது) தலம், மூர்த்தி, தீர்த்தம் என்ற மூன்று வித நிலைகளிலும் பெருமை பெற்றது திருநாலூர் மயானமாகும். இக்கோயிலின் தீர்த்தம் சந்திர தீர்த்தமாகும்.
மூலவர் பலாசவனேஸ்வரர் என்ற பெயருடன் சுயம்பு திருமேனியுடன் அருள்பாலித்து வருகிறார். மோட்சமடைய விரும்பிய பிரமன் பூஜித்து முக்தியடைந்ததால் இம் மூலவர் பிரம்ம முக்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். மகாவிஷ்ணுவும் ஆபஸ்தம்ப ரிஷியும் பூஜித்த தலமாகும். அம்பாள் பிரஹன்நாயகி எனப்படும் பெரியநாயகி ஆவார். மூலவர் சந்நிதியின் இடது புறம் அம்பாள் சந்நிதி உள்ளது.
மூலவருக்கு எதிரில் நந்தியும் பலிபீடமும் காணப்படுகின்றன. உயர்ந்த தளத்தில் உள்ள இக்கோயிலின் திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளனர். வலதுபுறம் இக்கோயிலின் தலமரமான பலாமரம் உள்ளது. படிகளில் ஏறிய பின்னர்தான் கோயிலையே காணமுடியும். மாடக்கோயிலாக உயர்ந்ததளத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
இங்கு, சூரியபகவான் சித்திரை மாதம் 3,4,5 ஆம் தேதிகளில் தனது ஒளிக்கதிர்களால் இறைவனை பூஜை செய்யும் அரிய காட்சியைக் காணலாம்.
No comments:
Post a Comment