அத்தி மரம்
கார்த்திகை - முருகக்கடவுளுக்கு உகந்த நட்சத்திரம். சரவணப் பொய்கையில் தனக்குப் பாலமுதூட்டி வளர்த்த கார்த்திகைப் பெண்களைச் சிறப்பிக்கும் விதமாக, கந்தக் கடவுள் இந்த நட்சத்திரத்தை தனக்குரியதாக்கிக் கொண்டதாக விவரிக்கின்றன புராணங்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் பெரும்பாலானோர், பேச்சுத்திறன் மிகுந்தவர்கள். குறைவாகத் தூங்கும் இயல்புடை யவர். இவர்களது அறிவாற்றலும் சாமர்த்தியமும் மற்றவர்களை வியக்கவைக்கும். நல்ல பதவிகளும் அந்தஸ்தும் இவர்களைத் தேடி வரும். இவர்களில் சிலர், அரசியல்வாதிகளாகத் திகழ்வர்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வெள்ளிக்கிழமை மற்றும் ஏப்ரல் 21 முதல் மே 20-வரையிலான நாட்கள், அதிகம் நன்மை தருபவையாக அமையும். இந்த நாட்களில், கார்த்திகை நட்சத்திரத்தின் நல்ல மின்காந்தக் கதிர்வீச்சுகள் பூமியில் படரும். இந்த நட்சத்திரத்துக்கு உகந்த மரம்- அத்தி. இதன் உடலில் நிரம்பியுள்ள பால், கார்மேகங்களைத் தன் வசம் ஈர்க்கும் சக்தி கொண்டது. இதன் குச்சிகளை எரித்தால் வெளிவரும் புகைக்கு, கார்மேகங்களைக் கவரும் ஆற்றல் உண்டு என்கிறது வானவியல் மூலிகை சாஸ்திரம்.
சென்னை திருவொற்றியூர்- அருள்மிகு வடிவுடையம்மன் உடனுறை அருள்மிகு தியாகராஜஸ்வாமி ஆலயத்தின் (ஸ்ரீஆதிபுரீஸ்வரர் திருக்கோயில்) ஸ்தல விருட்சமும் அத்தி மரமே!
திருவொற்றியூர்- சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் ஆகிய மூவரும் பாடிப்போற்றிய தலம்; பட்டினத்தடிகள் முக்திபெற்றதும் இங்குதான். இந்தக் கோயிலில் ஸ்ரீவடிவுடையம்மனுக்கு முக்கியத்துவம் அதிகம். வள்ளலார், கவிச் சக்ரவர்த்தி கம்பர் ஆகியோர் இங்கு தங்கி, ஸ்ரீவடிவுடையாளை அனுதினமும் வழிபட்டதற்கான சான்றுகள் உள்ளன.
கோயிலுள் நுழைந்தால் சூரியன், அடுத்து சைவ சமயக் குரவர் நால்வர், பிறகு ஜெகந்நாதர், அமிர்த கடேஸ்வரர், சகஸ்ரலிங்கம், தொடர்ந்து 27 நட்சத்திர லிங்கங்கள், பஞ்சபூத லிங்கம், ஸ்தல விருட்சம், மற்றும் திருவொற்றீஸ்வரர், ஸ்ரீபைரவர், ஸ்ரீகுழந்தீஸ்வரர் (கொழுந்து தீ ஈஸ்வரர்), ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீதியாகராஜர், அறுபத்துமூவர் ஆகியோரையும், அடுத்ததாக விநாயகர், ஸ்ரீதுர்கை, ஏகாதச ருத்திரர், முருகன், வட்டப்பாறை அம்மன், சண்டிகேஸ்வரர், வடிவுடை அம்மன் என இறை மூர்த்தங்களும் அடியார்களும் விரவிக் காட்சி தருகிறார்கள்!
வைகுண்டத்தில், பெருமாளின் நாபிக் கமலத்தில் உதித்த பிரம்மன், உலகைப் படைக்கத் தொடங்கினார். ஆனால், அதற்கும் முன்னதாக பூமியில் ஒரு நகர் இருப்பதை அவர் கண்டார்.
''நான் பூவுலகைப் படைக்குமுன் அங்கு ஒரு நகர் காட்சி அளிக்கிறதே, அதைப் படைத்தது யார்?'' என்று பரந்தாமனிடம் கேட்டார்.
''அதுதான் ஆதிபுரி எனப்படும் திருவொற்றியூர். அதைப் படைத்தவர் ஆதிபகவானான சிவன். அவருக்கு ஆதிபுரீஸ்வரர் என்றும் ஒரு பெயர் உண்டு. அவரைப் பிரார்த்தித்து, மீதி உலகைப் படைப்பாயாக!'' என்று பெருமாள் எடுத்துரைத்தார்.
அதன்படி சிவனாரை வழிபட ஆதிபுரியான திருவொற்றியூருக்கு வந்தார் பிரம்மன். யாகம் வளர்த்துக் கடும் தவம் புரிந்து சிவனை வழிபட்டார். ஏழை- பணக்காரன் என்ற பாகுபாடின்றி, கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் சிவபெருமான், யாகத்திலிருந்து தீப்பிழம்பாகத் (கொழுந்து தீயாக) தோன்றினார். பிரம்மாவுக்கு அருள் பாலித்தார். பிரம்மன் உலகைப் படைக்க ஏதுவாக, ஆழி சூழ்ந்த கடல் நீரை 'ஒத்தி’ இருக்கும்படி, அதாவது தள்ளி இருக்கும்படி ஆணையிட்டார் சிவன். இதனால் இந்தப் பகுதி திருஒத்தியூர் என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் திருவொற்றியூர் ஆனதாகக் குறிப்பொன்று தெரிவிக்கிறது.
