Sunday 22 October 2017

திருப்பட்டூர் அற்புதங்கள்! - 7

சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் தாங்க முடியாத சந்தோஷம். இறைவன் சிவபெருமானையே தன்னுடைய இனிய ஸ்நேகிதனாக, அன்புக்கு உரிய தோழனாகக் கொண்ட சுந்தரர்... மற்றவர்களுடன் பிரியம் வைத்து, பரஸ்பரம் நட்பு பாராட்டுவது, பெரிய சாதனையா என்ன?!
கடவுளையே நண்பனாக வரித்துக்கொண்ட சுந்தரர், வழக்கத்தை விட அன்று ஆனந்தத்தில் திளைத்தார். அவருடைய திருமுகம், மெல்லிய புன்னகை பூத்த உதடுகளும் சந்தோஷத்தில் மின்னுகிற கண்களும் கொண்டு, இன்னும் இன்னும் தேஜஸ் நிரம்பியிருந்தது. அவருடைய ஆள்காட்டிவிரலும் கட்டைவிரலும் ஒன்றையன்று உரசியபடியே, ருத்திராட்ச மாலையை உருட்டிக் கொண்டிருக்கிற பாவனையிலேயே இருந்தன. உள்ளே சிவநாமம் ஓடிக்கொண்டே இருந்தது. 'வா நண்பா... வா’ என்று மிகுந்த கனிவுடன், ஆழ்ந்த வாஞ்சையுடன் நண்பனை உள்ளுக்குள் மானசீகமாக வரவேற்றபடி இருந்தார் சுந்தரர். கயிலாயப் பயணம் இனிதே நடந்தேறட்டும் என எண்ணியபடியே, நண்பனைப் பார்க்கிற ஆவலுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார் சுந்தரர்.
அந்த நண்பன், தென்னாடுடைய சிவனாரா? இல்லை; எந்நாட்டவர்க்கும்  இறைவனாம் சிவனாரைத் துதித்துப் போற்றுகிற தொண்டர். அவர்... சேரமான் நாயனார்.  எத்தனையோ முறை திருக்கயிலாயத்துக்குச் சென்று, ஆடல்வல்லானை தரிசித்திருந்தாலும், இந்த முறை நண்பன் சேரமான் பெருமானுக்காக, திருக்கயிலாயம் நோக்கிப் பயணப்பட்டார் சுந்தரர்.
'என்ன காரணம் என்று தெரியவில்லை. சுந்தரர் திருக்கயிலாயத்துக்கு வருகிறாராம். ஐராவதத்தை அனுப்பி வைத்து, அவர் இங்கே வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என தேவர்கள் ஒருவரையருவர் ஏவிவிட்டுக் கொண்டு, பரபரத்தபடி இருந்தனர். 'வரவேற்பு ஏற்பாடுகள் சரிவர இருக்கட் டும்; அப்படியில்லை எனில், தோழனையும் தோழமையையும் அவமதித்ததாகக் கோபம் கொள்வார், சிவபெருமான்’ என்கிற கவனத்துடனும் இறைவன் மீது ஈடு இணையற்ற பக்தி கொண்டிருக்கிற சுந்தரரைக் காணும் ஆவலுடனும் குதூகலத்துடன் திகழ்ந்தது, திருக்கயிலாயம்.
'சாதாரணக் காரியமா செய்திருக்கிறான், நண்பன் சேரமான்?! அரிதான ஒரு காரியத்தை, மிக எளிதாகச் செய்து முடித்திருக்கிறானே?’ என்று சேரனை நினைத்துப் பூரித்துப் போயிருந்தார் சுந்தரர். 'நானாவது அந்தப் பரம்பொருளை, என் சிவத்தை, இனிய தோழனாக நினைத்தேன்; ஆனால், இந்த சேரமான், கடவுளையே காதலிக்கிறானே?! அந்தக் காதலில், கசிந்துருகி, கவிதையெனப் பொழிந்து தள்ளிவிட்டானே?!’ என வியந்தார்.
'அதுவும்... எப்படி? சேரமான் காதலனாம்; சிவபெருமான், அவனுடைய காதலியாம்! எனவே, தன் அன்புக்கும் ஆசைக்கும் உரிய காதலியான சிவனாரைப் பார்த்து, பரவசமும் பக்தியும் மேலிட, வாஞ்சையும் வாத்ஸல்யமும் பொங்கிப் பிரவாகிக்க, இறைவனை, பெண்ணாகவே பாவித்து அற்புதமாக எழுதியிருக்கிறான். அதற்கு 'திருக்கயிலாய ஞான உலா’ என்று என்ன அழகாக பெயர் சூட்டியிருக்கிறான்?!’ என்று நண்பனின் பக்தியையும் அவருடைய திறனையும் கண்டு, உள்ளுக்குள் பாராட்டியபடி இருந்தார் சுந்தரர்!
