Sunday 22 October 2017

திருப்பட்டூர் அற்புதங்கள்! - 13

இறையருளைத் தேடி..!


'அப்பாடா...’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடாதவர்களே இல்லை என்று சொல்லலாம். மிகப் பெரிய படபடப்புக்குப் பிறகு, அந்த இறுக்கத்தில் இருந்து கிடைக்கிற நிதானத்தை நம் மூச்சுக்காற்று மெல்லியதாக வரவேற்கிற அந்தச் சுகத்தை அனுபவிக்காதவர்களே இருக்க முடியாது.
பூரண சந்தோஷம் என்பது மட்டுமே மிகப் பெரிய சுகானுபவம் இல்லை; அதேபோல், துக்கித்துக் கிடக்கிற நிலையும் மிக வேதனைக் குரியதல்ல! சந்தோஷத்துக்குப் பின்னாலேயே வருகிற துக்கமானது, நம்மை ஒரேயடியாக நிலைகுலையச் செய்துவிடும். அதேபோல், துக்கத்துக்கு பின்னே வருகிற சிறியதொரு குதூகலமும் மிகப் பெரிய நிம்மதியைத் தரக்கூடியது. அந்த நிம்மதிக்கு இணையே இல்லை. 'போன உசுரு இப்பத்தான் திரும்பி வந்ததுபோல இருக்கு’ என்று உள்ளுக்குள் பேரமைதியும் நிதானமும் வருகிற அந்த நிலை, மிக மிக உன்னதமானது; உயிர்ப்பானது!
திருப்பிடவூர் எனப்படும் திருப்பட்டூரில், மகிழ மரத்தடியில், ஒரு பிரதோஷ வேளையில்... 11 சிவலிங்கத் திருமேனிகளை வைத்து, இடையறாது பூஜித்து வந்த ஸ்ரீபிரம்மாவுக்கு, 'அப்பாடா’ என்கிற நிம்மதி, உள்ளுக்குள் சுடர் விட்டது; மெள்ளப் பிரகாசிக்கத் துவங்கியது. இழந்த தலையைப் பெறுகிறோமோ இல்லையோ... இழந்த படைப்புத் தொழில் திரும்பக் கிடைக்குமோ கிடைக்காதோ... ஆனால், சிவப் பரம்பொருளின் பேரருள் கிடைக்கப் போகிறது என்பதை உணர்ந்தார் ஸ்ரீபிரம்மா. 'என் சிவனே... என் சிவனே’ என்று கண்கள் மூடி, அரற்றியபடியே இருந்தார். இந்தத் திருத்தலம், மிகப்பெரிய உன்னதமான இடத்தை நோக்கி நகரப் போகிறது என்பதை சூட்சுமமாக அறிந்தார். நமசிவாய மந்திரத்துக்குள் இன்னும் இன்னும் கரைந்து போனார். 'அடடா, 11 சிவலிங்கத் திருமேனிகள்... 11 புண்ணியத் தலங்கள்..! சிவனாரின் விளையாட்டு, இங்கு அரங்கேறுவதில் என் பங்கும் இருக்கிறதா? என்ன கொடுப்பினை, என்ன கொடுப்பினை!’ என உள்ளே நெகிழ்ந்து போனார் ஸ்ரீபிரம்மதேவன்.
திருச்சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் ஸ்ரீதாயுமானவர், காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரர், திருஆனைக்கா ஸ்ரீஜம்புகேஸ்வரர், கயிலையில் அருளோச்சும் ஸ்ரீகயிலாசநாதர், திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர், காளஹஸ்தியின் ஸ்ரீகாளத்திநாதர், லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர், ஊட்டத்தூர் ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் (தூயமாமணீஸ்வரர்), விருத்தாசலம் ஸ்ரீபழமலைநாதர் மற்றும் ஸ்ரீபாதாளேஸ்வரர், ஸ்ரீமண்டூகநாதர் என 11 தலங்களில் உள்ள
11 லிங்கத் திருமேனிகள் ஒருசேர உறைந்திருக்கும் அற்புத க்ஷேத்திரம், திருப்பட்டூர். 12-வது சிவலிங்கத் திருமேனி- ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்.
மனம் கனிந்த பூரிப்பும் நிறைவுமாக சிவனாரையே நினைந்து, தவத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீபிரம்மாவைச் சுற்றி, மெல்லிய நறுமணம் சூழ ஆரம்பித்தது. இருள் கவிந்திருந்த அந்த வேளையில், அவர் அமர்ந்திருந்த இடத்தில் மட்டும், எதிரில் வெளிச்சப் பாய் ஒன்று
