Sunday 8 October 2017

திருப்பட்டூர் அற்புதங்கள்! - 6

ரணடைதல் என்பது அற்புதமான விஷயம்; ஆழ்ந்த அன்பினால் உண்டாகிற உன்னதமான காரியம். மனைவியானவள் கணவனைச் சரணடைய, அந்தக் கணவன் பொருளாதாரத்தில் எந்தச் சிக்கலும் இல்லாமல் முன்னேறுவான். அதேபோல், கணவனானவன் மனைவியிடம் சரணடைந்துவிட்டால், அந்த வீடு வெகு சீக்கிரத்திலேயே உன்னத நிலையை அடையும்.
'குரு என்பவர் யார்? நம்முடைய வழிகாட்டி இவர்தானா? இவர்தான், இந்த வாழ்வில் இருந்து கடைத்தேறும் வழியை நமக்கு உபதேசித்து, நல்வழிப்படுத்தப்போகிறாரா?’ என்றெல்லாம் நமக்கொரு குருவைத் தேடி அடையும் வரை, யோசிக்க வேண்டும். அப்படித் தக்கதொரு குரு கிடைத்ததும், நமது வாழ்வு மொத்தத்தையும் குருவின் திருப்பாதத்தில் சமர்ப்பித்துவிட வேண்டும். 'குருவே துணை’ என்று அவர் அடியற்றி, அவரைப் பின்தொடர வேண்டும். இவ்வுலகில் நிகழும் எந்தவொரு சம்பவமும் குருவருள் இன்றி நடைபெறாது. ஆகவே, குருவைச் சரணடைந்துவிட்டால், நமக்கு ஒரு குறையும் இருக்காது.
பரம்பொருளான சிவபெருமானைக் கண்கண்ட தெய்வமாகவும், காணக் கிடைக்காத குருவாகவும் ஏற்றுக்கொண்டு செயல்பட்ட பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் நல்லதே நிகழ்ந்தது. குருவருள் இருந்தால்தான் திருவருள் கிடைக்கும் என்பார்கள். இங்கே, குருவாகவும் இறைவனாகவும் சதாசிவமே இருக்க... சந்தோஷத்துக்கும் பூரிப்புக்கும் கேட்கவா வேண்டும்?!
கர்வம் கொண்டவர்களுக்குத்தான் எல்லாப் பிரச்னைகளும் தலைதூக்கும். சுற்றியிருக்கும் எந்தவொரு மனிதரிடம் இருந்தும் அவர்களுக்கு அன்போ, ஆதரவோ கிடைக்காது. ஆனால், சரணடைதல் என்பது மொத்த கர்வத்தையும் காலால் மிதிப்பதற்கு ஒப்பானது! நான், எனது என்கிற கர்வத்தை ஒருவன் ஒழித்து விட்டால், அவனைத் தேடி இறைவனே வந்துவிடுவான். அதுமட்டுமா? அனவரத மும் இறையருள் அவனுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். அவனுக்குள் இறைவன் உறைவதும், அவனே இறைவனாக மாறிப்போவதும் நிகழும்!
அங்கே, திருப்பிடவூர் தலத்துக்கு வியாக்ரபாதரை வரச் செய்தார் சிவனார். அத்துடன் தனது திருவிளையாடலை முடித்துவிட்டாரா, பரம்பொருள்?! அனுதினமும் அபிஷேகம் செய்து வழிபடுகிற வியாக்ரபாதருக்கு சொட்டுத் தண்ணீர்கூடக் கிடைக்காதபடி, அந்தப் பகுதியையே வறட்சியாக்கினார். 'அபிஷேகத்துக்கு என்ன செய்வேன்?’ என வியாக்ரபாதரைக் கலங்கச் செய்தார்.
திருஆனைக்கா தலத்து இறைவனை அபிஷேகித்து வணங்குவதற்காக, கங்கை நீரை எடுத்துக் கொண்டு பறந்து வந்த யானையிடம் சிறிதளவு தண்ணீர் கேட்டுக் கெஞ்சச் செய்தார். அந்த யானை தர மறுக்கவே, வியாக்ரபாதரை கோபம் கொள்ளச் செய்தார். அவரும் கோபத்தில் தனது புலிக்காலால் ஓங்கி பூமியை உதைக்க... அங்கிருந்து கங்கை நீரையே ஊற்றெனக் கிளம்பிப் பொங்கச் செய்தருளினார், ஈசன்! அதுதான் இறையின் கொடை; அவருடைய வள்ளல்தன்மை!
