Wednesday, 4 October 2017

திருப்பட்டூர் அற்புதங்கள்! - 5


வெயிலின் உக்கிரம் திடீரென்று காணாமல் போனது. வானில் மேகங்கள் இங்கிருந்து அங்கே, அங்கிருந்து இங்கே என மெள்ள நகர்ந்துகொண்டு இருந்தன. பூமியெங்கும் மெல்லிய காற்று வீசத் துவங்கியது. அந்தக் காற்றில் லேசாகக் குளிர்ச்சியும் ஒட்டிக்கொண்டு இருந்தது. இந்தக் காற்றும் குளிர்ச்சியும் பூமியெங்கும் பரவ... அங்கே அதுவரை படர்ந்திருந்த வெப்பமும், அதனால் ஏற்பட்டிருந்த ஒருவித வாசனையும் மெள்ள மெள்ள அகன்றன.
மகிழம்பூ மரங்களும் வில்வ மரங்களும் சூழ்ந்த வனப் பகுதி, திருப்பிடவூர். மகிழ மரங்கள், தெய்வீகத் தன்மை கொண்டவை; அதன் நறுமணம் நாசியில் பட்டு, புத்திக்குள் ஏறினால், வேறு எதன் மீதும் சிந்தனை தடம் புரளாது; இவ்வுலகைப் படைத்த பரம்பொருளைப் பற்றிக் கொள்வதான தவத்தில், முழுவதுமாக மனம் வெகு சுலபத்தில் லயித்துவிடும். சப்பணமிட்ட கால்கள், எழுவதற்கோ நிற்பதற்கோ தவிக்காது. நேராக்கியபடி அமர்ந்திருக்கிற முதுகுத் தண்டு, மரத்தின் வேர் போல் உறுதிப்பட்டுக் கிடக்கும். மூச்சில் ஒரு தாள லயம் வந்திருக்கும்; அந்த லயம் மூச்சை இன்னும் இன்னும் சீராக்கிவிடும். இதனால்தான், முனிவர்களும் ஞானிகளும் மகிழ மரத்தடியை தவம் செய்வதற்குத் தோதான இடமாகத் தேர்வு செய்தனர்.
திருப்பிடவூர் தலத்தில், அதுவரை மெல்லியதாக வீசிய காற்று, சற்றே வேகமெடுக்கத் துவங் கியது. அந்த வேகத்தில், மரத்தின் கிளைகள் சலசலத்தன. இலைகளும் பூக்களும் அசைந்தன. பூக்களின் நறுமணம், காற்றுடன் கலந்தது. காற்று அந்த நறுமணத்தை நாலாதிசையெங்கும் கொண்டு சென்றது.
ஊரின் கடைக்கோடியில் இருந்த வியாக்ரபாதர் சட்டென்று கண் திறந்தார். அவருடைய முகத்திலும் கண்களிலும் அப்படியரு பிரகாசம்; விவரிக்க முடியாத தேஜஸ் வியாபித்திருந்தது. 'நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம்...’ என்று சொல்லியபடி, எழுந்தார் வியாக்ரபாதர். ஊரில் இருந்து வெளியே செல்லும் பாதையில், அவருடைய பார்வை குத்திட்டு நின்றது.
'அடேய் நண்பனே..! என் இனிய பதஞ்சலி... வந்துவிட்டாயா’ என்று உரக்கச் சொல்லிக் கொண்டார் வியாக்ரபாதர். 'வா... இப்பிறவியின் நோக்கம் நிறைவேறப் போகிறது, வா!’ என திசை பார்த்துப் பேசினார்; கைகளை நீட்டி, 'வா’ என்பதுபோல் அழைக்கும் பாவனை செய்தார்.
அங்கே... ஊரின் எல்லைப் பகுதியை அடைந்த, பதஞ்சலி முனிவர், புண்ணியபூமியான திருப்பிடவூர் திருத்தலத்து எல்லையின் துவக்கத்தில் தனது வலது காலை எடுத்து வைத்தார். 'தென்னாடுடைய சிவனே போற்றி..!’ எனப் பெருங்குரலெடுத்து, கரம் குவித்து அழைத்தார். அந்தக் குரல், வியாக்ரபாதரின் செவிகளில் வந்து விழுந்தது. 'எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!’ என பதில் குரல் கொடுத்தார் வியாக்ரபாதர்.
