Thursday 26 October 2017

பல்வேறு சிறப்புகளை கொண்ட விருத்தாசலம் சிவன்கோயில்

  

VRIDHACHALAM_1
கடலூர் மாவட்டத்தின் மேற்கில் உள்ளது விருத்தாசலம் வட்டம் இந்த பகுதி மாவட்டத்தின் பிற பகுதிகளை காட்டிலும் அதிக பொட்டல் வெளிகளாக அமைந்துள்ளது. இங்குள்ள பழமையான சிவாலயம் பழமலைநாதர் கோயில் பிரம்மன் படைப்புக்கு முன் சிவபெருமான் தாமே மலைவடிவாகி நிற்கப் பிரம்மன் அதனையறியாது, பல மலைகளையும் படைத்து, அவற்றை நிலைநிறுத்த இடமின்றி மயங்கச் சிவபெருமான் தோன்றியருளி தானே பழமலையாதலை என தெளிவித்தார். ஆதலின் முதுகுன்றம் எனவும், பழமலை எனவும் வழங்குவதாயிற்று.
இறைவன் - விருத்தகிரிஸ்வரர் (எ) பழமலைநாதர்,
இறைவி - விருத்தாம்பிகை (எ) பெரிய நாயகி மற்றும்
பாலாம்பிகை (எ) இளைய நாயகி
சமயக்குரவர்களால் பாடல் பெற்ற இத்தலம் நடுநாட்டு சிவதலங்களில் முக்கியமானதாகும். இத்தலத்திற்கு 'விருத்த காசி' என்றும் பெயருண்டு. பண்டை நாளில் இத்தலத்துள்ளோர் காசிக்குக் செல்வதில்லை என்ற மரபு இருந்ததாகத் தெரிகின்றது.
இத்தலத்தில் இறப்பவருக்கு, இறைவன் அவ்வுயிரைத் தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் செய்ய, இறைவி முந்தானையால் இளைப்பாற்றுகின்றாள் என்பது கந்தபுராணம் வாயிலாக நாம் அறியும் செய்தியாகும்.
 
"தூசினால் அம்மைவீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்
மாசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத்தியல்பு கூறி
ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்த
காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் இயல்பால் அந்த
காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்
 
வடக்குக்கோபுரத்திற்கு நேர்வடக்கேயுள்ள மணிமுத்தாற்றுப் பகுதிக்குப் புண்ணியமடு என்று பெயர். இங்கேதான் இறந்தவர்களின் எலும்புகளை இட்டு முழுகுவது வழக்கம்
 
கோயில் அமைப்பு
இந்த சிவாலயம் நான்கு புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் நான்கு புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் விண்முட்டி காணப்படுகின்றன. கிழக்கே உள்ள பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது.
இங்கே ஆழத்துப் பிள்ளையார் என்பது தலவிநாயகர். ஆழத்து பிள்ளையார் முதல் வெளிப் பிரகாரத்தில் ஆழத்து பிள்ளையார் எனப்படும் பாதாள விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். இவருக்கு தனி மூன்று நிலை கோபுரம் மற்றும் கொடிமரம் உள்ளது.
 
முதல் பிராகாரத்திற்குக் கைலாசப் பிராகாரம் என்று பெயர். இந்தப் பிராகாரத்தில் வடமேற்குமூலையில் ஆகமக் கோயில் உள்ளது. சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான,
காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.
 
