வெள்ளிக்கிழமை மற்றும் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரை பிறந்தவர்களை சுவாதி நட்சத்திரம் ஆட்சி செய்கிறது. இந்த நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுக்கள் ஆரோக்கியத்தையும், கெட்ட கதிர்வீச்சுகள் வியாதிகளையும் உண்டுபண்ணுகின்றன. இதனை சுவாதி நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தைப் போக்கும் சக்தி மருத மரத்துக்கு உண்டு!
மருத மரம், சுவாதி நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுக்களைத் தனக்குள் சேமித்து வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. சுவாதி நட்சத்திரக்காரர்கள், தினமும் அரை மணி நேரம் மருத மர நிழலில் அமர்வது மிகுந்த பலனைத் தரும். இதனால், சுவாதி நட்சத்திர தோஷம் விலகும்.
திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம் - மருத மரம்!
கும்பகோணம்- மயிலாடுதுறை செல்லும் வழியில், சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தக் கோயில். திருவாவடுதுறை ஆதீன நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆலயம் இது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் பாடிப் பரவிய தலம் இது. அதுமட்டுமா? கருவூர்த் தேவர், பட்டினத்தார், அருணகிரி நாதர், கவிகாளமேகம் ஆகியோர் இந்தத் தலத்துக்கு வந்து, பாடிப் போற்றியுள்ளனர்.
இந்தத் தலத்தின் தேரோடும் நான்கு வீதிகளிலும் தனித்தனியே சிவாலயங்கள் இருக்க... நடுநாயகமாக ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். இதனால் இந்தத் தலம் பஞ்சலிங்கத் தலம் எனப் போற்றப்படுகிறது. மேலும், மத்யார்ஜுனத் தலம் என்றும் போற்றப்படுகிறது. வடக்கில் மல்லிகார்ஜுனம் (ஸ்ரீசைலம்), தெற்கில் ஸ்புடார்ஜுனம் (திருநெல்வேலி) ஆகிய தலங்களுக்கு நடுவில், அமைந்திருப்பதால் இந்தத் திருப்பெயர்! அர்ஜுனம் என்றால் மருத மரம் என்று அர்த்தம்.
இன்னொரு தகவல்... காசிக்கு நிகரான பதினொரு சிவத்தலங்களில் இந்தத் தலமும் ஒன்று. இங்கு இறைவனின் திருநாமம்- ஸ்ரீமகாலிங்கம்; அம்பாள்- ஸ்ரீபிரகத் சுந்தர குஜாம்பிகை; பெருநல மாமுலையம்மை எனத் தமிழில் அழைக்கின்றனர். இங்கே, ஸ்ரீமூகாம்பிகை தவக் கோலத்தில் காட்சி தருகிறாள். இங்கேயுள்ள கணபதிக்கு, ஸ்ரீஆண்ட விநாயகர் எனத் திருநாமம். ஸ்ரீமகாலிங்கத்துக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும், ஸ்ரீஆண்ட விநாயகருக்கு பூஜைகள் நடைபெறுவது, இந்தத் தலத்தின் சிறப்பு!
ஏழு கோபுரங்கள், ஏழு பிராகாரங்கள், ஏழு கிணறுகள் கொண்ட அற்புதத் தலம் இது. 27 நட்சத்திரங்களும் பூஜித்த சிவலிங்கங்கள் இங்கே உள்ளன. அற்புதமாக வடிக்கப்பட்ட பாவை விளக்கு, அர்த்த மண்டபத்தில் போக சக்தி அம்மன், மகா மண்டபத்தில் 12 ராசி களைக் குறிக்கும் 12 தூண்கள்... எனச் சிறப்புகளுடன் திகழும் இந்த ஆலயத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, அகத்தியர், சப்த கன்னியர், வள்ளி - தெய்வானை சமேத ஸ்ரீதேவசேனாபதி, ஸ்ரீநடராஜர், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்கை எனப் பலரும் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர்.
