Sunday 22 October 2017

திருப்பட்டூர் அற்புதங்கள்! - 9

ல்ல காரியத்தைச் செய்வதற்கு, நல்ல நேரம் பார்க்கத் தேவையில்லை. அது நல்ல காரியமாக இருக்கும்பட்சத்தில், அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்று மனதுள் எப்போது தோன்றுகிறதோ, அந்தத் தருணத்தில் இருந்தே துவங்கி விடுகிறது, நல்ல காலம்! அருகில் இருப்பவர்கள்தான் அந்தக் காரியத்துக்குத் துணை நிற்கவேண்டும், பக்கபலமாக இருக்கவேண்டும் என்பதில்லை; அந்தத் தெய்வமே துணை நிற்கும்; அரவணைக்கும்; வழி நடத்தும்; ஆசீர்வதிக்கும்; அருள்பாலிக்கும்!
சேரமான் நாயனாருக்கும் அவர்தம் திருக்கயிலாய ஞான உலாவுக்கும், அருகில் இருந்த சுந்தரரும் துணை நின்றார்; அந்தத் தெய்வமும் துணை நின்றது. அரங்கேற்றும் இடத்தைச் சிவம் சொல்ல... அந்தக் கணமே சிவகணங்கள் திருப்பிடவூர் தலத்தைச் சூழ்ந்துகொண்டன. முக்கியமாக, சேரமான் நாயனாரின் ஓலை நறுக்குகளை வாங்கி, 'சிவம் சிவம் சிவம்’ என்று சொல்லி, கண்களில் ஒற்றிக் கொண்டு, சிரசில் வைத்துக் கொண்டு, நெஞ்சில் வைத்து அணைத்தபடி, திருப்பிடவூர் திருத்தலத்துக்கு வந்தார் மாசாத்தனார்.
மாசாத்தனாரை சாஸ்தா என்றும், அய்யனார் என்றும் அழைப்பார்கள். தமிழகத்தின் பல ஊர்களில், ஊரின் எல்லைப் பகுதிகளில், சாலையோரங்களில் அய்யனார் கோயிலைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், ஊரின் மையப் பகுதியில், மிகப் பெரிய ஆலயமாக, கருங்கல்லால் பிரமாண்டமாகக் கட்டப்பட்ட கோயிலில் குடிகொண்டிருக்கும் சாஸ்தா கோயிலை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? திருப்பிடவூருக்கு வந்து பாருங்கள்; ஆலயக் கட்டுமானத்தைக் கண்டு, வியப்பில் திக்குமுக்காடிப் போவீர்கள்.
இதோ... திருக்கயிலாய ஞான உலா அரங்கேறும் தருணத்தில் நிற்கிறோம். ஆடி மாதத்தின் சுவாதி நட்சத்திர நன்னாளில், திருப்பிடவூர் திருத்தலமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வில்வமும் மகிழம்பூவும் சூழ்ந்த அந்த வனத்தின் மையப்பகுதியில் தான், திருக்கயிலாய ஞான உலா அரங்கேறியது. பிற்பாடு திருப்பிடவூர் தலத்தின் மகிமையை அறிந்த மன்னர்கள், ஞான உலா அரங்கேறிய இடத்தில், மாசாத்தனா ருக்கு அழகிய ஆலயத்தை அமைத்து வழிபடத் துவங்கினார்கள்.
தேசத்தின் எந்தவொரு நல்ல விஷயம் நடந்தேறுவதாக இருந்தாலும், அல்லது எதிரிகளின் தேசத்துக்குப் போர் தொடுக்கக் கிளம்பினாலும், தஞ்சை தேசத்தில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு வந்து, காவிரியையும் கொள்ளிடத்தையும் கடந்து, மாசாத்தனாருக்குப் படையல் போட்டு, பூஜைகள் நடத்தி வழிபட்ட பிறகே, அந்தக் காரியத்தில் இறங்கினார்கள் மன்னர் பெருமக்கள். தேசம் செழிக்கச் செழிக்க, எதிரிகளைப் படையெடுத்து ஜெயிக்க ஜெயிக்க, மாசாத்தனாருக்கு அனுதினமும் பூஜைகள் நடந்தேறுவதற்காக, ஏராளமான நிவந்தங்கள் அளித்தனர். ஆடுகளையும் மாடுகளையும், நிலங்களையும் குளங்களையும் தானமாகத் தந்தனர். வருடந்தோறும், ஆடி மாதத்தின் சுவாதி நட்சத்திர நன்னாளின்போது, திருப்பிடவூர் என்கிற திருப்பட்டூர் தலத்தில் உள்ள ஸ்ரீமாசாத்தனார் கோயிலில் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது, திருக்கயிலாய ஞான உலா அரங்கேற்ற நாள் விழா!