அவ்வளவுதான்... மெள்ள நகர்ந்துகொண்டிருந்த மேகங்கள், ஆங்காங்கே சட்சட்டென்று மோதிக் கொண்டன. சரசரவென, சின்னச் சின்னக் கம்பிகளாகப் பெய்யத் துவங்கியது மழை. மழையுடன் காற்றும் கைகோத்துக் கொள்ள... அந்த வனம் முழுவதும் மகிழம்பூ வாசனையும் வில்வ வாசனையும் சூழ்ந்துகொண்டது. அந்த நறுமணங்கள் நாசியின் வழியே, மூளைக்குள் செல்லத் துவங்கியதும், 'என் சிவனே... என் சிவனே...’ என்று குரல் எழுப்பியபடி, வியாக்ரபாதரை நோக்கி ஓடோடி வந்தார் பதஞ்சலி முனிவர்.
மழை இன்னும் வெளுத்து வாங்கியது. பூமியெங்கும் குளிர்ச்சி பரவியது. பூக்களிலும் இலைகளிலும், வேர்களிலும் காய்களிலும் மழை நீர், சின்னச் சின்னத் திவலைகளாக நின்றுகொண்டன. பதஞ்சலி முனிவர் வருகிற திசையை நோக்கி, மலர்களும் இலைகளும் திரும்பிப் பார்த்தன. அந்த நீர்த் திவலைகள், சிவபூத கணங்கள் என்பதை வியாக்ர பாதரும் அறியவில்லை; பதஞ்சலி முனிவரும் பார்க்கவில்லை.
இரண்டு பேரும் சந்தித்துக்கொண்டனர். மழை பெரும் இரைச்சலுடன் இன்னும் வேகம் எடுத்தது. அந்த இரைச்சலு னூடே... தனக்கு நிகழ்ந்தவற்றை ஒவ்வொன்றாக விவரித்தார், வியாக்ரபாதர். சொல்லும்போதே, கண்களில் இருந்து கரகரவென கண்ணீர் வழிந்தது. சொட்டச் சொட்ட நனைந்தபடி பேசும் அவரின் உச்சந்தலையில் இருந்து முகம், கன்னம், தாடி என வழிந்துகொண்டிருந்த மழை நீருடன் அந்தக் கண்ணீர் கலந்தது.
முழுவதையும் கேட்ட பதஞ்சலி முனிவர், அண்ணாந்து வானம் பார்த்தார். 'இந்த திருத்தலத்தில் மழையைப் பெய்வித்துக் குளிரச் செய்ததுபோல், எங்களையும் அகம் குளிரச் செய்துவிட்டாய், என் ஈசனே! என்னே உன் கருணை!’ என வானத்தை நோக்கி, இரண்டு கரங்களையும் சிரசின் மேல் வைத்துக்கொண்டு, வணங்கினார்; அப்படியே பூமியில் மண்டி யிட்டு அமர்ந்தார்.
இரண்டு கைகளாலும் மண்ணை அள்ளினார். மழை நீர் கலந்ததால், செக்கச் செவேலென இருந்தது மண். அதனை எடுத்து, நெஞ்சில் பூசிக் கொண்டார்; கண்களில் ஒற்றிக் கொண்டார். கைகளில் மீதமிருந்த மண்ணை அப்படியே தலையில் போட்டுக் கொண்டார்.
''பதஞ்சலி, இதோ... நான் உருவாக்கிய தீர்த்தம். குளமே இல்லாத இடத்தில் குளம் உருவாகி, எங்கிருந்த கங்கையோ இங்கே இந்த அடியவனுக்காக வந்து குளத்தில் நிரம்பிக் கொண்டாள், பார்த்தாயா?’ என்று பெருமிதத்துடன் குளத்தைச் சுட்டிக் காட்டினார் வியாக்ரபாதர்.