மருத மரத்தின் இலைகளை அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், பித்தம் குறையும்; பாதங்கள் மற்றும் உள்ளங் கைகளில் ஏற்படும் வெடிப்புகள் குணமாகும். பச்சிலையை இடித்து, அதன் சாற்றைக் காது வலிக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தலாம்.
இதன் துளிர் இலைகளை அரைத்து, வேக வைத்து, புண்கள் மீது களிம்பு போல் பூசினால், விரைவில் புண்கள் ஆறிவிடும். மருத மரப்பட்டையைப் பொடியாக்கி, காய்ச்சிக் குடித்தால் அல்லது சாப்பிட்டால், இதய நோய்கள் யாவும் குணமாகிவிடும்.
எலும்பு முறிவு ஏற்பட்டால், இதன் பட்டையின் பொடியைத் தேனுடன் கலந்து சாப்பிட, பூரண குணம் கிடைக்கும். இதய அடைப்புக்குக் காரணமான கொழுப்பை நீக்கவும் கரைக் கவும் அர்ஜுன் (மருது) மரப்பட்டை உதவுகிறது. மூன்று கிராம் மருத மரப் பட்டையைப் பசும்பால் அல்லது தேனில் கலந்து கஷாயம் போல் அருந்தினால், இதய வால்வு அடைப்புகள் சரியாகிவிடும்.
வயலும் வயல் சார்ந்த இடத்தை மருதம் என்பார்கள். இங்கு வளரும் மருத மரத்தைக் கொண்டே இந்தப் பெயர் அமைந்ததாகவும் சொல்வார்கள். 'வேந்தன் மேய தீம்புனல் உலகம்’ எனத் தொல்காப்பியம் கூறுகிறது. அகநானூறு, கலித் தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு, பெரும்பாணாற்றுப்படை, குறுந்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, அகத்தியம் ஆகிய நூல்களில் மருதம் குறித்துச் சிறப்புறச் சொல்லப்பட்டுள்ளது.
மருதம், தமிழிசையில் ஒருவகையான பண். 'யாழ் கருவியின் நரம்பைத் தெரிந்து யாழோர் மருதப் பண்ணை இசைப்பர்’ என்கிறது மதுரைக் காஞ்சி.
தமிழகத்தில் மருதமலை ஸ்ரீதண்டாயுதபாணி ஆலயம், பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயம், உடுமலைபேட்டை ஸ்ரீஅர்ஜுனேஸ்வரர் ஆலயங்களில் மருத மரமே தல விருட்சம்!
- விருட்சம் வளரும்
'தோஷ நிவர்த்தி திருத்தலம்!’
'இந்தத் தலத்தில் ஸ்ரீருத்ர பூர்ண மகா மேரு, 27 நட்சத்திரங்கள் பூஜித்த சிவலிங்கங்கள், ஸ்ரீமூகாம்பிகை என பல சிறப்புகள் உண்டு. தைப்பூச விழா, வைகாசி விசாகம் திருக்கல்யாண வைபவம், மார்கழி திருவாதிரை என விமரிசையான விழாக்களுக்குக் குறைவே இல்லாத கோயில் இது!'' .
''இது, தோஷ நிவர்த்தி ஸ்தலம். நட்சத்திர தோஷம், சந்திர திசை, சந்திர புத்தி ஆகியவற்றால் ஏற்படும் நோயும், சனி திசை, ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமத்துச் சனி ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால் நீங்கும். நட்சத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஆடல்வல்லான் மண்டபத்தில் சாந்தி செய்துகொள்ள, தோஷம் நீங்கும்.
இந்தத் தலம், பூர்வஜென்ம பாப நிவர்த்தித் தலமும்கூட! மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம் ஆகியவற்றுக்கு இக்கோயிலில் உள்ள ஸ்ரீமூகாம்பிகைக்கு அபிஷேகம் செய்தால் விரைவில் நல்லது நடக்கும். மனநிலை பாதித்தவர்கள் இங்கு வந்து வணங்கினால், குணம் அடைவர்''
|
No comments:
Post a Comment