அடடா... இந்த இடத்தில்தான் சுந்தரர் நின்றிருந்தாரா?! சேரமான் நாயனார், அரங்கேற்றுகிற பதற்றத்துடனும், இறைவனே வந்து கலந்து
கொள்ளப்போகிற விழா இது என்கிற பெருமிதத்துடனும் இந்த இடத்தில்தான் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, பவ்யமாகவும் படபடப்பாகவும் இருந்தாரா! சிவகணங்களும் சிவனடியார்களும் சூழ்ந்திருக்க... எல்லார் செவிகளிலும் மனங்களிலும் 'நமசிவாயம் நமசிவாயம்’ எனும் அட்சரம் ஓயாது ஒலித்துக் கொண்டிருந்தது, இந்த இடத்தில்தானா? ஓலை நறுக்குகளை வைத்துக்கொண்டு, 'எத்தனை பெரிய பொறுப்பு இது! என் சிவனே...’ என்று ஆனந்தத்தில் கண்ணீர் வழிய, மாசாத்தனார் இந்த இடத்தில் இருந்தபடிதான் நெகிழ்ந்து நெக்குருகிப் போனாரா!
   தன் அடியார், தன்னைப் பற்றி எழுதியதை அரங் கேற்றுவதற்காக, சிவ பெருமான் தன் மனைவி உமையவள் சகிதமாக வந்திருந்து, வில்வமும் மகிழம்பூவும் இரண்டறக் கலந்த நறுமணத்துக்கு நடுவில் அனைவருக்கும் திருக்காட்சி தந்து, ஆசீர்வதித்தது, இந்தத் திருவிடத்தில் இருந்துதானா?
நினைக்க நினைக்க, நெஞ்சமே நிறைந்து போகிறது. திருப்பிடவூர் தலத்தில் உள்ள மாசாத்தனார் கோயிலின் ஒவ்வொரு கல்லையும் மெள்ளத் தடவிப் பார்க்க, தொட்டு உணர... சிலிர்த்து நிற்கிறோம், அந்த இடத்தில்! சர்வமும் சிவமாக, சிவமே சர்வமாக நிறைந்திருக்கிற திருப்பட்டூர் திருத்தலம், எப்பேர்ப்பட்ட புண்ணிய பூமி!
சிவப்பரம்பொருள்,  தன் அடியவர்கள் பலரையும், ஒவ்வொரு காலகட்டத்தில், ஒவ்வொரு சூழலில் இந்தத் தலத்துக்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தியிருக்கிறார். ஆயிரங்கள் பல கடந்த வருடங்களாக, கலாசாரங்களும் சூழல்களும் தடதடவென மாறிக்கொண்டே இருக்கிற இந்த பரந்துபட்ட பூமியில், அவற்றையெல்லாம் கடந்து, இன்றைக்கும் சாட்சியாகவும் சாந்நித்தியம் குறையாமலும் நம் கண் முன்னே பிரமாண்டம் காட்டி நிற்கின்றன, திருப்பட்டூர் ஆலயங்கள்!
திருப்பிடவூர் வனத்தின் ஒரு மூலையில் வியாக்ர பாதரும் பதஞ்சலி முனிவரும் வழிபட்டு, சதாசிவத்தை சதாசர்வகாலமும் தவம் செய்து, ஆனந்தக் கூத்தாடி மகிழ்ந்தனர்.
இன்னொரு பக்கத்தில், சேரமான் நாயனாரும் சுந்தரரும் நெகிழ்ந்து வணங்கிப் பேறு பெற்ற அற்புதமான திருவிடம். மாசாத்தனார் ஓலைநறுக்குகளுடன் காட்சி தரும் விக்கிரகத் திருமேனியை, கோயிலின் மூலமூர்த்தமாக இன்றைக்கும் தரிசிக்கலாம்!    
திருப்பட்டூர் மாசாத்தனார் கோயிலுக்குச் சென்று, அங்கே அவருடைய சந்நிதியைப் பார்த்தபடி, ஓரிடத்தில் அமர்ந்து, ஒரு பத்து நிமிடம் கண்களை மூடி, சாத்தனாருடன் மனதாரப் பேசுங்கள். புதியதொரு அனுபவத்தை உணர்ந்து சிலிர்ப்பீர்கள்!
சாஸ்தா, சாத்தனார், அய்யனார் என்றெல்லாம் அழைக்கப் படுகிற மாசாத்தனார் எப்பேர்ப்பட்டவர் தெரியுமா? எப்படியெல்லாம் அருள்பாலிப்பார் தெரியுமா?
- பரவசம் தொடரும்

No comments:

Post a Comment