தாம் நினைத்தபடியே, அங்கே... திருப்பிடவூர் தலத்துக்கு வியாக்ரபாதருடன் அவரின் ஆருயிர்த் தோழன் பதஞ்சலியும் வந்துவிட... திருக்கயிலாயத்தில் இருந்து அவற்றைக் கண் குளிரப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார் சிவபெருமான். கணவரின் மகிழ்ச்சி, மனைவி உமையவளுக்கும் தொற்றிக்கொண்டது.
''என்ன ஸ்வாமி... மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே..?'' என்றாள் பார்வதிதேவி.
''பின்னே... என் அபிமானத்துக்கு உரிய இந்த அடியவர்களை நான் ஆட்கொள்ளும் காலம் நெருங்கி விட்டது. அவர்களுடைய விருப்பங்கள் நிறைவுறும் தருணம், இதோ வந்துவிட்டது'' என்றார் சிவனார்.
உமையவளுக்கு ஆச்சரியம்! ''அதெப்படி? வியாக்ரபாதருக்கும் பதஞ்சலிக்கும் திருக்கயிலாயத்தை அடையவேண்டும் என்பதுதானே ஆசை?! அவர்களுக்கு மட்டுமின்றி, எல்லாச் சிவனடியார்களின் விருப்பமும் அதுதானே?! இந்த இரண்டு சிவனடியார்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கவேண்டும் என்றால், அவர்களைக் கயிலாயத்துக்குதானே வரவழைக்க வேண்டும்? என்ன இது விளையாட்டு!'' என்று சிவனடியார்களுக்காகப் பரிந்து பேசினாள்.
சிவனார், உமையவளை மெள்ளத் திரும்பிப் பார்த்தார்; புன்னகைத்தார். பிறகு, பூமியில்... திருப்பிடவூர் தலத்தைப் பார்த்தார். அங்கே, கடும் தவத்தில் இருந்த இரண்டு முனிவர்களையும் கண்டார். அவர்களை நோக்கி கை தூக்கி ஆசீர்வதித்தார். தவத்தில் இருந்த பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாதரும் இன்னும் ஆழ்ந்து போனார்கள்; வெட்டவெளியில் எங்கோ பறந்தும் மிதந்தும் பயணிப்பது போன்ற உணர்வு! மிகப் பிரமாண்டமான பேரொளிக்கு அருகில் நெருங்கி விட்டது போல் உணர்ந்து, உடல் சிலிர்த்தார்கள். 'திருக்கயிலாய நாதா... திருக்கயிலாய நாதா...’ என அரற்றினார்கள்.
'ஆம்... நான் கயிலாயநாதன்தான்! இதோ... நீங்கள் அமர்ந்து, தவமிருக்கும் திருப்பிடவூர் திருத்தலமும் திருக்கயிலாயம்தான்!’ என அசரீரி கேட்டது.
இதைக் கேட்டு இருவரும் பரபரப்பானார்கள்; பரவசம் கொண்டார்கள். 'திருப்பிடவூர் தலம், திருக் கயிலாயமா?’ என்று பூரித்துப் போனார்கள். 'அந்தத் திருப்பிடவூரை, இல்லையில்லை... திருக்கயிலாயத்தை நன்றாகப் பார்க்க வேண்டுமே’ என ஆசைப்பட்டார்கள். கண்களைத் திறக்க முற்பட்டார்கள். ஆனால், அவர்களால் கண்களைத் திறக்க முடியவில்லை. உள்ளே ஒளிர்ந்து, பிரகாசித்துக்கொண்டு இருந்த பேரொளியின் பிடியில் இருந்து விலக முடியவில்லை. அந்தப் பிடி, அவர்களுக்குச் சந்தோஷமாகவும் இருந்தது; 'என்ன இது, விசித்திர அனுபவமாக இருக்கிறதே!’ எனச் சற்று திகிலுறவும் செய்தது.
வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் தவத்தின் மிக உன்னதமான நிலையை அடைந்திருந்த அற்புதமான தருணம் அது. இதைத் தெரிந்துகொண்ட பறவைகளும் விலங்கினங்களும் மிக அமைதியாக, எந்தச் சத்தமும் போடாமல், தொலைவில் சென்றுவிட்டன. கிளிகளும் குருவிகளும் காகங்களும் புறாக்களும் தூரத்தில் இருந்தபடி, இரண்டு முனிவர்களையும் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டன. எந்த ஆரவாரமும் இல்லாமல் வீசிய காற்று, மெள்ள அவர்களின் தேகங்களை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது. போதாக்குறைக்கு, மகிழம்பூவும் வில்வமும் அன்றைக்குப் போட்டி போட்டுக்கொண்டு, மணம் பரப்பிக்கொண்டிருந்தன.
