மனிதன் எப்போதுமே ஆசை வசப்படுபவன்தான். அதனால்தான் பந்த பாசங்களில் சிக்கி பாவங்களை செய்து கர்ம வினைகளில் அகப்பட்டு பிறகு இறைவனின் கருணையால் வீடு பேறு அடைகிறான்.
மனிதர்கள் மட்டுமல்ல தெய்வங்கள் கூட சில சமயங்களில் இதுபோன்று ஆசைபடுவதும் துன்பப்படுவதும் உண்டு என்பதை நாம் புராணங்கள் மூலமாக அறிய முடிகிறது. அப்படி அலைமகளாம் திருமகளின் நியாயமான ஆசையை நிறைவேற்றித் தந்ததொரு திருத்தலம், திருநின்றியூர்.
இது அப்பர், சுந்தரர், சம்பந்தரால் பாடல்பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 19-ஆவது திருத்தலமாக விளங்குகின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெரும் சிறப்புகளைக் கொண்ட இத்தலம், இந்திரன், அகத்தியர், பரசுராமன், ஐராவதம், பசு, சோழமன்னர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற தலமாகும். கடனில் தத்தளித்து, பொருள் பற்றாக்குறையோடு ஏங்கி வாழும் மக்களின் குறைதீர வரமருளும் ஒப்பற்ற திருத்தலம் திருநின்றியூர் ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்.
1,300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இவ்வாலயம் தருமபுர ஆதீனத்திற்குட்பட்டது. திருமகள், திருமாலின் திருமார்பில் நீங்காதிருக்க வரம்வேண்டி ஈசனை வழிபட்டுப் பேறுபெற்றதால் திருநின்றியூர் என்றும் திருமாலுக்கு ஸ்ரீநிவாசன் என்ற பெயர் ஏற்படக் காரணமானதால் திருமகள் ஈசனுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிசெலுத்தும் வகையில் திருநன்றியூர் என்றும் பெயர்பெற்றது.
திருநின்றியூர் என பெயர்வர மற்றொரு காரணமும் உண்டு. சிதம்பரம் நடராஜரை தினமும் தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் சோழமன்னன் ஒருவன். அப்படி ஒருநாள் திரும்பிவரும்போது காவலாளிகள் கொண்டு சென்ற தீப்பந்தங்கள் அணைந்துவிட்டன.
அதனை மீண்டும் எரிய வைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அவர்கள் இத்தலத்தைக் கடந்தபோது தானாகவே தீப்பந்தங்கள் எரியத்தொடங்கின. தொடர்ந்து இது நடக்கலாயிற்று. காரணம் புரியாமல் அனைவரும் திகைத்தனர். ஒருசமயம் இப்பகுதியில் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த இடையனிடம், "இங்கே மகிமையான நிகழ்ச்சிகள் நிகழுமா'' எனக் கேட்டான் மன்னன். அதற்கு அவன், "மன்னரே, இந்தப் பகுதியில் லிங்கம் ஒன்றுள்ளது. அதில் நான் மேய்க்கும் பசுக்களில் சில தானாகவே சென்று பால் சொரிகின்றன'' என்றான். மன்னனும் அவ்விடம் சென்று சிவலிங்கத்தைக் கண்டான்.
அதனை வேறிடத்தில் வைத்து கோயில் கட்டுவதற்காக அகழ்ந்தபோது ரத்தம் வெளிப்பட்டது. வெளியே எடுக்கும் முயற்சி தோற்றது. இச்சம்பவம் நடைபெற்றது அனுஷ நட்சத்திர தினத்தில். பின் அங்கேயே அனுஷ நட்சத்திர நாளில் கோயில் எழுப்பி வழிபட்டான் மன்னன். பந்தத்தின் திரி அணைந்து, பின் தானே எரிந்து நின்றதால் திரிநின்றியூர் என பெயர் வந்ததாகக் கூறுகின்றனர்.
தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைக்கிணங்கி, தாய் ரேணுகா தேவியின் தலையைக் கொய்தார் பரசுராமர். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க பரசுராமரும், ஜமதக்னி முனிவரும் திருநின்றியூர் திருத்தலத்தை அடைந்து வணங்கினர். சிவபெருமான் காட்சிதந்து தோஷமகற்றி, வெட்டுண்டு மாய்ந்த தாய்க்கு அமாவாசை திதியில் மேன்மையருளினார். இன்றும் அமாவாசை திதியன்று இறந்தவர்களுக்கு சாந்தியும், சந்தோஷமும் தர இத்தலத்தில் பூஜை புரிந்தால் பூரண பலனுண்டு என்கின்றனர்.