மெள்ள விரிந்தது. அந்த வெளிச்சம், மூடிய கண்களையும் கடந்து உள்ளே சென்று, ஏதோ செய்தது. 'ம்... கண்ணைத் திற’ என்று கட்டளையிடுவது போல் இருந்தது அது. பிரம்மதேவர் மெள்ள இயல்பு நிலைக்கு வந்து,  கண்களைத் திறந்தார். எதிரில் விரிந்திருந்த வெளிச்சத்தை அவரால் பார்க்க முடியவில்லை. என்னதான் படைப்புக் கடவுளாக இருந்தாலும், சிவப் பரம்பொருளின் சாபத்துக்கு ஆளாகி, தொழிலும் அற்ற நிலையில் இருந்ததால், வெறும் சாமானியராகிவிட்டார்!
'இன்னும் என்ன விளையாட்டு? பாவம், பிரம்மன்!’ என்று அவரின் நிலைக்காகப் பரிதாபப்பட்டாள் ஸ்ரீபார்வதிதேவி. மெள்ளப் புன்னகைத்தார் சிவனார். 'நீ சொன்னதால்தானே இங்கு வந்தேன்? படைப்புத் தொழில் ஸ்தம்பித்துவிட்டால், இவ்வுலகம் என்னாவது என்று நீ புலம்பியதால்தானே உனது கோரிக்கையை ஏற்றேன்’ என்பதுபோல் உமையவளைப் பார்த்தார் சிவனார்.
அந்த வெளிச்சத்தின் மையத்தில், மிகப் பிரமாண்டமான பேரொளி வந்து விழுந்தது. சட்டென்று அந்த இடத்தில், ஆங்காங்கே நின்றிருந்த சிவகணங்கள் அனைவரும் ஒன்று கூடினர். அந்தப் பேரொளியில் இருந்து, அகிலாண்ட நாயகியுடன் ரிஷப வாகனத்தில் அமர்ந்தபடி காட்சி தந்தார் சிவனார்.
'என் சிவமே... என் சிவமே...’ என்றபடி, தன் தலைகளுக்கும் மேலே திருக்கரங்கள் தூக்கிக் கூப்பியபடி, விழுந்து நமஸ்கரித்தார்
பிரம்மன். 'சாபத்தில் இருந்து விமோசனம் பெறும் தருணம் வந்துவிட்டது. கர்வத் தாலும் ஆணவத்தாலும், செருக்காலும் சினத்தாலும் பிழையாகப் பேசிய என்னை மன்னியுங் கள் ஸ்வாமி!’ என்று வேண்டினார் ஸ்ரீபிரம்மா.
அதற்குள் அங்கே... தேவர்களும் முனிவர்களும் சூழ்ந்துவிட்டனர். 'அப்பாடி... பூவுலகில் படைப்புத் தொழில் இனி குறையற நடைபெறப் போகிறது. பிறப்பும் இறப்புமாகக் கொண்ட உயிர்களின் வாழ் வியல் சுழற்சி, தங்குதடையின்றி இனி நடந்தேறப் போகிறது’ என்று தேவர்களும் முனிவர்களும் பரஸ்பரம் பேசிக் கொண்டனர். அந்தப் பேச்சு, சந்தோஷத்தைக் கொடுத்தது. அந்த சந்தோஷம், அனைவருக்கும் பரவியது. சட்டென்று சொல்லி வைத்தது போல், 'தென்னாடுடைய சிவனே போற்றி...’ என்று எவரோ முதல் குரல் கொடுக்க... 'எந்நாட்ட வர்க்கும் இறைவா போற்றி’ என்று அனைவரும் பதில் குரல் எழுப்பினார்கள்.
'பிரம்மதேவரே... கலக்கம் வேண்டாம். சிவப் பரம்பொருள் உங்களை மன்னித்தருள சித்தம் கொண்டு விட்டார். இனி, வழக்கம்போல் உமது படைப்புத் தொழிலை சிரத்தையாகச் செய்யத் துவங்குங்கள்’ என உமையவள் கனிவும் கருணையுமாகச் சொல்ல... பிரம்மாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. 'என் பாக்கியம், என் பாக்கியம்’ எனக் கரம் குவித்து வணங்கினார். பதவியில் இருப்பது மிகப் பெரிய விஷயமில்லை. அந்தப் பதவியை இழக்க நேரிடுவதும் இந்த உலகில் நடப்பதுதான்! ஆனால், இழந்த பதவியை, நசிந்த தொழிலைத் திரும்பப் பெறுவது என்பது, அளவிடற்கரிய ஆனந்தம்; அளப்பரிய சந்தோஷம்!
ஆனால், ஈசன் சும்மா கொடுத்துவிடுவாரா விமோசனத்தை?! திருப்பிடவூர் தலத்துக்கு இன்னும் மகிமையைத் தரத் திருவுளம் கொண்டவர்,  பிரம்மா விடம் கட்டளை போலும் அந்த விஷயத்தைச் சொன்னார்.  
- பரவசம் தொடரும்

No comments:

Post a Comment