சாமர்த்தியப் பேச்சால் காரியத்தை முடிக்கும் திறன், தேசப்பற்று, அறிவாற்றல், புலமை, ராஜதந்திரம் ஆகிய குணங்களுக்குச் சொந்தக்காரர்கள் சித்திரை நட்சத்திரக்காரர்கள்! எனினும், இருப்பதைக் கொண்டு மகிழாமல், கிட்டாதது குறித்தே கவலைப்படுவது இவர்களின் குணம். வலிமையான தேகம், கவர்ந்திழுக்கிற கண்கள், முகத்தில் மரு ஆகியவை சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு இருக்குமாம்.
வானில், வெண்முத்து வடிவில் ஒற்றை நட்சத்திரக் கூட்டம் காணப்படும். அதனை சித்திரை நட்சத்திரம் என்பர். இதனுடன் கன்னி ராசி மண்டலமும், புதன் கிரகமும் தொடர்பு கொண்டது. புதன்கிழமைகளில் மற்றும் ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 22-ஆம் தேதி வரை பிறந்தவர்கள் சித்திரை நட்சத்திர ஆளுகைக்கு உட்பட்டவர்கள்! இந்த நட்சத்திரத்தின் நல்ல கதிர் வீச்சுகள் நன்மைகளையும், கெட்ட கதிர்வீச்சுகள் நோய் மற்றும் மன உளைச்சல்களையும் உண்டுபண்ணும்; இதனைச் சித்திரை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷத்துக்கான பரிகார விருட்சம், களா மரம் என்கிறது வானவியல் மூலிகை சாஸ்திரம்.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் உள்ளது ஸ்ரீஉலகம்மை உடனுறை ஸ்ரீபாபநாச ஸ்வாமி கோயில். அம்பாசமுத்திரத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவு. தாமிரபரணி நதி உற்பத்தியாகிற பொதிகை மலையின் கீழ் உள்ள அற்புத ஊர் இது! நம் பாவங்களையெல்லாம் நாசம் செய்பவர் என்பதால், சிவனாருக்கு இந்தத் திருநாமம். இந்தத் தலத்தின் விருட்சம்- களா மரம்!
மூலவரின் திருநாமம்- ஸ்ரீபாவநாசர். அம்பிகை உலகம்மை; லோகாம்பிகை எனும் திருநாமமும் உண்டு. விராடபுருடன் பூஜித்ததால், ஸ்வாமிக்கு ஸ்ரீவயிராச லிங்கர்; ரிக், யஜுர், சாம வேதங்கள் ஆகியவை மூன்று களா மரங்களாகவும் (முக்களா லிங்கம் இங்கே உள்ளது), அதர்வண வேதம் ஆகாய வடிவமாகவும் இருந்து வழிபட்ட தலம் இது! தலத்தில் உள்ள விநாயகருக்கு ஸ்ரீபூதல விநாயகர் என்றும், ஸ்ரீநடராஜருக்கு புனுகு சபாபதி என்றும் திருநாமங்கள்!
அறிந்தும் அறியாமலும் செய்கிற நம் சகல பாவங்களையும் சிவனார் அகற்றி அருளும் தலம்; அகத்திய முனிவருக்கும், அவருடைய மனைவி லோபாமுத்திரைக்கும் திருமணக் கோலம் காட்டியருளிய தலம் எனப் பெருமைக்கு உரிய தலம் இது! ஸ்ரீகல்யாணசுந்தரரின் சந்நிதியில், இந்தக் காட்சியைத் தரிசிக்கலாம். தல விருட்சமான களா மரத்தின் கீழ், முக்களா லிங்கர் தரிசனம் தருகிறார்.
தல விருட்சமாம் களாவுக்கு, ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதன் காய் மற்றும் பழம், மலச்சிக்கலை நீக்கவல்லது; தாகத்தைத் தணிக்கவும் செய்யும். வயிற்று உஷ்ணத்தைத் தணித்து, சக்தியைத் தரவல்லது. களாக்காயுடன் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம்; ஊறுகாயாகவும் பயன்படுத்தலாம். இதனால் பித்தம் மற்றும் ரத்தம் தொடர்பான நோய்கள் நீங்கிவிடும். வாயுத் தொல்லையை நீக்கி, பசியைத் தூண்டிவிடும்.
உலர்ந்த களாவைத் தண்ணீரில் ஊற வைத்துச் சாப்பிட்டால், உஷ்ணத்தால் சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் பிரிவதில் உள்ள சிரமம் நீங்கிவிடும். இலைகளைச் சாறாக்கி தேனில் கலந்து சாப்பிட, வறட்டு இருமல் உடனே நின்றுவிடும். கண் தொடர்பான பிரச்னைகளுக்கு களாப் பூவைப் பயன்படுத்துகின்றனர்.
களா மரத்தின் வேரை தண்ணீரில் கலந்து, சுண்டக் காய்ச்சிப் பயன்படுத்தினால், பிள்ளைப் பேற்றின்போது ஏற்படும் கருப்பை அழுக்குகள் வெளியேறிவிடும்.
- விருட்சம் வளரும்
பாவங்கள் தொலையும்!
''வருடந்தோறும் பங்குனி மாதத்தில் தேர் மற்றும் தெப்பத் திருவிழாக்கள் விமரிசை யாக நடைபெறும். சித்திரை முதல் தேதி, உமையவளுடன் ஸ்ரீசிவபெருமான், அகத்திய முனிவருக்குத் திருமணக் காட்சி தந்தருளியதால், அந்த நாளில் எண்ணற்ற பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்வர்'' என்கிறார் ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் சதாசிவ பட்.
''மார்கழி, நவராத்திரி உற்ஸவங்கள், கந்த சஷ்டி, ஐப்பசி விஷ§, சிவராத்திரி, பௌத்திரோத் ஸவம் ஆகியவையும் இங்கே சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. கோயில் படித்துறை தீர்த்தக் குளத்தில், உச்சிகால பூஜையில், மீன்களுக்கு நைவேத்தியம் செய்து, பூஜை செய்வது வழக்கம்! அதே போல், மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமைகளில் இங்கு வந்து நீராடி, சிவனாரைத் தொழுதால், பாவமெல்லாம் பறந்தோடும் என்பது ஐதீகம்!
சூரிய தலமாக இருப்பதால், இங்கே பிரார்த்தித்தால், கண்பார்வைக் கோளாறுகள் குணமாகும். திருமணத் தடை, வேலைவாய்ப்புத் தடங்கல் ஆகியவை நீங்கும்; அனைத்துப் பாவங்களும் தொலையும்''
|
No comments:
Post a Comment