இறைவன் இடது புறத்தில் அம்பிகை திருக்கோயில் உள்ளது கிழக்கு நோக்கியது. அம்மையின் பெயர் வட மொழியில் விருத்தாம்பிகை. தமிழில் பெரிய நாயகி என அழைக்கப்படுகிறார். இவர் தனி கொடிமரம் கொண்டுள்ளார். இவரது கருவறை சுற்றி ஒரு பிரகாரம் அமைந்துள்ளது இதில் கருவறை கோட்டத்தில் காலசம்ஹாரர், கஜசம்ஹாரர், பிரிதியங்கரா, மகிஷாசுரமர்த்தினி, ஆகியோரும் தனி சண்டேஸ்வரி சன்னதியும் உள்ளன. இந்த அம்பிகையின் திருக்கோயில் வாயிலில் நாத சர்மாவுக்கு தனி சிற்றாலயம் உள்ளது. அம்பிகையின் எதிரில் அனவர்த்தினி எனும் சன்னதி மேற்கு நோக்கி உள்ளது. கற்பக மரமே வன்னிமரமாக வந்து பழமலை நாதர் திருக்கோயில் திருப்பணியைச் செய்ததாக வரலாறு. 
கண்டராதித்தன் கோபுரத்தின் வழி உள்ளே நுழைந்தால் இடது புறத்தில் உள்ளது இந்த 3000 ஆண்டு பழமையான வன்னி மரம் (இதனின்று திசுகன்று எடுக்க விருத்தாசலம் KVKமுயன்று வருகிறது)
இம்மரத்தடியில் உரோம ரிஷி, விகாய விபசித்து, விதர்ஷன செட்டியார் சிலைகள் உள்ளன. அருகில் பிரம்மா தீர்த்த கிணறு உள்ளது.  இந்த திருசுற்றின் மேற்கு பகுதியில் பஞ்ச லிங்கம், வல்லப கணபதி, மீனாட்சி அம்மன், சொக்கர், விஸ்வநாதர் , விஸ்வநாதர் விசாலாட்சி, மூன்று விஸ்வ லிங்கங்கள், முருகன் வள்ளி தெய்வானையுடன்,
அடுத்து சகஸ்ர லிங்கமும், காமாட்சியும், ஜம்புகேஸ்வரரும் உள்ளனர். அண்ணாமலையார் வடமேற்கு மூலையில் தனி திருசுற்று கொண்டு கிழக்கு நோக்குவதையும் காணலாம். இங்கு உற்சவ மூர்த்தியின் பெயர் பெரியநாயகர். இவர் ஆண்டிற்கு ஒருமுறை மாசிமக விழாவில் ஆறாம் திருநாள் மட்டுமே எழுந்தருளிக் காட்சி வழங்குவார். பிரம்மனும் அகத்தியரும் வழிபட்ட பெருமையுடைய பதி. சுந்தரர் இத்தலத்தில் பரவையருக்காகப் பெருமானை வேண்டிப் பொன்பெற்று அப்பொன்னை இங்குள்ள மணிமுத்தாற்றில் இட்டுத் திருவாரூர்க் கமலாயத்தில் எடுத்துக்கொண்டார் என்பது வரலாறு. 
முதல் பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும், சப்த மாதர், மூன்று விநாயகர் சன்னதி, வருணலிங்கம், மாற்று உரைத்த விநாயகர், பிந்து மாதவப் பெருமாள் முருகன் மற்றும் பாலாம்பிகை சன்னதியும் கஜலட்சுமி, சன்னதியும் உள்ளன. 63 மூவர் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது போன்ற வடிவமைப்புக் கொண்டது. பைரவர் கையில் வில் உள்ளது சிறப்பு.
 
இந்தக்கோயில் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும். இந்த கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் 5 பிரகாரம், இந்த ஊருக்கு 5 பெயர்கள், 5 தீர்த்தம், 5 (பஞ்ச)லிங்கம், 5 விநாயகர், என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது.
 
இக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. இராஜகேசரிவர்மனான குலோத்துங்கசோழன் காலத்தில் இத்தலம் விருதராஜபயங்கர வளநாட்டு மேற்கத்தியநாட்டு இருங்கோளப் பாடியின் ஒருபகுதியான மருவூர்க்கூற்றத்துத் திருமுதுகுன்றம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. சுவாமிபெயர் முதுகுன்றுடைய நாயனார் எனவும், திருமுதுகுன்றத்துடையார் எனவும் வழங்கப்பெறுகின்றது.
 
கோப்பெருஞ்சிங்கன் சுவாமிக்கு ஒரு மாங்காய் மாலையும், விளக்குக்குப் பொன்னும், ஆடுகளும், பசுக்களும் அளித்தான். இராஜராஜன், பரகேசரிவர்மன், குலோத்துங்கன் இவர்களும் பசுக்களையும், பொன்னையும், நிலத்தையும் அளித்தனர்.
 
இராஜகேசரிவர்மனான குலோத்துங்கனது காலத்து, ஆளப் பிறந்தான் ஏழிசைமோகனான குலோத்துங்கசோழ காடவராதித்தன் இறைவனுக்கு ஸ்தபனமண்டபம் கட்டினான். புக்கண உடையார், ரங்கப்ப நாயகர்,  செவ்வப்பநாயகன் இவர்கள் காலத்திய நிபந்தனைகளும் மிகுதியாக உள்ளன. சகம் 1545-இல் கச்சிராயன் என்பவன் குகை காவலனுக்கு நான்கு கலம் நெல் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான்.
 
ரங்கப்பமாவைராயர் என்பவர் அரியலூர் சந்தைப்பேட்டையில் மூட்டை ஒன்றுக்கு அல்லது ஆள்தூக்கக்கூடிய கைமூட்டை இரண்டுக்கு ஒருகாசு விழுக்காடு வரிவாங்கிக்கொள்ள உரிமை வழங்கியிருக்கிறார். கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் செவ்வப்பநாயகன் நான்கு இராஜ கோபுரங்களையும் கட்டியதாகச் கூறப்படுகிறது. கி.பி.1602-இல் முத்துக்கிருஷ்ணப்பராயர் என்பவர் திருமுதுகுன்றமுடையார்க்குப் பஞ்சாவரணப் பிராகாரம் கட்டிவைத்ததாகத் தெரிகின்றது. அப்பிராகாரம், புறமதிலுக்கு வெளியிலிருந்து முகமதியர் கலகத்தில் இடிந்துபோனதாகக் கூறுவர். தென்னாற்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த ஹைட்துரை கைலாசப்பிராகாரத்திற்குத் தளவரிசை போட்டதால் இன்றும் அது ஹைட் தளவரிசை என அழைக்கப்படுகிறது.
 
பல சிறப்புக்களை கொண்ட இவ்வூரினை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தால் தவறவிடவேண்டாம்.
நன்றி :- -கடம்பூர் விஜயன்
தொகுப்புசீதா பாரதிராஜா

No comments:

Post a Comment