Wednesday 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 17

                                                                  கருங்காலி.

வான மண்டலத்தில், தேள் வடிவில் காட்சி தரும் நட்சத்திரக் கூட்டத்தை 'விருச்சிகம்' என்பர். இந்த ராசி மண்டலம், உடலில் இனவிருத்தி உறுப்புகளுடனும், பஞ்ச பூதங்களில் நீருடனும் தொடர்புகொண்டது.
விருச்சிக ராசிக்காரர்கள் பயந்த சுபாவமும், நிலையான குணமும் கொண்டவர்கள். செவ்வாய்க்கிழமைகள், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரையிலான நாட்கள், அஸ்வினி, பரணி, விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள், மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளில் பிறந்தவர்களுக்கு நலம் தரும் விருட்சம்- கருங்காலி. விருச்சிக ராசியின் மின்கதிர் வீச்சுகளைத் தன்னில் சேகரித்துவைத்து, தன்னைத் தொடுவோருக்கும் தனது நிழலில் அமருவோருக்கும் அந்தக் கதிர்வீச்சுகளை மாற்றி விடுகிறது கருங்காலி. செவ்வாய் தோஷத்தை நீக்குவதில் கருங்காலிக்கு முக்கிய இடம் உண்டு. வானியல் சாஸ்திரமும், 'கருங்காலி வகை முள் மரங்கள், தோஷத்தை நீக்கச் சிறந்த மருந்து' என்கிறது.
செவ்வாய் கிரகத்தின் பாதிப்பு, உச்சந்தலை முதல் கழுத்து வரையிலும்... கண் அழற்சி, வீக்கம், ரத்த வாந்தி, பசியின்மை, தொழு நோய், வெண் குஷ்டம், மூலம், சர்க்கரை நோய், தேக பலவீனம் என்று பாதிப்புகளை ஏற்படுத்தும். இவை அனைத்துக்கும் அருமருந்தாக விளங்குகிறது கருங்காலி மரம். இந்த மரத்தை விருட்சமாகக் கொண்ட தலம் திருமாகாளம் எனும் அம்பர் மாகாளம். நன்னிலம் தாலுகா, பூந்தோட்டத்துக்கு அருகில் உள்ள இந்தத் தலத்தில் கோயில்கொண்டிருக்கும் ஸ்வாமி- ஸ்ரீமகாகாளநாதர்; அம்பாள் - ஸ்ரீபயக்ஷயாம்பிகை (பயத்தைப் போக்குபவள்). மனிதனது ஆயுள் நீட்டிப்புக்கான தலம் இது. உஜ்ஜயினி மாகாளம், அம்பர் மாகாளம் மற்றும் இரும்பை மாகாளம் ஆகிய தலங்களில், அம்பர் மாகாளத்தைத் தரிசிக்க, அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.
ஸ்வாமி சந்நிதிக்கு வலதுபுறம் அம்பிகை சந்நிதி கொண்டிருக் கிறாள். இங்கு மோட்ச லிங்கம், ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி, ஸ்ரீநீலோத்பலாம்பாள், ஸ்ரீநரமுக விநாயகர், ஸ்ரீநரமுக முருகன் ஆகியோரும் அருள்கின்றனர்.
ஒருமுறை, அம்பல் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரைத் தரிசிக்க வான் வழியே சென்ற துர்வாசரை கண்டு, அவர் மீது மையல் கொண்ட மதலோலை என்பவள், ''எனக்குப் புத்திரப் பேறு அருளுங்கள்' எனப் பிரார்த்தித்தாள். துர்வாசரும் 'அப்படியே ஆகட்டும்' என வரம் தந்தார். மதலோலை வரம்கேட்டது, மதியப்பொழுது. ஆகவே, அவள் கருவுற்ற நேரமும் மதியமானது.
நடுவானில், அம்பன், அம்பாசுரன் எனும் இரண்டு அசுர குணமுள்ள ஆண் குழந்தைகளை ஈன்றெடுத்தாள்!
மகவு ஈன்றதும், தாயின் மார்பகம் சுரந்தது. குழந்தைகளை அள்ளியெடுத்துப் பால் கொடுக்க முனைந்தாள். அந்தக் குழந்தைகள் தாய்ப்பாலுடன், அவளது ரத்தத்தையும் சேர்த்து உறிஞ்சின. தாய் துடித்தாள்! ஆனாலும், தன்னுடைய குழந்தைகள் என்பதால், பொறுத்துக் கொண்டாள். பின்பு, ''நீங்கள் பிரம்மபுரீஸ்வரரை வழிபடுங்கள்!'' என அவர்களுக்கு வழிகாட்டிவிட்டு, அவர்களிடமிருந்து பிரிந்து சென்றாள்.
