அந்தக் காலத்தில், தமிழகத்தில் சிற்பிகள் ஒரு வழக்கத்தைக் கடைப்பிடித்தார்கள். அதாவது, ஒரு கோயிலை நிர்மாணிப்பதற்கு முன்னதாக, மாதிரி திருப்பணிகள் சிலவற்றைக் குறிப்பிட்டு, அவை நீங்கலாக மற்றவற்றைச் செய்து தருகிறோம் என்று ஒப்பந்தம் எழுதித் தருவார்களாம்.
அப்படி அவர்கள் குறிப்பிடும் திருப்பணிகள்... ஆவுடையார்கோவில்- கொடுங்கை, திருவீழிமிழலை- வெளவால் நெற்றி (நத்தி) மண்டபம், திருநனிப்பள்ளி- கோடிவிட்டம், தஞ்சை பெரிய கோயில் விமானம். பழங்கால சிற்பிகளையே மலைக்கவைத்த பிரமாண்டமான இந்தத் திருப்பணி வரிசையில், குறிப்பிடத்தக்க மற்றொன்று- திருவலஞ்சுழி கருங்கல் பலகணி (ஜன்னல்)!
சிற்ப வேலைப்பாடுகளால் மட்டுமல்ல, வெள்ளைவெளேர் திருமேனியுடன் சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீசுவேத விநாயகரும் இந்தத் தலத்தின் சிறப்பம்சமே!
திருஞானசம்பந்தர் மூன்று தேவாரப் பதிகங்களாலும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களாலும், நக்கீரரின் திருவலஞ்சுழி மும்மணிக் கோவையாலும், பெரியபுராணம் மற்றும் திருப்புகழ் முதலான இலக்கியங்களாலும் போற்றப் படும் நாயகன், திருவலஞ்சுழி ஈஸ்வரன்; ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீகபர்தீச்வரர் (ஸ்ரீகற்பக நாதேச்வரர்). ஆனால், இதில் விசேஷம் என்ன தெரியுமா? சிவபிரான் பெயரைக் குறிப்பிடாமல், ஸ்ரீசுவேத விநாயகர் கோயில் என்றே வழங்கப்படுகிறது இந்த ஆலயம்!
'திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயிலைப் பிரதானமாகக் (மையமாக) கொண்டால், அதைச் சுற்றிலும் அமைந்துள்ள தலங்களில், பிள்ளையார் ஆலயமாகத் திகழ்வது திருவலஞ்சுழி’ என்று போற்றுவர். அதுசரி... வெள்ளைப் பிள்ளையார் என்ற பெயருக்குக் காரணம்?!
தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தார்கள் அல்லவா? அப்போது, பிள்ளையாரை வழிபடாமல் தங்கள் பணியை ஆரம்பித்துவிட்டார்களாம். அப்போது காரியம் தடைப் படவே, தேவேந்திரன் கடலின் நுரையையே பிள்ளையார் திருவுருவாக்கி பூஜித்தான். பிறகு, அவர்களுக்கு அமிர்தம் கிடைத்தது. இருப்பிடம் திரும்பும்போது, இந்தப் பிள்ளை யாரையும் தன்னுடன் எடுத்து வந்தான். வழியில் இந்தத் தலத்தில் சிவபூஜை செய்தவன், மீண்டும் விநாயகரை எடுக்க முயன்றபோது, அவரை அசைக்கக்கூட முடியவில்லை. ஆகவே, இந்தப் பிள்ளையாரை இங்கேயே பிரதிஷ்டை செய்து, பிள்ளையாருக்கு நிறைமணித் திருவிழா முதலான வைபவங்களை நிகழ்த்தி வழிபட்டு, தேவலோகம் திரும்பினானாம். இன்றும் இந்தத் தலத்தில், ஆவணி மாதம் 9-ஆம் நாளன்று இந்திர பூஜை வெகு விசேஷமாக நடை பெறுகிறது.
கும்பகோணம்- தஞ்சை வழியில் அமைந்துள்ளது திருவலஞ்சுழி. சுவாமிமலையில் இருந்து தெற்கே சுமார் 1 கி.மீ. தூரம். அருகிலேயே அரிசிலாறு பாய்கிறது.
