கல்வியாளர்கள், இசை விரும்பிகள், அறிஞர்கள், நறுமணப் பிரியர்கள், ஆடை- அணிகலன்கள் மீது விருப்பமுள்ளோர், தூய்மையாக இருக்க விழைவோர்... திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகவே இருப்பார்கள். திருவோணம் நட்சத்திரம், மகர ராசி மற்றும் சனிக்கிரகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. சனிக்கிழமை மற்றும் டிசம்பர் 21-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை பிறந்தவர்களை திருவோண நட்சத்திரம் ஆட்சி செய்கிறது. இந்தத் தினங்களில் மேற்படி நட்சத்திரத்தின் கதிர்வீச்சுக்கள் பூமியில் அதிக அளவு இருக்குமாம். சரக்கொன்றை மரம் அவற்றைத் தனக்குள் சேமித்துக்கொண்டு, கெட்ட கதிர்வீச்சுக்களை நன்மை தரும் நல்ல கதிர் வீச்சுக்களாக மாற்றி விடுகிறது.
பந்தநல்லூர் ஸ்ரீவேணுபுஜாம்பிகை சமேத ஸ்ரீபசுபதீஸ் வரர் கோயிலின் ஸ்தல விருட்சம்- சரக்கொன்றை.
அம்பிகைக்கு, பந்து ஆடுதலில் விருப்பம் வந்து, சிவனாரை வேண்டினாள். அவளுக்கு நான்கு வேதங்களையும் பந்தாகத் தந்தருளினாராம் சிவபெரு மான். திருக்கயிலையில், தோழியருடன் பந்தாடினாள் பராசக்தி. அப்போது தன்னையே மறந்தாள். சூரியனும் அஸ்த மனம் ஆகாமல், நெடு நேரத்துக்கு ஒளி கொடுத்தான். விளையாட்டு வளர்ந் தது; பகலும் நீண்டது. இதில் உலகம் சோர்வுற்றது. விளையாட்டில் ஆழ்ந்த உமையவள் மீது கடும் கோபம் கொண்டார் சிவனார். அவள் ஆடிய பந்தினை எட்டி உதைக்க... அது பூமியில் வந்து விழுந்தது. பிறகு, தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டாள் அம்பிகை. அடுத்து ஈசனின் ஆணைப்படி பசுவாக மாறி, சரக் கொன்றை மர நிழலில், சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத் திருமேனிக்கு பாலைச் சொரிந்து வழிபட்டாள்; அந்தத் தலம் 'திருப்பந்தணைநல்லூர்’ என்றாகி, பிறகு 'பந்தநல்லூர்’ ஆனதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
இங்கு, திருமணக் கோலத்தில் இறைவனும் இறைவியும் காட்சி தருவது கொள்ளை அழகு! இங்கே, இறைவனின் திருமணத்தைக் கண்டு வழிபட்ட ஆனந் தக் களிப்புடன் நேர் வரிசையில் நிற்கிறார்கள் நவக்கிரகங்கள். இவர்களை வழிபட, கோள்களால் ஏற்படும் துயரம் அழியும் என்பது ஐதீகம்! வருடத்தில், ஆவணி மாதம் 19, 20, 21 தேதிகளில் இறைவன் திருமேனியில் சூரியக் கதிர் படும் அற்புதம் நிகழ்கிறது!
வாய்ப்புண், தொண்டைப் புற்று ஆகியவற்றைத் தடுக்கும் சக்தி, சரக் கொன்றை மரத்துக்கு உள்ளது. இதன் இலைக் கொழுந்தை அரைத்துச் சாறாக்கி, சர்க்கரை கலந்து சாப்பிட்டால், வயிற்றில் உள்ள கிருமிகள், பூச்சிகள் வெளியேறிவிடும். இலையைத் துவையல் செய்தும், கடைந்தும் சாப்பிடலாம். அரைத்துப் படர்தாமரைக்குப் பூசலாம். கீல்வாதம் மற்றும் முகத்தில் வலிப்பு உள்ள இடங்களில் இலை யைத் தேய்க்கலாம். மூளைக் காய்ச்சலுக்கும் உகந்தது இது! சரக்கொன்றைப் பூவுக்கு புழுக்களைக் கொல்லும் திறன் உண்டு. பூவை தனியாகவோ அல்லது இலைக் கொழுந்துடனோ அரைத்து, பாலில் கலந்து உட்கொண்டால் வெள்ளை, வெட்டை, காமாலை நோய்கள் நீங்கும். பழச்சாற்றுடன் பூவை அரைத்துத் தேய்த்துக் குளித்தால், தேமல், சொறி ஆகியவை குணமாகும். பூவை பாலுடன் காய்ச்சி உட்கொண்டால், உடல் உறுப்புகள் வலுப்பெறும். சரக்கொன்றையால் தயாரிக்கப்படும் மருந்து, தடைப்பட்ட மாத விலக்கை வெளியேற்றும்.
கடலூர் மாவட்டம் திருவதிகை ஸ்ரீவீரட்டேஸ்வரர் கோயில், மதுரை மாவட்டம் திருப்பனூர் கொன்றை வேந்தனார் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களின் தலவிருட்சம்- சரக்கொன்றையே!
வியாபாரம் சிறக்கும்!
''இது, பித்ரு சாப நிவர்த்தி ஸ்தலம். கண் பார்வைக் குறைபாடுகளை நீக்கியருளும் தலமும்கூட! சொத்து வழக்கில் நியாயம், கடன் பிரச்னை, தொழில் விருத்தி ஆகியவற்றைத் தந்தருள்கிறார் ஸ்ரீபசுபதீஸ்வரர். வித்தை, கல்வி, குழந்தைப்பேறு ஆகியவற்றை ஸ்ரீவேணுபுஜாம்பிகை வழங்குகிறாள்'' என்கிறார் ஸ்ரீபசுபதீஸ்வரர் கோயிலின் ராஜசேகர குருக்கள் ''ஸ்ரீமுனீஸ்வரருக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் உண்டு. செய்வினை, ஏவல், பில்லி சூனியம் அகற்றும் சக்தி வாய்ந்தவர் முனீஸ்வரர்''
|
No comments:
Post a Comment