Wednesday, 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 19

                                          வெள்வேலம்.


கும்ப ராசிக்கான கிரகம் மற்றும் நட்சத்திரங்களின் நல்ல கதிர்வீச்சுகளையும் மின்காந்த சக்தியையும் ஈர்த்து, தனக்குள் சேமித்துவைக்கும் வல்லமை கொண்ட தெய்வீக மரம்- வெள்வேலம்.
கும்ப ராசிமண்டலத்தில் பிறந்தவர்களும், சனிக்கிழமை மற்றும் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18 வரையிலான தினங்களில் பிறந்தவர்களும் போற்றிக் கொண்டாட வேண்டிய தெய்வ விருட்சம் இது! இவர்கள் இந்த மரத்தைக் கட்டிப் பிடித்தாலோ, இதன் நிழலில் அமர்ந்தாலோ, மரம் சேமித்து வைத்திருக்கும் மின்காந்த அலைகள், அவர்களின் உடலில் மாபெரும் சக்தியை ஏற்படுத்தும் என்கின்றன வானவியல் மற்றும் மூலிகை சாஸ்திரங்கள்.
வேல மரத்தை வெள்வேலம், கருவேலம், குடைவேலம் என்று வகை பிரித்துள்ளனர். இதில் 'பரம்பை’ என்றும் சிறப்பிக்கப்படும் வெள்வேல மரம், பல ஆலயங்களின் ஸ்தல விருட்சமாகவும் திகழ்கிறது. அந்த ஆலயங்களில் குறிப்பிடத்தக்கது சென்னை- திருவேற்காடு ஸ்ரீபாலாம்பிகை சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரர் ஆலயம்.
சென்னை- கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தலம், முற்காலத்தில் வெள்வேல மரங்கள் சூழ்ந்த பகுதியாகத் திகழ்ந்ததால், வேற்காடு என்று பெயர்பெற்றதாக ஸ்தல புராணம் விவரிக்கிறது.
ததீசி எனும் சிவபக்தருக்கும் திருமாலுக்கும் பகை ஏற்பட்டதாம். இருவருக்குமான சண்டையில், திருமாலின் அனைத்து பாணங்களும் வீணாயின. ததீசியை அவரது சிவ பக்தி காத்தருளியது. இறுதியாக, சக்ராயுதத்தைப் பிரயோகித்தார் திருமால். அதிலிருந்தும் ததீசி தப்பித்தார்! அதையடுத்து, சிவ பூஜையில் ஈடுபட்டார் திருமால். தினமும் 1000 மலர்களால் ஈசனை வழிபடுவது என முடிவு செய்தார்.
ஒரு நாள்... ஒரு பூ குறைந்துபோக, தனது ஒரு கண்ணையே பெயர்த்து ஆயிரமாவது பூவாக சிவனாருக்குச் சமர்ப்பித்தார் திருமால். அந்த நிமிடமே அவருக்குத் திருக்காட்சி தந்தார் சிவனார். இழந்த கண்ணையும், சுதர்சன ஆயுதத்தையும் பெருமாளுக்கு வழங்கியதுடன், அவருக்குக் 'கண்ணன்’ என்றும் பெயர் சூட்டி அருள்புரிந்தார் என்கிறது ஸ்தல புராணம்.
இதைக் கண்ணுற்று மனமுருகிய ஆதிசேஷன், 'எங்கள் திருமால் ரத்தம் சிந்திய இந்தத் திருவிடத்தில், எவரையும் தீண்டமாட்டோம்; எவருக்கும் தீங்கு செய்யமாட்டோம்’ என உறுதி ஏற்றாராம். திருமால் சிவபூஜை செய்த அந்தத் திருவிடம்- திருவேற்காட்டின் ஒரு பகுதியான கண்ணபாளையம்!
அதுமட்டுமா? அகத்தியருக்கு தமது திருமணக்கோலத்தை சிவனார் காட்டியருளிய தலங்களில் ஒன்று; மூர்க்க நாயனார் அவதரித்த பூமி; 12 பாடல்களால் திருஞான சம்பந்தர் பாடித் துதித்த திருவிடம்; சேக்கிழார் போற்றிய திருத்தலம்... எனப் பெருமைகள் பல உண்டு இந்தத் தலத்துக்கு!
கருவறையில், லிங்க ரூபமாகக் காட்சி தருவதுடன், ஸ்ரீவிநாயகர் மற்றும் ஸ்ரீபாலாம்பிகையுடன் அருள்புரிகிறார் ஸ்ரீவேதபுரீஸ்வரர். மூர்க்க நாயனார், சேக்கிழார், கோயிலைக் கட்டிய அநபாய சோழன் ஆகியோரின் திருவுருவச் சிலைகளும் இங்கே உள்ளன. சனீஸ்வரர் மற்றும் அருணகிரியார் சந்நிதிகளையும் தரிசிக்கலாம். வெளிப் பிராகாரத்தில், கம்பீரமாக நிற்கிறது வெள்வேல மரம்!
மருத்துவப் பயன்கள் மிகுந்தது வெள்வேலம். இதன் குச்சிகள் பல் துலக்கவும், பற்கள் உறுதிப் படவும் உதவுகின்றன. இதன் இலையை மென்றாலும் பற்கள் உறுதிப்படுமாம். வெள்வேல இலைகளை அரைத்துப் பூசினால், புண்கள் ஆறிவிடும்; வீக்கமும் குறையும்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வெட்டை, வீக்கம் ஆகியவற்றையும் குணப்படுத்த வல்லது, வேல இலை. பல் முளைக்கும்போது குழந்தை களுக்கு பேதி ஏற்படுவதைக் கட்டுப்படுத்த, வேல இலைகளை நீரில் கொதிக்க வைத்துக் கஷாயமாக்கிக் கொடுப்பார்கள்.
விதை பிடிக்காத வேலங்காய்களைப் பறித்து, உலர வைத்துப் பவுடராக்கி, சம அளவு சர்க்கரை யுடன் பாலில் கலந்து சாப்பிட்டால், இந்திரிய கசிவுப் பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
அரிப்பு, படை முதலான தோல் நோய்களுக்கு, வேலம் பூக்கள் மருந்தாகப் பயன்படுகின்றன வேலம் பிசினை எடுத்து, நெய்யில் வறுத்துச் சாப்பிட்டால், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை நீங்கும்.
அதுமட்டுமா?! வேல விதைகளை அரைத்துத் தேனில் கலந்து, உடைந்த எலும்புகளின் மேல் வைத்துக் கட்டினால், உடைந்த எலும்புகள் விரைவில் ஒன்று சேரும் என்கின்றன மருத்துவ நூல்கள்!
- விருட்சம் வளரும்

No comments:

Post a Comment