Wednesday 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 32

பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் கண்கள் சிவப்பாக இருக்கும். முத்துப் போன்ற பற்களும், இனிய சொற்களும் இவர்களின் சொத்து! தங்களது பேச்சு மற்றும் பாவனையால் பெண்களை எளிதில் கவரக்கூடியவர்கள். இளமையில் ஈட்டிய செல்வத்தை அப்போதே செலவழித்து விட்டு, முதுமையில் வாடுவார்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் ஆற்றல் பெற்ற இவர்கள், உழைக்கச் சலிக்காதவர்கள். தான- தர்மம் செய்வதில் விருப்பமும், செயல்களின் பின்விளைவுகளை முன்னரே அறியும் திறமையும் இவர்களுக்கு உண்டு.
வானில், இரட்டை நட்சத்திரத் தொகுப்பு போன்று காணப்படும் பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி மற்றும் சூரிய கிரகத்துக்கு உட்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 22 வரை பிறந்தவர்களை, பூர நட்சத்திரம் கட்டுப்படுத்தும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாரடைப்பு பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு; மேலும், இந்த நட்சத்திர தோஷத்தால் உடல் சூடு, அம்மை நோய், வாந்தி, தலை சுற்றல், நீர்க்கட்டி, சிறுநீர்ப் பெருக்கு, இதய படபடப்பு, இடுப்பு- மூட்டு- மற்றும் காது வலி,  ஆகியன ஏற்படலாம் என்கிறது வானவியல் மூலிகை சாஸ்திரம்.
பூர நட்சத்திரக்காரர்கள் இந்தப் பாதிப்புகளைத் தவிர்க்க, கண்டல் எனப்படும் தாழை மர நிழலில் தினமும் அரை மணி நேரம் அமர்வது நல்லது. மேலும், தாழை விருட்சத்தின் பாகங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளைச் சாப்பிட்டும் பலனடையலாம் (பலாசு என்ற முருக்கன் மரமும் இதே பலன்களைத் தரக்கூடியதுதான்).
நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள திருத்தலம் திருமயேந்திரப்பள்ளி. இங்கே, ஸ்ரீவடிவாம்பிகையுடன் ஸ்ரீதிருமேனியழகர் அருள்பாலிக்கும் கோயிலின் ஸ்தல விருட்சமும் தாழை (கண்டல்) மரமே! சிதம்பரம்- சீர்காழி மார்க்கத்தில், கொள்ளிடத்துக்குக் கிழக்கே சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம்; திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமும்கூட!
மூன்று நிலை ராஜகோபுரத்துடன், கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது ஆலயம். வெளிப் பிராகாரத்தில் ஸ்ரீவேத கணபதி, ஸ்ரீகாசிவிஸ்வ நாதர், ஸ்ரீவிசாலாட்சி, தேவியருடன் திருமால், சிவலிங்கம், சூரிய- சந்திரர், ஸ்ரீகால பைரவர், ஸ்ரீசண்டிகேஸ்வரி- ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீசனீஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. தரிசனம் முடித்து, வெளவால் நெத்தி மண்டபத்தின் வலப்புறம் உள்ள அம்பாள் சந்நிதியை அடையலாம். தெற்கு நோக்கிச் சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீவடிவாம்பிகை, சிறந்த வரப்பிரசாதி. உள்ளே வலப்புறம், ஸ்ரீநடராஜர்- ஸ்ரீசிவகாமியம்மை. அருகில் மாணிக்கவாசகரும் திருஞானசம்பந்தரும் காட்சி தருகின்றனர். நேரே நோக்கினால், சிவலிங்கத் திருமேனியராய் அழகுக் கோலம் காட்டுகிறார் அருள்மிகு திருமேனியழகர்!
பங்குனி மாதத்தில் ஒரு வாரம்... 7 முதல் 13-ஆம் தேதி வரை, தனது கிரணங்களால் இந்த ஸ்வாமியை வழிபடு கிறான் ஆதவன். அவன் வழிபட ஏதுவாக, நந்தியெம்பெருமான் தன் தலையை சற்றே இடப்பக்கம் திருப்பியபடி காட்சி தருவது அபூர்வ தரிசனம்!
கோயிலின் ஸ்தல விருட்சம் கண்டல் என்பது கூடுதல் விசேஷம்! கண்டல் மரத்துக்கு கேதகை, கைதை, பட்டிகை, மடி, முகலி, முடங்கல், முண்டகம், முகடக்கண் மற்றும் தாழை என்று வேறு பெயர்களும் விளங்குகின்றன. ஆங்கிலத்தில் 'ஸ்க்ரூ பைன்’ என்கிறார்கள். 'குடை மரம்’ என்றும் இதைக் குறிப்பிடுகிறார்கள். இந்த மரத்தின் வேர் சிறுநீரக நோய், சரும நோய்கள், வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்து. தொழுநோய், பால்வினை நோய்கள், காயங்கள், அல்சர் புண்கள், ஜுரம், சர்க்கரை நோய், அடிக்கடி ஏற்படும் கருச் சிதைவு, உடல் பலவீனம் ஆகியவற்றுக்கும் சிறந்த நிவாரணியாகத் திகழ்கிறது.
கண்டல் மரத்தின் இலைகள், கசப்புத்தன்மை வாய்ந் தவை. கட்டிகள், அம்மைநோய், வெட்டை, சொறி சிரங்கு, வெண்குஷ்டம், இதயம் சம்பந்தமான நோய்கள், தூக்க மின்மை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் தீராத வலி ஆகியவற்றைப் போக்கும் அருமருந்தாகப் பயன்படுகிறது. கண்டல் மரப் பூக்களிலிருந்து பெறப்படும் எண்ணெயை மூட்டு வலி, சரும நோய்கள் ஆகியவற்றுக்கு மேற்புறம் தடவ, விரைவில் குணம் பெறலாம்.
- விருட்சம் வளரும்
ஸ்ரீகிருஷ்ணன் செய்த பித்ரு தர்ப்பணம்!
''திருமயேந்திரப்பள்ளி- பல்லவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஊர் என்பதால், இந்தப் பெயர் வந்ததா, அல்லது இந்திரனின் வேறு பெயரான மகேந்திரன் என்பதிலிருந்து உருவான பெயரா என்பது தெரியவில்லை. ஆனால், மிக மிகப் பழைமையான ஆலயம் இது என்பது மட்டும் உறுதி'' என்று பரவசத்துடன் திருத்தலப் பெருமை பேசுகிறார், திருமேனியழகர் கோயிலின் அர்ச்சகர் குருசாமி குருக்கள்.
''இங்கிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் கோட்டைமேடு என்றொரு பகுதி இருக்கிறது. அங்கு 'தேவி கோட்டை’ எனும் சரித்திரப் புகழ்மிக்க கோட்டை இருந்ததாகச் சொல்கிறார்கள். விசேஷமான சூரிய பூஜை வைபவம் மட்டுமின்றி, சிவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை போன்றவையும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. வைகாசி அமாவாசைக்கு முதல் நாளை 'போதாயன அமாவாசை’ என்பார்கள். இந்தத் திருநாளில், ஸ்ரீகிருஷ்ண பகவான் இந்தக் கோயிலுக்கு வந்து பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்ததாகக் கூறுவர். ஆக... பித்ரு தோஷம், முன்வினை தோஷங்கள் நீங்க, இந்த ஆலயத்துக்கு வந்து அர்ச்சனை செய்து வழிபடுவது சிறந்த பலன்களைப் பெற்றுத் தரும்''.

No comments:

Post a Comment