Wednesday 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 31


டத்துக்கு ஏற்றபடி, காலச் சூழலுக்குத் தக்கபடி பேச்சையும் செயலையும் மாற்றிக் கொள்பவர்கள்; பேச்சால் பிறரைக் கவர்பவர்கள்; முன்கோபக்காரர்கள்; நிர்வாகத்திறன் மிக்கவர்கள் மகம் நட்சத்திரக்காரர்கள்! இவர்கள், அழகாக உடுத்திக் கொள்வார்கள்; வாசனைத் திரவியங்கள் பூசிக் கொள்வார்கள்; கடவுளுக்குப் பயப்படுவார்கள்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை பிறந்தவர்களை, மகம் நட்சத்திரம் ஆட்சி செய்கிறது. சிம்ம ராசியும் சூரிய கிரகமும் இந்த நட்சத்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
நாரத்தை மரம், மகம் நட்சத்திரத்தின் நண்பன். இந்த நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகளைச் சேகரித்து, மனிதர்களுக்கு வழங்குகிறது. கெட்ட கதிர்வீச்சுகளால் உண்டாகிற நோய்களையும் தோஷத்தையும், நாரத்தை மரம் குணப்படுத்துகிறது (ஆல மரமும், மகம் நட்சத்திர தோஷத்தைப் போக்கவல்லது).
மகம் நட்சத்திரத்தின் கெட்ட கதிர் வீச்சுகள், உடலில் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்; இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பை உண்டாக்கும்; ஆண்மை பாதிப்பு, சர்க்கரை நோய், சிறுநீரக நோய்கள், மூலம், மலச்சிக்கல் மற்றும் கண் கருவளையம், மனதில் படபடப்பு ஆகியவற்றை உண்டாக்கும். இந்த நட்சத்திரக்காரர்கள், நாரத்தை மர நிழலில் தினமும் அரைமணி நேரம் இளைப்பாறுவது நல்லது. இந்த மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை உட்கொள்ளலாம். இதனால் மகம் நட்சத்திர தோஷம் விலகும்; நோய்கள் நீங்கும் என்கிறது வானவியல் மூலிகை சாஸ்திரம்.  
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்தில் உள்ளது ஓகைப்பேரையூர். இங்குள்ள ஸ்ரீஜெகந்நாயகி சமேத ஸ்ரீஜெகதீஸ்வர ஸ்வாமி கோயிலின் ஸ்தல விருட்சம், நாரத்தை. திருவாரூர்- மன்னார்குடி சாலையில், கமலாபுரத்தை அடுத்து உள்ளது மூலங்குடி. இங்கிருந்து ஓகைப்பேரையூரை அடைவது சுலபம். மாலூர் ரோடு மற்றும் வடபாதிமங்கலம் சாலை வழியாகவும் இந்தத் தலத்தை அடையலாம். வங்காரப் பேரையூர் என்றும் இந்தத் தலம் அழைக்கப் பட்டதாம். சோழர்கள் காலத்தில், திருவாரூருக்கு அருகே கோட்டை ஒன்று இருந்ததாம். அந்தக் கோட்டைக்கு அருகில் இருந்ததால், இது பேரெயிலூர் எனப்பட்டது. அதுவே மருவி, பேரையூர் என்றானதாம். பெண்பாற் புலவரான பேரெயில் முறுவலார் பாடிய பாடல்கள் குறுந்தொகை மற்றும் புறநானூறில் உள்ளன.
கிழக்குப் பார்த்த மூன்று நிலை ராஜகோபுரம்; எதிரில் திருக்குளமும் உள்ளது. உள்ளே, ஸ்ரீகற்பகவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீஐயனார் மற்றும் சூரிய- சந்திரர்கள் சந்நிதிகள் உள்ளன. மேலும், பஞ்ச மூர்த்திகளும் ஸ்ரீநடராஜ சபையும் கொள்ளை அழகு! திருநாவுக்கரசரும் வள்ளலாரும் போற்றிப் பாடிய தலம் இது.
நாரத்தை, எலுமிச்சை இனத்தைச் சேர்ந்தது; புளிப்புச் சுவையுடைய பழங்களைத் தரவல்லது. நாரத்தைப் பிஞ்சு, பசியைத் தூண்டும்; வயிற்றில் உள்ள நுண்புழுக்களைக் கொல்லும். நாரத்தைக் காய்களை அரிந்து, உப்புப் போட்டு, நீர் சுண்டும் அளவுக்கு வெயிலில் வைத்துப் பதமாக்கி, சாப்பாட்டுடன் சேர்த்து உட்கொள்வது நல்லது. இதனால் வயிற்றுப் பொருமல் நீங்கும்; தாது சக்தி பெருகும்; தேகம் குளிர்ச்சியாகும். நாரத்தைப் பழம் பித்தத்தைப் போக்கி, தாகத்தைத் தணிக்கும். உடலுக்கு வலுவூட்டும்; வாந்தியை நிறுத்தும்; வெப்பக் காய்ச்சலை குணமாக்கும். நாரத்தைப் பழச்சாறுடன் போதிய அளவு தண்ணீரும் சர்க்கரையும் கலந்து பருகினால், வயிற்றுப் பிரச்னை வராது; வாயுத் தொல்லை நீங்கும்; ஜீரண சக்தி அதிகமாகும். நாரத்தை விதை, விஷ முறிவுக்கு உகந்த மருந்து. மொத்தத்தில், தேன் கலந்து பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படாது.
அந்தக் காலத்தில், யாழ் எனும் இசைக்கருவிக்கு, நார்த்தம் மாலை சூட்டப்பட்டதாக இலக்கியக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. நாரத்தைப் பூக்களை, கவரிமான்கள் விரும்பித் தின்னுமாம்! 'நரந்தம் நாகம் நள்ளிருள் நாறி’ என்று குறிஞ்சிப் பாட்டில் தெரிவிக்கிறார் கபிலர் .' நரந்தம்’ என்பது, 'நாரத்தம் பூ’ என்கிறார் நச்சினார்க்கினியர். கலித் தொகையில் காணப்படும் 'நரந்தம்’ என்ற சொல்லும் 'நாரத்தம் பூ’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
- விருட்சம் வளரும்
'தீர்த்தக் குளத்தில் நீராடினால்...
தீராத நோயும் தீரும்!’
''வைகாசி விசாகம், மாசி மகா சிவராத்திரி, புரட்டாசி நவராத்திரி, மார்கழி திருவாதிரை மற்றும் ஆருத்ரா தரிசனம் என விசேஷங்கள் கொண்ட தலம் இது'' என்கிறார் கோயிலின் சுப்பையா குருக்கள்.
''ஆடி வெள்ளிக்கிழமை யில் திருவிளக்கு பூஜையை கடந்த 18 வருடங்களாக நடத்தி வருகிறோம். கல்வி, கல்யாணம், இல்லறத்தில் பிரச்னை, பிள்ளைப் பேறின்மை என எதுவாக இருந்தாலும், இங்கே வந்து குறைகளைச் சொன்னால் போதும்... உடனே நிவர்த்தி ஆகிவிடும். கோயிலுக்கு எதிரேயுள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி, இறைவனைத் தொழுதால், தீராத நோயும் தீரும்'' 

No comments:

Post a Comment