அதையடுத்து, அம்பனும் அம்பாசுரனும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரை தினமும் வழிபட்டனர். வில், வாள் மற்றும் மல்யுத்தங்களில் தேர்ச்சி பெற்றனர். தங்களது அசுர குணத்தால், கண்ணில் பட்டவரையெல்லாம் அழிக்க முற்பட்டனர். அவர்களது கொடுமையைப் பொறுக்காத தேவர்களும் முனிவர்களும் மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர். அவர்களது துயரம் தீர்க்க முடிவுசெய்த ஈசன், தனது கடைக்கண்ணால் பார்வதியாளைப் பார்த்தார். அதன் பொருளை உணர்ந்த அம்பிகை, மோகினி உருவெடுத்தாள். அவளுடன் மகாவிஷ்ணு வயோதிக உருவத்தில் சென்றார். அம்பலில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்றவர்கள் அங்கே அமர்ந்தனர்.
அங்கே வந்த அனைவரும் மோகினியின் அழகைக் கண்டு வியந்தனர். விஷயமறிந்த அம்பனும் அம்பராசுரனும் பெருமாள் கோயிலுக்கு வந்தனர். மோகினியின் அழகில் மயங்கி, திருமண விருப்பத்தைத் தெரிவித்தனர். ''இருவரையும் மணக்க இயலாது; உங்களில் எனக்குப் பொருத்தமானவர் எவர் என நீங்களே முடிவு செய்யுங்கள்'' என்றாள் மோகினி. அவ்வளவுதான்...
சகோதரர்கள் இருவருக்கும் சண்டை மூண்டது. இறுதியில் அம்பராசுரனைக் கொன்றான் அம்பன். அதன்பின், மோகினியாள் பத்ரகாளியாக உக்கிரத்துடன் தோன் றினாள். உடனே அம்பன், எருமைக் கிடாவாக மாறினான். அப்படி அவன் உருமாறிய இடம், கிடாமங்கலம் (கோயில் திருமாகாளத்துக்குக் கிழக்கே, காரைக்கால் செல்லும் வழியில் உள்ளது) எனப்படுகிறது. அசுரன் அம்பனை, காளிதேவி விரட்டிச் சென்று அழித்த இடம் அம்பகரத்தூர் என்றானது.
அசுரவதம் முடிந்தது என்றாலும், அம்பன்- அம்பராசுரன் இருவரும் காளியின் சிரசிலும் காதிலும் பிரம்மஹத்தியாக இடம்பெற்றதால் காளிதேவி, கோயில் திருமாகாளத்துக்குச் சென்று, லிங்கப் பிரதிஷ்டை செய்து, வில்வத்தால் அர்ச்சித்து பூஜித்து தோஷம் நீங்கப்பெற்றாள். எனவே, பிரம்மஹத்தி தோஷ நிவர்த்திக்கு வழிபட வேண்டிய தலம்- கோயில் திருமாகாளம். அம்பகரத்தூர் சென்று ஸ்ரீகாளியை வணங்கிவிட்டு, கோயில் திருமாகாளம் சென்று வழிபட்டால்தான், பிரார்த்தனை பூர்த்தியடையும் என்பர்.
அஷ்ட நாகங்களுள் ஒன்றான வாசுகியும், இங்கு வந்து வழிபட்டு தோஷநிவர்த்தி அடைந்ததாகச் சொல்கிறது தலபுராணம் ஆக, நாக தோஷம் போக்கும் தலமாகவும் திகழ்கிறது கோயில் மாகாளம்.
பெருமைகள் நிறைந்த இந்தக் கோயிலின் விருட்சமான கருங்காலி மரம், செவ்வாய் தோஷத்தை நீக்குவ துடன், கொடிய நோய்களையும் அகற்றி குணமாக்குகிறது.
கருங்காலி மரப்பட்டையை மன நோய், கண் நோய், ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குப் பயன்படுத்துவர். மரத்தின் தூளை ஜுரம், பேதி, வீக்கம், வலி, உடல் பலஹீனம், வெண் குஷ்டம், குஷ்டம், தோல் அரிப்பு, சர்க்கரை நோய் ஆகியவை நீங்கத் தருவார்கள்.
சீமைக்காசிக்கட்டி எனும் இதன் பிசினை வெற்றிலைப் பாக்குடன் சேர்த்துச் சாப்பிட, பற்களில் ரத்தக் சசிவு மற்றும் ஈறுகளில் உணர்வற்ற நிலை ஆகியன சரியாகுமாம். யுனானி மருத்துவத்தில் கருங்காலி பூக்கள், இலைகள், வேர் அனைத்தும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதை முறையாகப் பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஹார்ட் ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தருகிறார்கள்.
சங்க இலக்கியத்தில் 'மாரோடம்' எனக் குறிப்பிடப்படுகிறது கருங்காலி. கபிலர் இதை, 'சிறுமாரோடம்' எனக் குறிப்பிட்டுள்ளார். 'செங்கருங்காலிப்பூ' என்று உரையே எழுதியுள்ளார் நச்சினார்க்கினி யர். தழைத்துச் செழித்த கருங்காலியை 'பசு மாரோடம்' என்றும், மலரின் மணத்தை 'நறு மாரோடம்' என்றும், மலரின் அளவைச் 'சிறு மாரோடம்' என்றும் வியந்துள்ளனர் புலவர்கள்.

No comments:

Post a Comment