பூவனூர் இறைவனின் நாமத்தை நினைத்தவர்கள் வினைதீர்ந்து பாவங்கள் அழிந்து இந்திரனைவிட செல்வம் பெற்றவர்களாவார்கள். இந்தப் பூவனூர்ப் புண்ணியன் வெண்ணி ஆற்றின் தென்கரையில் இருக்கிறான். அவனைப் போற்றுவார்க்கு மறுபிறவி இல்லை. அவனை நாரணன் நான்முகன் இந்திரன் வாரணன் குமரன் ஆகியோர் வணங்குவார்கள் என்று அப்பர் பெருமானால் போற்றப்பட்ட தலம்.
இத்தலத்தில் இறைவன் சிவலிங்க வடிவில் காட்சி தரும் தலம். இறைவனுக்கு ஸ்ரீசதுரங்கவல்லப நாதர், ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர். புஷ்பவனநாதர் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் உண்டு. நந்திதேவர் மற்றும் அகத்தியர் முதலிய சித்தர்கள் பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். 1942 இல் இங்கு 48 நாள்கள் நடந்த அதிருத்ர மஹாயாகத்தில் காஞ்சி மஹாபெரியவர் பங்கேற்று தரிசித்திருக்கிறார்கள்.
எல்லா சிவத்தலங்களிலும் ஈசனுக்குத் துணையாக உமையம்மை சந்நிதி இருக்கும் ஆனால் பூவனூர் ஈசன் தலத்தில் மட்டும் வெளிப்பிரகாரத்தின் மத்தியில் உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கிய சந்நிதிகளில் இத்தலத்தின் இரண்டு தேவியர் கற்பகவல்லியும் ராஜராஜேஸ்வரியும் கோயில் கொண்டிருக்கிறார்கள். உட்பிரகாரத்தில் "புஷ்பவனநாதர்' என்றும் "சதுரங்கவல்லபநாதர்' என்றும் அழைக்கப்படும் மூலவர் சந்நிதி உள்ளது. அகன்ற திறந்த வெளிப் பிரகாரத்தில் தெற்குப் பகுதியில் சாமுண்டீஸ்வரி சந்நிதி அமைந்திருக்கிறது. சிவனாரும் பார்வதிதேவியும் வேண்டி விரும்பித் தங்கி அருள்பாலிக்கும் தலம் இது என்கிறது ஸ்தல புராணம். சிவனாரே மானுட உருவில் வந்து, சதுரங்கம் விளையாடியதால் அவருக்கு ஸ்ரீசதுரங்கவல்லபநாதர் என்று திருநாமம் அமைந்தது. சப்த மாதர்களுள் ஒருத்தியான சாமுண்டீஸ்வரிக்கும் இங்கே தனிச்சந்நிதி உள்ளது. அம்பிகையின் திருநாமம்- ஸ்ரீகற்பகவல்லி. என்பதாகும்.
உலகம் அழிந்து புதியதாக உருவான போது தன் பரிவாரத்துடன் வந்த ஈசன் பாமணி ஆற்றங்கரையில் இருந்த, இந்த தலத்தினைச் சுற்றிலும் இயற்கையான மணம் வீசும் பூக்கள் பூத்து நறுமணம் கமழ்வதைக் கண்டார்கள். இயற்கையான இவ்விடத்தில் இறைவனை தேவர்களும் சிவகணங்களும் பூசிக்க விரும்பினர். அவர்கள் ஆசையை பூர்த்தி செய்ய விரும்பிய இறைவன் ஒரு பலா மரத்தடியில் சிவலிங்க வடிவில் எழுந்தருளியதோடு உடன் வந்த உமையவளும் கற்பகவல்லி என்ற பெயரோடு அங்கேயே ஈசனுடன் கோயில் கொண்டாள்.
பிரிதொரு நேரம் தென்பாண்டி நாட்டு அரசன் வசுசேனனுக்கும் மனைவி காந்திமதிக்கும் நெடுநாட்களாகக் குழந்தை இல்லை. சிவபெருமானை வழிபட்டான். அரசன் நீராடியபோது, இறைவன் திருவருளால் உமையம்மையே அவர்களுக்கு மகளாகப் பிறப்பதற்காக அங்கு சங்கு ரூபத்தில் தென்பட்டாள். அரசன் அச்சங்கை கையில் எடுத்தவுடன் அது ஓர் அழகிய பெண் குழந்தையாக உருவெடுக்கக் கண்டு மிகவும் மனம் மகிழ்ந்து அக்குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்று பெயரிட்டு அருமை பெருமையுடன் வளர்த்து வந்தான். சப்த மாதர்களில் ஒருவளான சாமுண்டிதேவி அக்குழந்தைக்கு வளர்ப்புத் தாயாக வந்தாள். ராஜராஜேஸ்வரி சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று வளர்ந்தாள். குறிப்பாக சதுரங்க விளையாட்டில் மிகவும் திறமை பெற்று எல்லோரையும் வென்று விளங்கினாள். அரசன் மகளுக்கு மணம் முடிக்க வேண்டி, தகுந்த வரன் அமைய வேண்டும் என்ற நோக்கில் தன் மகளை சதுரங்க விளையாட்டில் வெல்பவருக்கே மணமுடிப்பது என்று தீர்மானித்தான்.