'திருக்கயிலாய ஞான உலா என்று உன்னுடைய நூலுக்குப் பெயர் சூட்டிவிட்டு, இங்கேயே அரங்கேற்றினால், பொருத்தமாகவா இருக்கும்? வா... திருக்கயிலாயத்துக்கு உன்னை அழைத்துச் செல்கிறேன். அங்கேயே, இந்த நூலை அரங்கேற்றுவோம்’ என்று தோழன் சேரமானிடம் சொன்னதை... 'இதோ நிறைவேற்றும் வேளை நெருங்கி விட்டது’ என்று மனம் கொள்ளாத மகிழ்ச்சி அவருக்கு! மகிழ்ச்சியும் ஆனந்தமும், சுகமும் பூரிப்புமாக பயணம் அமைந்துவிட்டால், அந்தப் பயணத்தின் நிறைவில், அதாவது சென்றடையும் இடத்தில், பயணக் களைப்பு இருக்காது; அசதிக்கும் அலுப்புக்கும் அங்கே இடமில்லை.
சோழ தேசத்தில் இருந்து சுந்தரர் ஐராவதத்தில் அமர்ந்து வந்துகொண்டிருக்க, சேர தேசத்தில் இருந்து சேரமான் நாயனார் குதிரையில் பறந்துகொண்டிருந்தார், திருக்கயிலாயம் நோக்கி! 'ம்... சீக்கிரம், சீக்கிரம்’ என்று குதிரையை விரட்டிக்கொண்டே இருந்தார். ஆனால், அந்தக் குதிரை அவருடைய மனவேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. தவிப்பும் பரபரப்புமாக மருகியவருக்கு, சட்டென்று ஓர் எண்ணம்... முகம் மலர்ந்த சேரமான், அந்தக் குதிரையின் காதில், பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்ல... அவ்வளவுதான்... குதிரை இன்னும் இன்னும் எனப் பறந்தது. அதன் வேகத்தில் மேகங்கள் வேக வேகமாகக் கலைந்து, வழிவிட்டன.
குதிரையின் பிடரியைச் செல்லமாக வருடிக்கொடுத்தார். அப்போது, 'இந்தத் திருக்கயிலாயத்தைத் தரிசிக்கவும் சிவனாரை நேரில் காணும் பாக்கியத்தையும் எனக்குத் தந்தருளிய சுந்தரா... என் இனிய ஸ்நேகிதா! உலகம் உள்ளவரை உன் புகழிருக்கும்.  என்னே உன் பெருந்தன்மை?!’ எனச் சுந்தரரை வணங்கியபடி, பயணித்தார் சேரமான்.
திருக்கயிலாயம்! மூவுலகையும் கட்டிக் காக்கிற கயிலாயநாதன் குடிகொண்டிருக்கும் அற்புதத் திருவிடம். அந்த இடத்தை நெருங்க நெருங்க... நெக்குருகிப் போனார் சேரமான். கூடவே, ஒரு திருப்தி... சுந்தரமூர்த்தி நாயனாருக்கு முன்னதாகவே வந்துவிட்டோம். அப்பாடா... என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.  பின்னே...  சுந்தரமூர்த்தி நாயனாருக்கு முன்பாகவே வந்து, நிற்பதுதானே மரியாதை?!
ஆனால், நுழைவாயிலில் நின்றிருந்த பூதகணங்கள், அவரை வழிமறித்தனர்; 'உள்ளே விடமுடியாது’ என மறுத்தனர். 'உடனே பூலோகம் செல்வாயாக!’ என எச்சரித்தனர். 'உமக்கெல்லாம் இங்கே அனுமதியில்லை; சிவனாரைத் தரிசிக்கவும் முடியாது’ என்றனர். கையில், திருக்கயிலாய ஞான உலா ஓலைச் சுவடியும் மனதுள் கவலையும் துக்கமும் பொங்க... இருண்ட முகத்துடன்,  தலைகுனிந்து நின்றார் சேரமான் நாயனார்!
இவை அனைத்தையும் அறிந்த சிவனாரும் உமையவளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்; மெள்ள புன்னகைத்தனர்.
பிறகு, ஐராவதமும் சுந்தரரும் வருகின்ற திசை பார்த்தனர்.
ஐராவதம் என்கிற யானை, சுந்தரரைச் சுமந்தபடி, வேகமாகப் பறந்து வந்துகொண்டிருந்தது!
- பரவசம் தொடரும்

No comments:

Post a Comment