ஓர் உயிர் ஜனிக்கும்போதே, அதனுடைய மொத்த வாழ்க்கையும் படைத்தவனால் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது என்கின்றன வேதங்கள். மிகப் பெரிய மகான்களையும் ஞானிகளையும் படைக்கிறபோதுகூட, சூட்சுமமாகச் சில விஷயங்கள் மூலம், 'இந்தக் குழந்தை பிற்காலத்தில் மிகப் பெரிய மகானாக, சித்த புருஷனாகத் திகழப் போகிறது’ என்பதை ஏதோ ஒருவிதத்தில் உணர்த்திவிடுகிறான் இறைவன்.
அள்ளியெடுத்துக் கொஞ்சி விளையாடப் பிள்ளை வேண்டுமே என்று தவித்து மருகுகிற உலகம் இது. அந்தப் பிள்ளை வரமும் விதி இருந்தால்தான், அதாவது ஏற்கெனவே தலையில் எழுதப்பட்டிருந்தால்தான் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள்.
நம்முடைய இந்தப் பிறப்பில் கிடைக்கும் பலன்கள் யாவும், கடந்த பிறவிகளின்போது செய்த நன்மை களாலும் தீமைகளாலும் கிடைப்பவையே என சாஸ்திரங்களும் புராணங்களும் தெரிவிக்கின்றன. 'எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினேனோ...’ என்று இந்தப் பிறப்பின்போது ஏற்படுகிற கஷ்டங்கள் குறித்துப் புலம்புபவர்கள் உண்டு. அதேபோல், 'எந்தப் பிறவியில் என்ன புண்ணியம் பண்ணினேனோ, இப்படியரு அப்பா- அம்மாவுக்குப் பிள்ளையாய்ப் பிறந்திருக்கேன்!’ என்று பெருமிதமாகப் பேசுபவர்களும் இருக்கிறார்கள். நல்ல மனைவியோ, கணவனோ அமைவதெல்லாம்கூட நம் முன்ஜென்ம வினைகளுக்கேற்ப இறைவன் கொடுக்கும் வரம்தான்!
எது, எப்போது, எவரால், எங்கே கிடைக்கும் என்பது தெரியாமலும் அறியாமலும் போய்க்கொண்டிருக்கிற இந்த வாழ்க்கைதான், உலகின் மிகப்பெரிய சுவாரஸ்யம். இவற்றையெல்லாம் முன்கூட்டியே அறிவதற்கும், ஆண்டவனை அடைவதற்கும் தவித்தவர்களும் ஏங்கிய வர்களுமே முனிவர்கள், ஞானிகள் என்றெல்லாம் போற்றப் பட்டார்கள். அப்படி மகானாக, அவதார புருஷனாக, முனிவராக, யோகியாக இருப்பதற்கும் எந்த ஜென்மத்திலேயோ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கின்றனர் ஞான குருமார்கள். ஆனாலும், இடைவிடாத இறை பக்தியும் தவமும் நற்சிந்தனைகளும் நம்மை மெள்ள மெள்ள நற்கதிக்கு மாற்றவல்லவை என போதித்தார்கள், மகான்கள்.
'பிரம்மதேவரே, கலக்கம் வேண்டாம்! சிவப்பரம்பொருள் உங்களை மன்னித்தருள சித்தம் கொண்டுவிட்டது. இனி, வழக்கம்போல் உமது படைப்புத் தொழிலை சிரத்தை யுடன் செய்யத் துவங்குங்கள்’ என உமையவள் கனிவும் கருணையுமாக பிரம்மதேவரிடம் சொல்ல... 'என் பாக்கியம்... என் பாக்கியம்...’ என்று கரம் குவித்தார் பிரம்மன்.
''கர்வத்தை முற்றிலுமாகத் தொலைத்துவிட்டு, தவத்தில் மூழ்கியதால், படைப்புத் தொழிலுக்கான அதிகாரத்தை மீண்டும் உன்னிடம் இதோ, இந்தத் திருவிடத்தில் வழங்கத் தயாராக இருக்கிறேன். அதுமட்டுமின்றி, இந்தத் தலத்தில் அமர்ந்து, வருகின்ற அடியவர்களுக்கெல்லாம் அருள்பாலிக் கவும் எண்ணியுள்ளேன்'' என்ற சிவனார், ''இந்தத் தலத்துக்கு வருவோர் எவராக இருப்பினும், விதி இருப்பின் விதி கூட்டி அருளுக!'' என்று கட்டளை போலும், மெல்லிய உத்தரவு போலும், பக்தர்களின்பால் கொண்டிருக்கிற வாஞ்சை போலும் தெரிவித்தார்.
