Wednesday, 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 20


ஞ்ச பூதங்களில், பூமியுடன் தொடர்புகொண்ட ராசி- மகரம். இந்த ராசியில் பிறந்தவர்களுக்குச் சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும்.
சனிக்கிழமை மற்றும் டிசம்பர் 21 முதல் ஜனவரி 19 வரையிலான தேதிகளில் பிறந்தவர்களுக்கும், மகர ராசிக்காரர்களுக்கும் உகந்தது கடுக்காய் மரம். சனிக் கிரகத்துடன் நேரடித் தொடர்புகொண்ட கடுக்காய் மரம் குறித்துப் புராணங்கள், வேதங்கள் மற்றும் 2500 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட சுராக்கா சம்ஹிதை, சுஸ்ருத சம்ஹிதை முதலான நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
மகர ராசியின் நச்சுத்தன்மை கொண்ட கதிர்வீச்சுக்கள், மனிதனின் முழங்கால் மூட்டுகளைச் சேதப்படுத்தும் தன்மை கொண்டது; ரத்தக்கசிவு நோயை ஏற்படுத்தும். இந்த ராசிக்காரர்கள், நச்சுக் கதிர்வீச்சுகளால் உண்டாகும் உடல் நோய்கள் மற்றும் மனரீதியான பிரச்னைகளைச் சரிசெய்ய, கடுக்காய் மரத்தை தினமும் அரை மணி நேரம் கட்டிப் பிடித்தபடி நின்றிருந்தால் நல்லது. அதன் நிழலில் தினமும் அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தாலும் சிறந்த பலன் கிடைக்கும். அதேபோல், கடுக்காயைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளைச் சாப்பிட்டு நிவாரணம் பெறலாம்.
நாகை மாவட்டம், திருக்குறுக்கையில் (மயிலாடுதுறையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவு) அமைந்துள்ளது ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீவீரட்டேஸ் வரர் திருக்கோயில். தருமபுரம் ஆதீன மடத்தின் பராமரிப்பில் உள்ள இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சம் கடுக்காய் மரம். இங்கே உள்ள ஸ்வாமிக்கு ஸ்ரீயோகேஸ்வரர் எனும் திருநாமமும் உண்டு.
உள்ளே நுழைந்ததும், குறுங்கை விநாயகரின் அற்புதத் தரிசனம். அருகிலேயே தீர்க்கவாகு முனிவர் விக்கிரகத்தையும் தரிசிக்கலாம். தலங்கள்தோறும் சிவதரிசனம் செய்து வந்த தீர்க்கவாகு, இங்கு வந்து சிவ பூஜைக்காக ஆகாய கங்கையை அழைத்தாராம். கங்கை வராதது மட்டுமின்றி, முனிவரின் கைகளும் குறுகிப்போனதாம். இதில் வேதனை அடைந்த முனிவர், விநாயகரைப் பிரார்த்தித்தார். அவருக்குத் தரிசனம் தந்த விநாயகர், ''இங்கு திரிசூல கங்கை இருப்பதால், ஆகாய கங்கை வரமாட்டாள். எனவே, திரிசூல கங்கை நீரால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்!'' என்று அருளினார். அத்துடன், முனிவரது மனக்குறையைப் போக்கும்விதமாக, தனது கைகளையும் குறுக்கிக்கொண்டார் ஸ்ரீவிநாயகப்பெருமான் என்கிறது ஸ்தல புராணம். இந்த விநாயகருக்கு, 'பிணி நீக்கும் கணபதி’ எனும் திருநாமமும் உண்டு. இவரது விமானம், கஜபிருஷ்ட அமைப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது!
ஒருமுறை, கடுக்காய் மரத்தடியில் யோக நிலையில் அமர்ந்திருந்த ஈசனின் தவத்தைக் கலைக்கப் பலரும் முயன்று தோற்றுப் போயினர். பிறகு நாரதரின் திட்டப்படி, சிவனார் மீது மன்மதன் பாணம் தொடுக்க, ஈசன் அவனை  எரித்துச் சாம்பலாக்கிய கதை நாமறிந்ததே! மன்மதன் விட்ட பாணத்தால் ஏற்பட்ட பாதிப்பால், அம்பாளைக் காதலுடன் நோக்கினாராம் கயிலையான். பிறகு, இருவருக்கும் திருமணஞ்சேரியில் திருமணம் நடைபெற்றதாக ஐதீகம்!
