அனுஷ நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகள், ஆரோக்கியமான பாலுணர்வையும் குழந்தை பாக்கியத்தையும் தரவல்லவை. கெட்ட கதிர்வீச்சுகள், பாலுணர்வுக் குறைபாடுகள், மலட்டுத் தன்மை, தேக பலவீனம் ஆகியவற்றை ஏற்படுத்தும். இதனை அனுஷ நட்சத்திர தோஷம் என்பர். இந்த தோஷத்தில் இருந்து விடுபட, சதுரக்கள்ளி மரம் உதவுகிறது. இந்த மர நிழலில் தினமும் அரைமணி நேரம் இளைப்பாறினால், தோஷம் நிவர்த்தியாகும்!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இருந்து சுமார் 48 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புனவாசல். இந்தத் தலத்தின் நாயகன் ஸ்ரீபழம்பதி நாதர் என்கிற ஸ்ரீவிருத்தபுரீஸ்வரர்; அம்பாள்- ஸ்ரீகச்சணி மாமுலையம்மன் என்கிற ஸ்ரீபிரஹன் நாயகி. தஞ்சை பெரியகோயில், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயங்களில் உள்ள மூலவருக்கு அடுத்ததாக இங்கேயுள்ள மூலவர் பிரமாண்டத் திருமேனியராக (சுமார் 9 அடி உயரம்; 30 அடி சுற்றளவு) காட்சி தருகிறார்.
சுமார் 2,000 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம்; ஸ்வாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளுக்கு எதிரில் ஐந்து நிலை ராஜகோபுரங்கள். அம்பாள் சந்நிதி கோபுரத்தில் ஸ்ரீகாளி குடிகொண்டிருப்பதால், இந்த வாசல் அடைக்கப்பட்டே இருக்கிறது.
இங்கே... ஸ்ரீசூரியனார் இருக்குமிடத்தில் ஸ்ரீசந்திரனும், அவர் இருக்க வேண்டிய இடத்தில் ஸ்ரீசூரியனும் காட்சி தருகிறார்கள். ஸ்ரீதட்சிணாமூர்த்தி தனது திருக்கரத்தில் பாம்புடன் காட்சி தருகிறார். கோஷ்டத்தில் மகாவிஷ்ணுவுடன் ஸ்ரீஅனுமனும் இருப்பது விசேஷம். ஸ்ரீபிரம்மா மற்றும் ஸ்ரீவிஷ்ணுவுக்குத் தனித்தனிச் சந்நிதிகள் உண்டு. கடும் உக்கிரத்து டன் வீற்றிருக்கும் குடைவரைக் காளிதேவியை கண்ணாடி வழியே தரிசிக்கலாம். திங்கட்கிழமை களில் மட்டும் பூஜிக்கப்படுகிற ஸ்ரீஅகத்தியர், கபில புத்திரர்கள் ஒன்பது பேரின் விக்கிரகங்கள் என இங்கு அற்புதங்கள் ஏராளம்!
மதுரை, திருப்புனவாசல், திருக்குற்றாலம், ஆப்பனூர், திருவேடகம், திருநெல்வேலி, ராமேஸ்வரம், திருவாடானை, திருப்பரங்குன்றம், திருச்சுழி, திருப்பத்தூர், காளையார்கோவில், பிரான்மலை மற்றும் திருப்புவனம் ஆகிய 14 தலங்கள் சிறப்புக்கு உரியவை. அவற்றில், திருப்புன
வாசல் தலத்தைத் தரிசித்தால், மற்ற தலங்களுக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்! திருப்புனவாசலில் இருந்து சுமார் 7 மைல் தூரத்துக்கு எமன் மற்றும் எமதூதர்கள் எவரும் உள்ளே வரமுடியாது என்பது ஐதீகம்!
நான்கு விருட்சங்கள், இந்தத் தலத்துக்கு உண்டு. கிருத யுகத்தில், சதுரக்கள்ளி; திரேதா யுகத்தில் குருந்த மரம்; துவாபர யுகத்தில் மகிழ மரம் ஆகியன தல விருட்சமாகத் திகழ்ந்துள்ளன; கலியுகத்தில் புன்னை மரம்!
சதுரக்கள்ளிக்கு, வச்சிரம் எனப் பெயர் உண்டு. கோயிலைச் சுற்றியுள்ள பத்துத் தீர்த்தங்களிலும் நீராடி, இறைவனை வணங்கினால், அனைத்துப் பாவங்களும் நீங்கும் என்கின்றனர், பக்தர்கள். திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரரால் பாடப் பெற்ற தலம் இது! சதுரக்கள்ளி, தோல் நோய்க்கு சரியான நிவாரணி. சளி மற்றும் வாதத்தைக் குணமாக்க வல்லது. மரு இருக்குமிடத்தில், சதுரக்கள்ளியால் செய்யப்படும் தைலத்தை ஒரேயரு சொட்டு விட்டால், மரு மறைந்துவிடும். மலச்சிக்கலுக்கும் நெஞ்சுச் சளிக்கும் மருத்துவ ஆலோசனையுடன் சதுரக்கள்ளியைப் பயன்படுத்துவார்கள். நரம்பு வியாதிகளான பாரிச வாயு, கை- கால் விளங்காமை, மயக்க நிலை, கை- கால் மரத்துப் போதல், நடுக்கம், சிறுநீர் அடைப்பு ஆகிய நோய்களையும் சதுரக் கள்ளி குணப்படுத்தும்.
- விருட்சம் வளரும்...
பதவி உயரும்; சுகப் பிரசவம் நிகழும்!
''தினமும் ஆறு கால பூஜை, கார்த்திகை சோமவாரத்தில் 1008 சங்காபிஷேகம், வைகாசித் தேரோட்டம் என அமர்க்களப்படும் ஆலயம் இது'' என்கிறார் கோயிலின் தலைமை அர்ச்சகர் ராமநாத குருக்கள்.
''இங்கு வந்து வழிபட்டால், தீராத நோயும் தீரும்; உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். குடைவரைக் காளியை வணங்கினால், குழந்தை பாக்கியம் நிச்சயம்! மாறுதல், பதவி உயர்வு கிட்டும். மேலும், வளைகாப்பின் போது, காளிதேவிக்கு இரண்டு வளையல்களைக் கொண்டு வைத்து, வழிபட்டால்... சுகப்பிரசவம் நிகழும் என்பது ஐதீகம்''.
அங்காரக தோஜம் விலகும்!
சைவ புராணத்தில், 'ஏகாதச ருத்ர சம்ஹிதை’யில் விரிவாகக் கூறப்பட்டுள்ள தலங்க ளுள் இந்தத் தலமும் ஒன்று. உமையவளின் அறிவுரைப்படி, ஸ்ரீபிரம்மா இந்தத் தலத்துக்கு வந்து, இறைவனை வணங்கி, இழந்த படைப்புத் தொழிலைப் பெற்றார் என்கிறது ஸ்தல புராணம். நாரதரின் அறிவுரைப்படி, அங்காரகன் இந்தத் தலத்துக்கு வந்து, பத்துத் தீர்த்தங்களிலும் நீராடி இறைவனையும் அம்பிகையையும் வணங்கி, இழந்த சக்தியையும் ஒளியையும் பெற்றான் என்பர். எனவே, நாமும் அதே போல் இங்கேயுள்ள பத்துத் தீர்த்தங்களிலும் நீராடி, சிவ தரிசனம் மேற்கொண்டால், இழந்த பதவியைப் பெறலாம்; அங்காரக தோஷம் முதலான சகல தோஷங்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
|
No comments:
Post a Comment