மகத நாட்டை ஆண்ட மாகத மன்னன்- விபுதை தம்பதிக்கு, யானைத் தலையும் அசுர உடலும் கொண்ட ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு கஜமுகாசுரன் என்று பெயரிட்டு வளர்த்தனர். குறிப்பிட்ட வயது வந்ததும், தந்தையின் விருப்பப்படி, சிவனாரை நோக்கித் தவமிருந்து அரிய வரங்களைப் பெற்றான் கஜமுகாசுரன்.
எவராலும் அழிக்கமுடியாத ஆற்றலும், தேவர்களே குற்றேவல் செய்யும் பாக்கியமும் பெற்ற கஜமுகன், விசித்ரகாந்தி என்பவளை மணந்து, மதங்கபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆளத் துவங்கினான்.
அதன்படி ஸ்ரீவிநாயகர் அவதரித்து, கஜமுகாசுரன் பெற்ற வரத்தின்படியே ஆயுதம் மற்றும் அஸ்திரங்களால் அல்லாது, தன் வலக் கொம்பையே (தந்தம்) ஒடித்து, அசுரன் மீது ஏவி, அவனை அழித்தார். அசுரனோ, தான் பெற்ற வர பலத்தால் பெருச்சாளியாக உருப்பெற்று எழ, அவனை அடக்கி, தனது வாகனமாக ஏற்றார் விநாயகர். கஜமுகனை தாக்கியபோது, அவன் உடம்பிலிருந்து ரத்தம் பெருகி, அந்த இடமே செங்காடாக மாறியதாம். எனவே அந்தப் பகுதி, செங்காடு- செங்காட்டுக்குடி என்று பெயர் பெற்றதாகத் தலபுராணம் விவரிக்கிறது.
அசுர வதத்தால் ஏற்பட்ட தோஷம் நீங்க, சிவலிங்க பிரதிஷ்டை செய்து கணபதி வழிபட்ட கோயில், கணபதீச்சரம் எனும் பெயருடன் திருச்செங்காட்டங்குடியில் அமைந்துள்ளது. தமிழகத்தில் 'கணபதீச்சரம்’ என்ற பெயரில் அமைந்த ஒரே தலமாகிய இது, நன்னிலம்- நாகப்பட்டினம் மார்க்கத்தில் அமைந்துள்ளது. வருடந்தோறும், மார்கழி வளர்பிறை சஷ்டியும், சதய நட்சத்திரமும் கூடும் நன்னாளில், சிவனாரை கணபதி பூஜிக்கும் விழா சிறப்புற நடைபெறுகிறது. கணபதி பெருமான் சிவபூஜை செய்யும் தூண் சிற்பம் ஒன்றையும் இந்தக் கோயிலில் காணலாம்.
இங்கு அருளும் விநாயகருக்கு, ஸ்ரீவாதாபி கணபதி என்று திருப்பெயர். இல்வலன், வாதாபி ஆகிய அசுர சகோதரர்கள், நர மாமிசம் உண்ணும் மூர்க்கர்களாவர். அதிலும் ரிஷிகள் மற்றும் முனிவர்களைக் கொன்று தின்பதில் அலாதிப் பிரியம் இவர்களுக்கு! வேதியரின் உருவில் முனிவர்களிடம் சென்று, தன் இல்லத்துக்கு விருந்துக்கு அழைப்பான் இல்வலன். அதையேற்று விருந்துண்ண வரும் முனிவர்களுக்கு, தம்பி வாதாபியையே கறியாகச் சமைத்துப் பறிமாறுவான். முனிவர்கள் சாப்பிட்டு முடித்ததும், 'வாதாபியே, வெளியே வா!’ என இல்வலன் அழைக்க, வாதாபியும் ஆட்டின் உருவம் ஏற்று, முனிவர்களின் வயிற்றை கொம்பால் கிழித்தபடி வெளியேறுவான். பிறகென்ன... அந்த முனிவரின் உடல் அசுரர்களுக்கு உணவாகும்!