மன்மதன் எரிந்து சாம்பலான இடம், திருக்குறுக்கை ஆலயத்துக்கு அருகில், 'விபூதிக்குட்டை’ எனும் பெயரில் அமைந்துள்ளது. அங்கேயுள்ள மண், விபூதியைப் போலவே காட்சி தருகிறது!
ஸ்தல விருட்சமான கடுக்காய் மரத்துக்கு அருகில் உள்ள நந்தியை, 'செவி சாய்த்த நந்தி’ என்கின்றனர். சிவனாரின் தவத்தைக் கலைக்க மன்மதன் வந்தபோது, அவனுக்குச் செவிசாய்த்து அனுமதித்ததால், நந்திக்கு இந்தப் பெயர் அமைந்ததாகச் சொல்வர்!
மன்மதன் எரிந்ததைக் கண்டு சோகமானாராம் பெருமாள். இதனால், ஸ்ரீமகாலட்சுமி சிவனாரிடம் முறையிட, ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரிவான் என சாப விமோசனம் தந்தருளினார் சிவனார். பெருமாளின் சோகமும் தீர்ந்தது என்பர்.
திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம் இது. இங்கு, விஜயநகரப் பேரரசின் கல்வெட்டுகளைக் காண முடிகிறது. இத்தனைச் சிறப்புகளைக் கொண்ட இந்தத் தலத்தின் விருட்சமாகத் திகழும் கடுக்காய் மரம் மருத்துவ மகத்துவம் வாய்ந்தது.
தினமும் உணவுக்குப் பிறகு, கடுக்காய் ஒன்றைக் கடித்து அதன் சாற்றை விழுங்கி வந்தால், எந்த நோயும் அண்டாது என்பர். சிவனாரின் மற்றொரு திருநாமமான 'ஹர’ எனும் பெயருடன் திகழும் கடுக்காய் மரத்தில், சிவனார் உறைந்திருப்பதாக ஐதீகம்! மாம்பிஞ்சு அளவுக்கு இருக்கும்போது, கடுக் காயைப் பறித்து உலர வைத்தால், கறுப்பாகத் தோன்றும். இதனை 'தான்றிக்காய்’ என்றும் சொல்வர். மரத்திலேயே விதை பிடித்துப் பழுத்து, மஞ்சள் நிறத்தில் இருக்கும்போது
பறிப்பது வழக்கம். எனவே, இதனை 'மஞ்சள் கடுக்காய்’ என்பர். பழுத்து, முதிர்ந்து தானாகவே விழுவதை 'காபூலிக் கடுக்காய்’ என்பர். ஆக, இந்த மூன்று வகை கடுக்காய்களுக்கும் தனித்தனியே மருத்துவ குணங்கள் உள்ளன.  
தான்றிக்காயை நெய்யில் ஊறவைத்து, அதன்மீது கோதுமை மாவைப் பூசி, நெருப்பில் புதைத்துச் சுட்டபிறகு, வெட்டிச் சிறு துண்டுகளாக்கி, கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிட... ஆஸ்துமா, இளைப்பு, இருமல் முதலான நோய்கள் நீங்கும்.
மஞ்சள் கடுக்காயின் தோலை மலத்துவார எரிச்சல், அரிப்பு, வீக்கம், வலி, கட்டிகள், மருக்கள் குணமடை வதற்குப் பயன்படுத்தலாம். இந்தத் தோலை தண்ணீரில் அரைத்து, இமைகளில் பூசினால், கண் நோய், எரிச்சல், உஷ்ணம் ஆகியன நீங்கும். கடுக்காய்த் தோலைப் பவுடராக்கி, கறுப்பு வெல்லத்தில் கலந்து, மாத்திரைகளாக உருட்டி வைத்துக்கொண்டு, தினமும் காலை, மாலை இரு வேளையும் வெந்நீர் அல்லது மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால், மூல நோய்  நீங்கும். இதேபோல், கடுக்காய் பவுடருடன், வாஸலைன் கலந்து களிம்பு போல தீப்புண் மற்றும் புண்களில் பூச, விரைவில் ஆறும்.
'கடுகலித்து எழுந்த கண் அகழ் சிலம்பில்’ எனும் சங்க இலக்கியத்தின் 'மலைபடுகடாம்’ வரிகளுக்கு, 'கடுமரம் மிக்கு வளர்ந்த இடமகன்ற பக்க மலையில்...’ என உரை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். இதில், 'கடு’ என்பது கடுக்காயைக் குறிப்பதாகச் சொல்வர்!
- விருட்சம் வளரும் 

No comments:

Post a Comment