பல அரசகுமாரர்கள் வந்து சதுரங்க ஆட்டத்தில் அவளிடம் தோற்றுப் போனார்கள். மன்னன் யாராலும் மகளை வெல்ல முடியவில்லையே என்று வருத்தப்பட்டான். இறைவன் மீது பாரத்தைப் போட்டு தலயாத்திரைக்கு மகளுடன் கிளம்பிச் சென்றான். பல சிவத்தலங்களை தரிசித்து முடிவாக திருப்பூவனூர் வந்து சேர்ந்தான். இறைவன் புஷ்பவனநாதரை வழிபட்டு தன் மனக்கவலையை இறைவனிடம் சொல்லிவிட்டு தன் இருப்பிடம் திரும்பினான். மறுநாள் காலை ஒரு வயோதிகர் அரசனைத் தேடி வந்தார். ராஜராஜேஸ்வரியைப் பார்த்து தன்னுடன் சதுரங்கம் ஆட அழைத்தார். அவளும் சம்மதிக்க சதுரங்க ஆட்டம் துவங்கியது. அதுவரை ஆட்டத்தில் தோல்வியே காணாத அவள், அன்று அந்த முதியவரிடம் தோற்றுப் போனாள். அரசன் "தம் மகளை ஒருவர் வென்று விட்டாரே என்று மகிழ்ந்தாலும் மகளை ஒரு வயோதிகருக்கு தன் வாக்குப்படி மணமுடிக்க நேர்ந்ததே' என்று கவலைப்பட்டான். உள்ளம் உருகி சிவபெருமானை வேண்ட முதியவர் மறைந்து அங்கே சிவபெருமான் நிற்கக் கண்டான். சதுரங்க ஆட்டத்தில் ராஜராஜேஸ்வரியை வென்று அவளுக்கு மாலையிட்டவர் புஷ்பவனநாதரே ஆவார்.
ஐந்து நிலை ராஜகோபுரமும் உயரமான மதிற்சுவரும் கருங்கல் மண்டபங்களும் பெரிய உள்-வெளிப் பிரகாரங்களும் கலைச்சிறப்புடைய விமானங்களும் இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும். வெளிப் பிரகாரத்தின் மத்தியில் உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கிய சந்நிதிகளில் இத்தலத்தின் இரண்டு தேவியர் கற்பகவல்லியும் ராஜராஜேஸ்வரியும் தனித்தனியாக கோயில் கொண்டுள்ளனர். உட்பிரகாரத்தில் மூலவர் சந்நிதி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் தெற்குப் பகுதியில் சாமுண்டீஸ்வரி சந்நிதி அமைந்துள்ளது.
இந்தத்தலத்தில் கோயில் கொண்டுள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். எவ்வித விஷ நோயால் பாதிக்கப்பட்டவர்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து இக்கோயில் தீர்த்தத்தில் நீராடி சாமுண்டீஸ்வரி அம்மன் சந்நிதியில் வேர்கட்டிக்கொண்டு விஷக்கடி நோய்களிலிருந்து விடுபடுகின்றனர். கருவறை கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோரின் சந்நிதிகள் அமையப் பெற்றுள்ளன. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.
இத்தலம், மன்னார்குடி - நீடாமங்கலம் சாலையில் மன்னார்குடியில் வடக்கே சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் அனைத்து சந்நிதிகள் விமானங்கள் பரிவார ஆலயங்கள் ஆகிய அனைத்தும் பழுது நீக்கப்பட்டு, திருப்பணி வேலைகள் நிதிக்குழு ஆணைய நிதி மூலம் நடந்து வருகின்றன. எதிர்வரும் 8.6.2017 ஆம் தேதி அனைத்து விமானங்கள், சந்நிதிகள் மூர்த்திகள் ஆகியவற்றுக்கு குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இப்புனித கைங்கரியத்தில் ஈடுபட்டு இறைவன் அருள்பெறலாம்.
தொடர்புக்கு: 98948 49381.
நன்றி :- ஆர்.அனுராதா
தொகுப்பு : சீதா பாரதிராஜா
No comments:
Post a Comment