'திருப்பிடவூர் திருத்தலம்தானே இது?! பிறகு, திருக்கயிலாயம் என்று அசரீரி கேட்டதே, எப்படி?’ - உள்ளே இந்தக் கேள்வி ஓடிக்கொண்டே இருக்க... 'ஆமாம், இது திருப்பிடவூர்தான்; இது திருக் கயிலாயம்தான்!’ என்று மீண்டும் அசரீரி கேட்டது.
அவர்கள் இன்னும் இன்னும் அமிழ்ந்து போனார்கள்; தன்னுள் தான் கரைந்த நிலைக்குச் சென்றார்கள். 'திருப்பிடவூர்... திருக்கயிலாயம்: திருப்பிடவூர்... திருக் கயிலாயம்; திருப்பிடவூர்... திருக்கயிலாயம்’ என்று, நா அசைக்காமல், கண் திறக்காமல், உள்ளுக்குள் சொல்லிக் கொண்டே இருந்தனர்.
'திருக்கயிலாய ஞான உலா’ எனும் நூல் அரங்கேறிய திருத்தலம், திருப்பிடவூர் எனும் இந்தப் புண்ணிய பூமியில்...’ என, உள்ளுக்குள் கேட்ட கேள்விக்கு உள்ளுக்குள்ளேயே பதில் கிடைத்தது.
''என் இனிய தோழன், 'திருக்கயிலாய ஞான உலா’வை எழுதியிருக்கிறான் அதனைத் திருக்கயிலாயத்திலேயே வெளியிட வேண்டும் என்பது எங்களின் விருப்பம்'' என்று சிவ பெருமானிடம் சுந்தரர் சொல்ல... 'அப்படியே ஆகட்டும்! அதனைத் திருப்பிடவூர் தலத்தில் அரங்கேற்றுக!’ என அருளினார் சிவபெருமான்.
அடியவரும், ஆண்டவனின் நெருங்கிய சிநேகிதனுமான சுந்தரருக்கு வந்ததே கோபம்..! ''திருக்கயிலாய ஞான உலாவை திருப்பிடவூர் தலத்தில் அரங்கேற்றுவதா?'' என முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு கேட்டார் சுந்தரர்.
''திருப்பிடவூர் பூமி, புண்ணிய பூமி. அது திருக்கயிலா யத்துக்குச் சமமான தலம். நான் இருக்கும் இடம்தானே திருக்கயிலாயம்?! அப்படியெனில், திருப்பிடவூர்தான் திருக்கயிலாயம்; திருக்கயிலாயம்தான் திருப்பிடவூர். நீ திருப்பிடவூரில் அரங்கேற்றினால், அது திருக்கயிலாயத் தில் அரங்கேற்றியதற்கு ஈடானது. எனவே,  அங்கே சென்று அரங்கேற்றுக!'' என அருளினார் சிவனார்.  அதைக் கேட்டுப் பரவசமான சுந்தரர், உடனே தன் தோழரான சேரமான் பெருமானை அழைத்துக் கொண்டு, விறுவிறுவென திருப்பிடவூர் நோக்கிப் பயணித்தார்.
எப்போதோ நடந்தவற்றை, இறைவனின் பேரருளால், வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் கண்கூடாகப் பார்த்தபடி இருந்தனர். அவர்களின் தவம் தொடர்ந்தது; அந்தக் காட்சிகளும் விரிந்தன.
அங்கே... திருப்பிடவூர் என்றும், திருப்பட்டூர் என்றும் சொல்லப்படுகிற அந்த அற்புதபூமி, திருக்கயிலாய ஞான உலாவின் அரங்கேற்றத்துக்கும், மற்றுமொரு பரவசத்துக்கும் தயாராகிக் கொண்டிருந்தது.
_ பரவசம் தொடரும்
எங்கே இருக்கிறது?
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ் வசதி உண்டு; ஆனாலும் குறைவுதான்!
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் எனும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பட்டூருக்கு, ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோவிலும் செல்லலாம்.

No comments:

Post a Comment