கார்த்திகை மாதம் முழுவதும் ரேணுகாம்பாளுடன் ஜமதக்னி மகரிஷியும் பரசுராமரும் இத்தலத்தில் பூஜை புரிகின்றனர் என்று சொல்லப்படுகிறது. "வித்தை பெருக, கீர்த்தி மிகுந்துவர, எண்ணிய மணாளனை அடைந்து இன்பம் பெற, தாய், தந்தையர் நீண்ட ஆயுளுடன் வாழ, மூதாதையர் ஆஸ்தி விருத்தி அடைய, வெளிநாடு சென்று பெருந்திரவியம் சேர்க்க, நீண்டகாலம் இளமைப் பொலிவுடன் வாழ, இத்தலத்தில் மயில்வாகனத்தில் அமர்ந்தருளும் ஸ்ரீவள்ளி தேவயானை சமேதரான சுப்ரமணியரை பரிபூரண சரணாகதி அடைந்துவிட்டால் போதும், அனைத்து காரியங்களும் சித்திக்கும்' என்கிறது அகத்திய ஜீவநாடி.
இத்தலத்திலுள்ள செல்வ கணபதி சகல சம்பத்துகளுக்கும் அதிபதி. சகல மேன்மைகளையும் தரவல்லவர். செல்வகணபதி சுவாமியை அனுஷ நட்சத்திர நாளில் தொழுதவர்க்கு செல்வச்செழிப்பு கிட்டுமென்பது உண்மை.
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவுகளுடன் செல்வாக்கோடு வாழ்வார்கள். அந்தஸ்துள்ள பதவிகளில் இருப்பார்கள். அரசாங்க பாராட்டும் பெறுவார்கள். பிறர் குணமறிந்து செயல்படுவதில் வல்லவர்கள். ஊர் ஊராக சுற்றும் குணம்கொண்ட இவர்கள் அடிக்கடியோ, அனுஷ நட்சத்திர நாளிலோ, தங்களது பிறந்த நாளிலோ, திருமண நாளிலோ இத்தல ஈசனுக்கு வழிபாடுகள் செய்தால் வாழ்வு சிறக்கும்.
அனுஷ நட்சத்திர ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலக்ஷ்மி நோன்பன்றும் வழிபாடுகள் மேற்கொண்டால் கூடுதல் நன்மைபயக்கும். அனைத்து ராசியினரும் அனுஷ நட்சத்திர நாளில் வழிபாடுகள் மேற்கொண்டால் பயம், பாவம் மற்றும் நோய் நீங்கி சகலமேன்மையுடன் வாழ்வர் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார். அதில் மிகமுக்கியமானது என்னவென்றால், சிவனுக்கு அபிஷேகம் செய்து, சந்தனக்காப்பிட்டு, அதில் மாதுளை முத்துக்களைப் பதித்து வழிபாடு செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது உறுதி. மாதுளை முத்துக்கள் மாணிக்கக் கற்களையொத்தது. திருமகள் இந்த மாதுளம் முத்துக்களில் வாசம் செய்கின்றாள். இதனால் சிவபெருமானை அபிஷேம் செய்து, அர்ச்சித்தால் சம்பத்துகள் குறைவின்றிச் சேரும் என்பது காகபுஜண்டர் வாக்கு.
அவசரத்தில் நாம் பல தவறுகளைச் செய்துவிடுகிறோம். மனைவியின் மனதைப் புண்படுத்திப் பேசுவதும், அவள் நோகும்வண்ணம் செய்யும் கர்மங்களும் பெரிய பாவ தோஷத்தை உண்டாக்கும். வேடிக்கையாக சிலரைப் பற்றி பேசிச் சிரிப்பதும், அடுத்தவர் அறியாது அவரை ஏளனமாகப் பேசுவதும் எண்ணுதலும், எள்ளி நகையாடுதலும் பெரும் தோஷத்தை அள்ளித்தரும்.
"தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்' என்பது சான்றோர் வாக்கு. ஒருவன் செல்வந்தன் என்றால் அவன் முன்வினை சிறப்புடையது என்பதே பொருள். முன்சொன்ன தோஷங்கள் நம்மை துயரத்துக்குள்ளாக்கும். தாய்- தந்தையரை பேணா தோஷம், சகோதரரை வஞ்சித்த பாவம், வியாபாரத்தில் சொல்லும் பொய் இவை யாவும் வறுத்தும். பாவங்களை அறியாது செய்தால் அதற்கு விமோசனம் உண்டு. அறிந்து செய்யும் பாவங்களை சண்டாளம் என்கிறார் பாம்பாட்டியார். பின்னைப் பிறவியில் இவற்றிலிருந்து விடுபட்டு பிறப்பிலா பேரின்பம் பெறவும், இம்மையில் சுகபோகத்துடன் வாழவும் திருநின்றியூர் உலகநாயகி அம்மனை தொழவேண்டும்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்து இறைவனை போற்றிப்பாடிய திருப்பதிகத்துள், நின்றியூர் பரமனை வழிபட்டுப் பேறுபெற்றோர் பலரை தெளிவாகக் கூறியுள்ளார். இத்தலத்து இறைவன், இந்திரன் வழிபாட்டை ஏற்று அவனுக்கு வானநாட்டையும், அகத்தியர் வழிபாட்டுக்கு மகிழ்ந்து அவருக்கு பொதிகை மலையில் இருக்கும் பேற்றையும், கதிரவன் எழுவதற்கு முன் பால்சொரிந்து வழிபட்ட பசுவுக்கு திருவடிப்பேற்றையும், ஐராவதத்தின் வழிபாட்டுக்கு மகிழ்ந்து அதற்கு விண்ணுலக வாழ்வையும் அருளினன் என குறித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு ஒரு வேலி நிலத்தின் வருவாயினால் வழிபாடுகள் செய்யவேண்டும் என்ற குறிக்கோளில், வேதமோத முந்நூறு அந்தணர்களுடன் 360 வேலி நிலம் அளித்து பரசுராமன் வழிபட, அவனுக்கு இத்தலத்து இறைவன் திருவருட் பேரளித்த சிறப்பினை "மொய்த்த சீர்..' என தொடங்கும் இத்தல தேவாரப் பாடலுள் குறிப்பிட்டுள்ளார்.