ஒருமுறை, அகத்தியரை விருந்துண்ண அழைத்து வந்தான் இல்வலன். அவர் சாப்பிட்டு முடித்ததும், 'வாதாபி, வெளியே வா!’ என அழைத்தான். அப்போது விநாயக தியானத்தில் இருந்த அகத்தியருக்கு, அசுர சூழ்ச்சியை உணர்த்தினார் விநாயகர். உடனே, தமது வயிற்றைத் தடவியபடி, ''வாதாபி ஜீர்ணோபவ (வாதாபியே, ஜீரணமாகிவிடு!)'' என்றார் அகத்தியர். அவ்வளவுதான்... அகத்தியரின் வயிற்றுக்குள்ளேயே ஜீரணமானான் வாதாபி. பயந்துபோன இல்வலன், முனிவரிடம் சரணடைந்தான் (முனிவர் மீது கோபம் கொண்டு இல்வலன் அவரை அழிக்க பாய்ந்ததாகவும், அகத்தியர் ஒரு தர்ப்பைப் புல்லை அஸ்திரமாக்கி அவனை அழித்ததாகவும் ஒரு கதை உண்டு).
வாதாபியை அழிக்க உதவிய விநாயகருக்கு விசேஷ பூஜைகள் செய்தார் அகத்தியர். அப்போது அவர் உபாசித்த கணபதி திருக்கோலமே... ஸ்ரீவாதாபி கணபதி.
சாளுக்கியர்களின் தலைநகரமும் வாதாபியே! அசுர சகோதரர்கள் வாழ்ந்தது இங்குதான் என்பர். இதை ஆட்சி செய்த 2-ஆம் புலிகேசி, பல்லவ மன்னனான மகேந்திர வர்மனைத் தோற்கடித்தான். இதற்குப் பழிதீர்க்கும் பொருட்டு, மகேந்திரவர்மனின் மகன் நரசிம்மவர்மன் எனும் மாமல்லன், சாளுக்கியத்தின் மீது படையெடுத்து, வாதாபியைத் தீக்கிரையாக்கினான். இவனுடைய தளபதியான பரஞ்சோதியார் (நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் என்பவர் இவரே), அங்கிருந்து விநாயகர் சிலை ஒன்று கொண்டுவந்து, திருச்செங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்தார் என்றும் சொல்வார்கள்.
ஆனால், பெரியபுராணம்- சிறுத்தொண்ட நாயனார் வரலாற்றில் இது பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. மேலும், திருச்செங்காட்டங்குடி ஸ்ரீவாதாபி கணபதி விக்கிரகம், சாளுக்கிய கலைப்பாணியில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் அங்க அமைப்பு, பிள்ளையார்பட்டி கணபதியின் வடிவம் போன்று உள்ளது. ஆகவே, பல்லவர் பாணியில் விநாயகர் வடிவம் தயாரித்து, இந்தத் தலத்தில் பரசோதியார் பிரதிஷ்டை செய்திருக்கலாம்; வாதாபி வெற்றியின் நினைவாக 'ஸ்ரீவாதாபி கணபதி’ என பெயர் அமைந்திருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்து.
திருச்செங்காட்டங்குடி ஆலயம் பல்லவர் சிற்ப பாணியில் அமைந்திருப்பதும் இதற்குச் சான்றாகும் (திருவாரூரில் உள்ள ஸ்ரீவாதாபி கணபதி விக்கிரகம், சாளுக்கிய பாணியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது).
திருச்செங்காட்டங்குடி கோயிலில் காணப்படும் சோழர் காலக் கல்வெட்டுகளில், 'கயா மாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு திருச்செங்காட்டங்குடி உடையவர் கணபதீச்சர முடையார் கோயில்’ எனும் குறிப்பு, கணபதி பூஜித்த தலம் என்பதை உறுதி செய்கிறது.
இந்தத் தலம் குறித்த திருஞானசம்பந்தரின் திருமுறைப் பாடல்களும், இந்தக் கோயிலை கணபதீச்சரம் என்றும், ஊரை திருச்செங்காட்டங்குடி என்றும்தான் குறிப்பிடுகின்றன. 'சிறுத்தொண்டருக்கு அருள் செய்யும் பொருட்டாகக் கடி நகராய் வீற்றிருந்தாய் கணபதீச்சரத்தானே’ என அவரது பெருமையையும் குறிப்பிடுகிறார் திருஞானசம்பந்தர்.
- பிள்ளையார் வருவார்...
No comments:
Post a Comment