இந்தக் காலங்களில், பூரட்டாதி நட்சத்திரத்தின் கதிர்வீச்சுகள், அதிக அளவில் பூமியில் விழும். அதன் நல்ல கதிர்வீச்சுகள், நன்மைகளையும்- கெட்ட கதிர்வீச்சு கள், நோய்களையும் தோஷங்களையும் தரவல்லன. ஆகவே, பூரட்டாதி நட்சத்திரக் காரர்கள், தினமும் ஈச்சை மர நிழலில் அரை மணி நேரம் இளைப்பாறினால், இவற்றில் இருந்து விடுபடலாம்.
ஈச்சங்குடி ஸ்ரீகாருண்யவல்லி அம்பிகை சமேத ஸ்ரீகர்ஜபுரீஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம்- ஈச்சை மரம். தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் அமைந் துள்ளது ஈச்சங்குடி. 'கர்ஜுரம்’ என்றால் ஈச்சை என்று அர்த்தம். காவிரியின் வடகரையில் உள்ளது இந்தத் தலம்.
இந்தத் தலத்து இறைவன், அர்ஜுனனுக்கு திருக்கயிலாயக் காட்சியைக் காட்டி அருளியதாக, பாடல் ஒன்று உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடையும் தருணத்தில், ஸ்ரீகர்ஜபுரீஸ்வரரை வணங்கி வழிபட்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இங்கேயுள்ள சிவனாரை, கூர்மாவதாரத்தின்போது மகாவிஷ்ணு வழிபட்டார். எனவே, இங்கு வந்து வணங்கினால், வாஸ்து தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்! ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன் மற்றும் நவக்கிரகங்களுக்கும் சந்நிதிகள் உள்ளன. அம்பிகை ஸ்ரீகாருண்யவல்லியின் இடுப்பில், சிம்ம உருவம் தாங்கிய ஒட்டியாணம் உள்ளது சிறப்பு என்பர்.
ஈச்சங்குடியில், கோயில் இருக்கிற தெருவில் வசித்து வந்த மகாலட்சுமி அம்மாள் என்பவர், ஞானம் நிறைந்த குழந்தையை வரமாகக் கேட்டு, தினமும் கோயிலுக்கு வந்து மனமுருகிப் பிரார்த்தனை செய்து வந்தாராம். அதன்படியே, அவருக்கு அழகும் ஞானமும் கொண்ட குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை, காஞ்சி மகா பெரியவா என்று அழைக்கப்படும் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அவர் பிறந்த இல்லம், தற்போது வேத பாடசாலையாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஈச்சை மரத்தில் சிற்றீச்சை, பேரீச்சை என இரண்டு வகை உண்டு. சிற்றீச்சை மரத்தின் பிசினை, நீரில் கலந்து சிறிதளவு சாப்பிட்டால், அஜீரணம், பேதி மற்றும் சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் நீங்கும். ஈச்சங்
கொட்டையைப் பால் அல்லது தண்ணீரில் தேய்த்து, சிறிது கண்ணில் தீற்றினால், கண்ணில் விழும் பூ குணமாகும். ஈச்சங் குருத்தைத் தின்பதால், பெண்கள் மாதவிலக்குப் பிரச்னைகளில் இருந்து விடுபடுவார்கள். ஈச்சம் பாயில் உறங்கினால் உஷ்ணம் உண்டாகும்; பித்தம் நீங்கும்; கபம் அகலும் என்பர்.
பேரீச்சம்பழச் சதையில் இரும்புச் சத்து நிறையவே உள்ளது. இதைச் சாப்பிட, ஆண்மைக் குறைபாடும், நரம்புத் தளர்ச்சியும் நீங்கும். பேரீச்சம் பழத்தில் சர்க்கரைச் சத்து அதிகம் உண்டு; எனினும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தினால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதில்லை! காய்ச்சல், அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாலுடன் பேரீச்சம்பழத்தையும் சேர்த்துக் கொடுப்பது ஆரோக்கியத்தைத் தரும்.
No comments:
Post a Comment