Thursday 26 October 2017

பரமேஸ்வரமங்கலம் ஸ்ரீ கைலாசநாதர்!



v11

பரமேஸ்வரனின் பெயராலேயே இயற்கை எழில்சூழ்ந்த அழகிய சிற்றூராக விளங்குகிறது "பரமேஸ்வரமங்கலம்!' பாலாற்றின் கரையில் அமைந்துள்ள சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இத்தலத்தில் ஸ்ரீ கனகாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. 
ஒருமுறை சிவபெருமான் பூலோகத்தைக் கண்டுகளிக்க கைலாசம் விட்டு பூலோகம் வந்தார். தொண்டை மண்டலத்தில் உள்ள நத்தம் ஊரில் குடிகொண்டார். ஒருநாள் பாலாற்றின் அருகே உலாவரும் பொழுது பாலாற்றின் நடுவில் உள்ள ஒரு சிறு குன்றில் அமர்ந்தார். நதியும் இயற்கையும் சூழ்ந்த அவ்வழகில் மனம் மயங்கி மெய்மறந்து அங்கேயே தவத்திலும் ஆழ்ந்தார். பெருமானின் தவத்தைக் காண விரைந்து வந்த வருண பகவானும் மழைபொழிந்து அவ்விடத்தை குளிர்வித்தான். மழையில் நனைந்தபடி தவம் மேற்கொண்டிருந்த ஈசனைக்கண்ட பசு ஒன்று அவர்மீது மழைத்துளி படாதவாறு பால் சொரிந்த வண்ணம் நின்றது. சிவனும் பசுவும் நனையாமல் இருக்க ஐந்து தலை நாகம் ஒன்று படமெடுத்து குடைபோன்று காத்து நின்றது. 
தவத்திலிருந்து எழுந்த சிவபெருமான் இதனைக் கண்டு மனம் மகிழ்ந்தார். பால்சுரந்த பசுவிடமும் படமெடுத்துக் குடைபிடித்த ஐந்து தலை நாகத்திடமும் வேண்டும் வரம் யாது என்று வினவினார். அவை சிவபெருமான் இத்தலத்தில் தங்கி வழிபடுவோருக்கு வேண்டும் வரம் அருள வேண்டுமென வேண்டின.
அவற்றின் வேண்டுகோளை எற்ற ஈசனும் லிங்க வடிவம் தாங்கி, கைலாயத்திலிருந்து வந்தவராகையால் கைலாசநாதர் என்ற திருநாமத்துடன் கிழக்கு நோக்கிப் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். ஈசனின் இடப்பக்கம் பார்வதிதேவி கனகாம்பிகையாய் தனிக்கோயில் கொண்டு அருள்புரிகிறார். 
கருவறையின் வெளிச்சுவரில் நாகம் படமெடுத்துக் குடையாய் பிடிக்க, பசுவும் பால் சொரிய அவற்றின் கீழ் சிவலிங்கம் இருக்கும் திருவுருவம் உள்ளது. கைலாசநாதர் உறையும் இடமாதலால் "ஸ்ரீ கைலேஸ்வரம்' என்ற பெயரும் இவ்விடத்திற்கு உண்டு. 
இத்திருத்தலத்தின் மகிமையை கேள்விப்பட்ட மன்னன் பரமேஸ்வர பல்லவன் ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் இவ்விடத்தில் ஆலயம் ஒன்றைக் கட்டியுள்ளான். அவன் பெயராலும் இவ்வூர் "பரமேஸ்வரமங்கலம்' என்றழைக்கப் பட்டதாகவும் செப்பேடுகள் கூறுகின்றன. செப்பேட்டுக் கூரைகள் என்னும் புத்தகத்தில் செட்டித் தெருவின் நடுவில் இந்த சிவாலயம் அமைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. நிருபதுங்க வர்ம பல்லவன் மனைவி தேவசானி என்பவள் இங்குள்ள விநாயகருக்கு தனி ஆலயம் அமைத்து விளக்கேற்ற பொற்காசுகள் கொடுத்துள்ளதாகவும் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இங்குள்ள பாலாறு ஸ்ரீரநதி என்றும் அழைக்கப்பட்டுள்ளது. "ஸ்ரீர' என்றால் "பால்' என்று பொருளாகும். இங்குள்ள விநாயகர் வேறு எங்கும் காண்பதற்கரிதான திருவுருவில் அதிசய வடிவு கொண்டு திகழ்கிறார். வெளிப்பிரகாரத்தில் விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை, நவக்கிரகங்கள், சண்டீசுவரர் ஆகியோருக்குத் தனிச் சந்நிதிகள் உள்ளன.
கோயில் அமைந்துள்ள குன்றின் வெளிப்பிரகாரத்திற்கும் பாலாற்றின் கரைக்குமான சுமார் 120 அடி நீளம் கொண்ட பாலமும் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடத்த கோயிலோடு சேர்ந்து திருமண மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. வெளிப் பிரகாரத்தில் எட்டடி உயரத்தில் மகாகுரு தட்சிணாமூர்த்திக்கு அழகு கற்சிலை திருமேனி ஒன்றினை நிறுவி தனி ஆலயம் அமைத்துள்ளது சிறப்பு.
விநாயக சதுர்த்தி, ஆனி திருமஞ்சனம், கார்த்திகை தீபம், ஆருத்ரா (ருத்ர அபிஷேகம்), அஸ்வினி பரணி சகோதர விழா, சிவராத்திரி (ஐந்து காலபூசை), ஆடிப்பூரம்-கனகாம்பிகை வளையல் காப்பு, குருபெயர்ச்சி அன்று 108 பால்குடம், பங்குனி உத்திர திருக்கல்யாணம் போன்ற திருவிழாக்களும் தினசரி, மாதாந்திர பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
இத்தல இறைவன் நினைத்த காரியங்கள் அனைத்தையும் எளிதில் கைகூட அருள்பவர். கனகாம்பிகை அம்மனை அர்ச்சித்து வழிபட, வாழ்வில் எல்லா செல்வங்களும் வந்தடையும்.திருமணம் வேண்டுபவர்கள் அம்பாளுக்கு நெய்தீபம் ஏற்றுவர். பங்குனி உத்திர திருவிழாவில் இத்தலம் வந்து தரிசித்தால் திருமணத்தடைகள் விலகி சிறப்பான இல்வாழ்க்கை அமையும். குழந்தைக்காக தொட்டில் கட்டுவதும் உண்டு. பிரதோஷ நாளில் வில்வ இலைக்கொண்டு கைலாசநாதர் மற்றும் நந்திக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பாகும்.
காலை 8.30 முதல் 10.30 வரையும் மீண்டும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். 
சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் 75 கி.மீ. தொலைவில் உள்ள வேப்பஞ்சேரியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் பரமேஸ்வர மங்கலம் உள்ளது. 
தொடர்புக்கு: 97860 58325/ 98439 16069.
நன்றி :- - முனைவர். எஸ். ஸ்ரீகுமார்
தொகுப்பு : சீதா பாரதிராஜா

No comments:

Post a Comment