அந்தக் குளம், அப்படியே புலியின் கால்களைப் போலவே இருந்தது. புலிக்கால்களின் வடிவமாகவே திகழ்ந்த அந்தக் குளத்தை, இப்படியும் அப்படியுமாக நகர்ந்து பார்த்தார் பதஞ்சலி முனிவர்.
'என்னப்பா வியாக்ரா! உனது கால்களைப் போல் அல்லவா இந்தக் குளம் இருக்கிறது. புலியைப் போல் கால்கள் கேட்டது, வில்வ மரத்தில் ஏறி, இலைகளைப் பறித்து சிவனாருக்கு அர்ச்சிப்பதற்காகத் தானே?! இப்போது பார்... பூமியில் நீ உதைத்ததில், அந்த இடமே அச்சுஅசலாக உன் கால்களைப் போலவே காட்சி தருகிறது. இது, புலிப்பாய்ச்சி திருக்குளம்; புலியைப் போல் நீ பாய்ந்த திருக்குளம். அடடா... கங்கா நதியே... எங்கள் கருணைத் தாயே! இந்த ஜென்மத்து வாசனைகளை மட்டுமின்றி, எங்களது பாவங்களையும், அந்தப் பாவங்களின் அழுக்குகளையும் அகற்றிவிடு! எங்கள் சிவனாரின் சிரசில் குடியிருப்பவளே... இந்தப் பிள்ளைகளின் புத்தியில் எந்த ஜென்மத்துப் பாவக் கறைகள் ஒட்டிக்கொண்டிருந்தாலும் அவற்றை அகற்றி விடு!'' என்று வேண்டியபடியே, தடாலென்று குளத்தில் குதித்தார் பதஞ்சலி முனிவர். மூக்கைப் பிடித்தபடி, கண்களை மூடிக் கொண்டு, கிழக்குப் பார்த்த முகமாக நின்று, அப்படியே அந்தக் குளத்தில் மூழ்கினார்.
இதைக் கண்ட வியாக்ரபாதரும், குளத்தில் இறங்கினார்; மூக்கைப் பிடித்துக்கொண்டு, நீருக்குள் மூழ்கி எழுந்தார். இருவரும் இரண்டு உள்ளங்கைகளாலும் தண்ணீரை எடுத்துக் கொண்டு, சிரசையும் கடந்து உயர்த்தியபடி நின்றனர்.
'என் சிவனே... கங்கையில் நீராடி, எங்கள் பாவங்களையும் போக்கிக்கொண்டோம். இதோ... அந்தக் கங்கை நீராலேயே, உன்னை அபிஷேகிக் கிறோம். ஏற்றுக்கொள்; பிறகு எங்களையும் ஏற்றுக்கொள்வாய்!’ என்று சொல்லிவிட்டு, பதஞ்சலி முனிவரும் வியாக்ர பாதரும் உள்ளங்கையிலிருந்த தண்ணீரை, அப்படியே மெள்ளக் குளத்திலேயே விட்டனர்.
அங்கே... திருக்கயிலாயத்தில், சிரசில் இருந்து வழிந்து, முகம் முழுக்கப் பரவி, தோள்களில் படர்ந்து, தேகம் முழுவதும் அபிஷேகித்தது தண்ணீர். திருப்பிடவூர் திருத்தலத்தையும் வியாக்ர பாதரையும் பதஞ்சலி முனிவரையும் பார்த்தபடி, மெல்லியதாக புன்னகைத்தார் சிவபெருமான்!  அதைக் கண்டு, பார்வதிதேவியும் புன்முறுவல் பூத்தாள்; அப்படியே அவர்களை நோக்கிக் கை உயர்த்தி ஆசீர்வதித்தாள்.
விடாது பெய்துகொண்டே இருந்தது மழை; அந்தத் திருப்பிடவூர் பூமி, இன்னும் இன்னும் குளிர்ந்து போனது!
- பரவசம் தொடரும்

No comments:

Post a Comment