'விதி இருப்பின் விதி கூட்டி அருளுக! விதி இருப்பின் விதி கூட்டி அருளுக!’ எனத் திரும்பத் திரும்பப் பலமுறை உள்ளுக்குள் சொல்லிக்கொண்டார் பிரம்மா.
இறைவன், பக்தர்கள் மீது கொண்ட கருணையை நினைத்துப் பூரித்த உமையவள், ''அடடா..! என்ன அற்புதமான யோசனை! 'பிறக்கும் போது இப்படி இப்படி என்று எழுதி வைத்த விதியை, என் அடியவர் களுக்காக மாற்ற முடியுமென்றால், கொஞ்சம் மாற்றித் திருத்தி எழுதி அருளவேண்டும்!’ என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டீர்கள்'' என்று பெருமிதத்துடன் கணவரை நமஸ்கரித்தவள், ''சிவப்பரம்பொருள் இங்கு இந்தத் தலத்தில் வாசம் செய்யத் திருவுளம் கொண்டுவிட்டார். எனவே, வருகின்ற என் பிள்ளைகள் அனை வரையும் ஆசீர்வதித்து அருள, நானும் இங்கே அவருடன் இருப்பதுதானே முறை! என்ன பிரம்மதேவரே, நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே..?'' என்று கேட்டாள் தேவி.
நெகிழ்ச்சியில் திக்குமுக்காடிக் கொண்டு இருந்த பிரம்மன், ''இந்தத் திருவிடத்துக்குத் தங்களைத் தரிசிக்க வருவோர் எவராக இருப்பினும், அவர்களின் தலையெழுத்தை மாற்றி, திருத்தி எழுதத் தயாராக இருக்கிறேன். இது உறுதி! அடியேனுக்கும் தங்களின் திருவிடத்தில் சின்னதாக இடம் தாருங்கள்.
விதி கூட்டி அருளச் சித்தமாக இருக்கும் என்னை ஆசீர்வதியுங்கள்'' என்று மீண்டும் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து ஈசனை வணங்கினார்.
அன்று துவங்கி, இன்றளவும் தலையெழுத்தை மாற்றி அருளும் தலமாகத் திகழ்கிறது திருப்பிடவூர் எனப்படும் திருப்பட்டூர். திருச்சி சமயபுரத்துக்கு அருகில், சிறுகனூரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தலம், அற்புதமான திருவிடம். ஏழு நிலை ராஜகோபுரத்துடன் திகழ்கிற கோயிலும், நுழை வாயிலும் அருகில் சின்னதான மண்டபமும் வெகு அழகு! இந்தத் தலத்து இறைவன்- ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர். அம்பாள்- ஸ்ரீபிரம்ம சம்பத்கௌரி. பிரமாண்டமான கோயிலில், சிவ சந்நிதிக்கு அடுத்தாற்போல, பிரம்மனும் அழகுறக் காட்சி தருகிறார். பிரம்மனுக்கு சந்நிதிகள் உள்ள ஆலயங்கள் குறைவு. அதிலும் குறிப்பாக, இந்தத் தலத்தின் சந்நிதியில், மிகப் பிரமாண்டத் திருமேனியுடன் அருள்கிறார் ஸ்ரீபிரம்மா.
இங்கேயுள்ள ஒவ்வொரு இடமும் உயிரோட்டம் நிறைந்தவை. அம்பாளின் சந்நிதிக்கு அடுத்தாற்போல, பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளமும், அவர் வணங்கி ஆராதித்த சிவலிங்கச் சந்நிதிகளும் அமைந்துள்ளன. விசாலமான அந்த இடத்தில் சற்று நேரம் அமர்ந்து, அனைத்து சிவலிங்க மூர்த்தங்களையும் வழிபட்டால்... பன்னிரண்டு சிவத்தலங்களுக்குச் சென்று தரிசித்த புண்ணியம் கிடைக்குமாம்!
- பரவசம் தொடரும்
No comments:
Post a Comment