அழகுறத் திகழும் கோயிலின் ராஜகோபுரத்தைத் தாண்டி, உள் கோபுரமும் கடந்து உள்ளே சென்றால், ஸ்ரீசுவேத விநாயகர் சந்நிதியைத் தரிசிக்கலாம். சந்நிதியின் முன்புறம், இந்தத் தலத்துக்கு சிறப்பு சேர்க்கும் பலகணி (ஜன்னல்); சுமார் 9 அடி உயரம்; 7 அடி அகலம், 16 துளைகளுடன் ஒரே கல்லால் அமைக்கப்பட்டிருக்கிறது! 16 என்பது 16 வகை கணபதியையும், முழுமையையும் காட்டுவதாகக் கொள்ளலாம். இங்குள்ள கொடுங்கை களும், சித்திரத் தூண்களும், சக்கரத் துடன் கூடிய ரதம் போன்ற அமைப் பும், கல் விளக்குகளும், அலங்கார மண்டபமும் மிக அற்புதம்!
சுவேத விநாயகர், கடல்நுரை மூர்த்தியானதால் வெள்ளை வெளேரெனக் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. பச்சைக் கற்பூரம் சார்த்தி வழிபடு கின்றனர். இங்கு விநாயகர் பரிவார தெய்வமாக இருந்தாலும், பிரம் மோற்ஸவம் இவருக்குத்தான்! உற்ஸவ மூர்த்தியான வாணி- கமலாம்பிகை சமேத ஸ்ரீசுவேத விநாயகருக்கு, விநாயக சதுர்த்தியை ஒட்டித் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
மனம் கலங்கிய மன்னன், அங்கே கொட்டைமுத்து (ஹேரண்டம்) செடியின் அருகில் தவமிருந்த ஹேரண்ட முனிவரிடம் (இவரே ஆத்ரேய மகரிஷி) வேண்ட, அவர் பிலத்தில் இறங்கினார். பிலம் மூடிக் கொள்ள, காவிரிதேவியும் பிலத்துக் குள்ளிருந்து பொங்கிப் பெருகி வந்து, இந்தக் கோயிலை வலம் சுழித்து ஓடத் துவங்கினாள். திருஞானசம்பந்தர் காலத்தில், காவிரி இந்தத் தலத்தை வலமாகச் சுழித்து ஓடியதால், இந்த ஊருக்கு வலஞ்சுழி என்று பெயர் வந்தது. தற்போது, வெகுதூரம் தள்ளி, கோயிலுக்கு வடபுறம் அரிசிலாற் றையும் தாண்டி ஓடுகிறது காவிரி. இன்றும் திருவலஞ்சுழி மற்றும் திருக்கொட்டையூர் கோயில்களில் ஹேரண்ட முனிவரின் திருவுருவச் சிலைகளைத் தரிசிக்கலாம்.
பங்குனி உத்திரத்தின் முதல் நாளன்று, வேடரூபக் காட்சி விழாவும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப் படுகிறது. வள்ளி தினைப்புனம் காக்கும் நிலையில், நன்கு விளைந் திருக்கும் தினைப்புனத்தில் அந்தத் தேவியை அலங்கரித்து வைத்திருப்பர். அவளுக்கு... வேங்கை மரம், விருத்தன், வேடன் ஆகிய அலங்காரங்களில் மாறி மாறி காட்சி கொடுப்பார் வேலவன் (இந்த வைபவம்
நடைபெறுவது விநாயகர் சந்நிதி அருகில்). அதிகாலையில், அருகில் உள்ள அரிசிலாற்றில் வள்ளியை யானை விரட்ட, அவள் வேடனை மணப்பதற்குச் சம்மதிக்க... வள்ளி கல்யா ணம் சிறப்புற நடைபெறும்.
அக்குறமகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் விநாயகன்... நமக்கும் அருள் புரிவார்!
- பிள்ளையார் வருவார்...
பிள்ளையாரின் ராஷதானி!
மகாராஷ்டிர மாநிலத் தில் 'அஷ்டவிநாயகர்’ எனும் எட்டு விநாயகர் தலங்களை விசேஷமாகக் கருதுவர். அவற்றில் மிகப் பிரபலமானது, 'மோர்காம்’ என்ற இடம். இது, மயூர கிராமம் என்பதன் திரிபாகும். இந்தத் தலத்தில் அருளும் விநாயகரை ஸ்ரீமயூரேசர் என்பார்கள். இந்தத் தலத்தின் புராணம், திருவலஞ்சுழியை தக்ஷிணாவர்த்தம் எனக் குறிப்பிடுகிறது. தக்ஷிணி- வலம்; ஆவர்த்தம்- சுழி. இந்த தக்ஷிணாவர்த்தம் என்பது, திருவலஞ்சுழி பிள்ளையாரின் ராஜதானியாகச் சொல்லப்பட்டுள்ளது என்ற அரிய செய்தியைக் காட்டுகிறார் காஞ்சி காமகோடி மஹா ஸ்வாமிகள்.
|
No comments:
Post a Comment