நாற்புறமும் அழகிய மதிலால் சூழப்பெற்று, கிழக்கே மூன்று நிலை ராஜகோபுர முடையதான தோரணத்திருவாயிலுடன் திகழ்கிறது ஆலயம். கோட்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்றாகத் திகழும் இத்தலத்தில், சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. பூமியைத் தோண்டியபோது சுவாமியின் தலையில் ஏற்பட்ட வடு இன்றும் உள்ளது. இத்தல இறைவன் சுயம்புலிங்கமாய் அருள்பாலிக்கிறார்.
இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் பாதத்திற்குக் கீழிருக்கும் முயலகன் கிழக்கு மேற்காக தலையை வைத்து, இடப்புறமாகத் திரும்பி கையில் நாகத்துடன் இருக்கும் அமைப்பு அபூர்வமானது. கல்வியில் தேற, நினைத்தபடி தொழில் அமைய, தொழிலில் முன்னேற்றம் பெற, பெருந்தனம் தேட, தேடிய தனத்தை சேமித்து சுபவழியில் விரயமின்றி செலவு செய்ய நம்மை நல்வழிப்படுத்தி முன்னேற அடிகோலும் தெய்வம் இந்த தட்சிணாமூர்த்தி. அது மட்டுமின்றி சர்ப்பதோஷம், நாகதோஷம், பித்ரு தோஷம், குரு சாபம், மூதாதையர் சாபம் போன்றவற்றால் வாடும் மக்களுக்கு இந்த தட்சிணாமூர்த்தி அருமருந்தாகத் திகழ்வதாக கூறுகிறார் கொங்கணசித்தர்.
லிங்கோத்பவர் உள்ள இடத்தில் மகாவிஷ்ணு சிலை உள்ளது. அதனால் முக்தி தலங்களில் ஒன்றாகவும் மும்மூர்த்தி தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. மகாவிஷ்ணு, மகாலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சந்நிதிகள் காணப்படுகின்றன. ஈசான்ய திக்கில் தீர்த்தக்கிணறு உள்ளது. மேலும் சூரியன், பைரவர் மேற்கு நோக்கி அருள்புரிகின்றனர். நவக்கிரகங்களில் உள்ள சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் பார்த்தபடி வேறெங்கும் இல்லாத வித்தியாசமான அமைப்பாகும். அமாவாசை நாள்களில் முன்னோர்களின் ஆத்மசாந்திக்காக இங்கு சிறப்பு பூஜை செய்வது நல்லது.
இக்கோயிலைச் சுற்றி மூன்று குளங்கள் இருப்பது விசேஷம் (மகாலக்ஷ்மி தீர்த்தம், யம தீர்த்தம், நீல தீர்த்தம்). இத்தலத் தீர்த்தத்தை நீலமலர்ப் பொய்கை என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார். மேலும், திரிபுவன சக்கரவர்த்தி ராஜராஜதேவன், கோச்செங்கட்சோழன் கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.
நின்றியூர் "பரமனைப் பற்றினாரை வினைப்பாவம் பற்றா' என்றும், "வினை ஓயும்' என்றும் திருநாவுக்கரசர் தனது பதிகத்திலும்; "கங்கையை முடியிற்சூடிய நின்றியூர் நிமலனை வழிபடுவோர் அச்சம், பாவம், கேடு, நோய் முதலியன நீங்கி நலமுடன் வாழ்வர்' என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்திலும்; "திருமகள் வாழும் செல்வ வளத்தையுடைய திருநின்றியூர் ஈசனை வணங்குவோர் வினை நீங்கி இறைவனின் திருவடிப் பேற்றினை எய்துவர்' என்று சுந்தரர் தனது பதிகத்திலும் இத்தல ஈசனைப் போற்றியுள்ளனர்.
மயிலாடுதுறையிலிருந்து வைத்தீஸ்வரன் கோயில் செல்லும் கற்பாதையில் 10 கி.மீ. தொலைவில் இவ்வாலயம் உள்ளது.
தொடர்புக்கு: கே. சுப்ரமணிய சிவாச்சார்யார் - 94426 96327.
நன்றி : அறந்தாங்கி சங்கர்
தொகுப்பு : சீதா பாரதிராஜா
No comments:
Post a Comment