ஸ்ரீராமனின் மகன் லவன் இங்கு வந்து, பிரதோஷ காலத்தில் ராஜசூய யாகம் நடத்தி, வரங்கள் பல பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. மேலும், அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களும் இங்கு வந்து, இறைவனை வழிபட்டு, ஒவ்வொன்றும் ஒரு சிவலிங்கமாக மாறி முக்தி பெற்று, பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றனர்.
ஸ்ரீஆதிசங்கரர் இங்கு வந்து ஸ்ரீசக்ரம் நிறுவினார். ஸ்ரீவட்டப் பாறை அம்மன் கோயிலில் அப்போது நடந்து வந்த எருமைப்
பலியை நிறுத்தினார். நம்பூதிரி எனும் கேரள அர்ச்சகர்களுக்கு, அருள்மிகு வடிவுடை அம்மன் கோயில் பூஜை முறைகளை ஏற்படுத்தித் தந்தார். இந்த ஆலயத்தில், பிரதோஷ வழிபாடும் தரிசனமும் வெகு விசேஷமான ஒன்று என்கிறார்கள்.
இந்த ஆலயத்தின் ஸ்தல விருட்சம் அத்தி என்பது கூடுதல் சிறப்பம்சம்.
அத்தி மரம், அனைத்து மதத்தினருக்கும் தெய்வீக மரமாக அமைந்துள்ளது. இறைத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்), அத்திப் பழத்தைச் சொர்க்கத்தின் பழம் என்றும், இது மூல நோய், மூட்டு வலி ஆகியவற்றுக்கு நல்ல மருந்து என்றும் அறிவித்திருக்கிறார். பைபிளிலும் இஸ்லாமிய நூல்களிலும்... ஆதிமனிதன் ஹஸரத் ஆதம், ஹஸரத் ஹவ்வா (ஏவாள்) ஆகியோர், சொர்க்கத்தில் அத்திப் பழத்தைப் பறித்துச் சாப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தில் அத்தி மரத்தைக் கடவுளுடன் சேர்த்து பூஜை செய்யப்படுவதை இன்றும் காணலாம்.
தத்தாத்ரேய மகரிஷி அத்தி மரத்தில் அமர்ந்திருப்பதாக குரு சரித்திரம் கூறுகிறது. 'அசுர குரு சுக்கிராச்சார்யரின் மறுபிறவியே அத்தி மரம்’ என்கிறது சாதுர் மாஸ்ய மஹாத்மியம். நரசிம்ம அவதாரம் எடுத்த மஹாவிஷ்ணு ஹிரண்யகசிபுவை அழித்தபிறகு, அத்தி மரப் பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக்கொண்டதாக புராணத்தில் ஒரு குறிப்பு உண்டு.
அத்தி மர இலைகளை உலர வைத்துப் பவுடராக்கி, தேனில் கலந்து சாப்பிட, பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணமாகும். உடலின் எந்தத் துவாரத்திலிருந்து ரத்தம் வெளியேறினாலும், இது கட்டுப்படுத்தும். வாய்ப் புண், ஈறுகளில் சீழ் பிடித்தல் போன்ற நோய்களைக் குணப்படுத்த, அத்தி இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து, வாய் கொப்பளிக்கலாம்.
மரத்தின் பட்டையை இடித்து, பசு மோரில் ஊறவைத்து அதைக் குடித்தால், பெண்களில் சிலருக்கு அடிக்கடி உண்டாகும் பெரும்பாடு, மாதவிடாய் ஆகியன கட்டுப்படும். அத்திப்பழம், அத்திப்பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிடலாம்.
மூலம், ரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, சீதபேதி, வெள்ளைப்பாடு, வாத நோய்கள், மூட்டு வலி, சர்க்கரை நோய், தொண்டைப் புண், வாய்ப் புண் ஆகியவற்றுக்கு இது நல்ல மருந்தாகும். பழங்களை இடித்து அதன் சாற்றைப் பருகுவதால் சிறுநீரக நோய்கள் குணம் அடையும். அத்திப்பழம், உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்துவதுடன், தேகத்துக்குச் சுறுசுறுப்பைத் தந்து, கடும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றி, ஈரல், நுரையீரலில் ஏற்படும் தடைகளையும் நீக்குகிறது. அத்திப்பழம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் நீங்கும். தலைமுடி நீளமாக வளரும். கை- கால் மூட்டுகளில் வலி வராமல் தடுக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
சங்க இலக்கியத்தில் 'அதவம்’ என்று குறிப்பிடப் படும் அத்திமரம் பூத்து, அதன் பின் காய்க்கும். 'அத்தி பூத்தாற் போல’ எனும் பழமொழி 'அத்தி அரிதாகப் பூக்கும்’ என்று தெரிவிக்கிறது. எனினும், பிற்கால இலக்கியங்கள் சிலவற்றில், 'பூவாதே காய்க்கும் மரங்களும் உளவே’ என்பதற்கு எடுத்துக் காட்டு அத்தி, ஆல் என்பர்.
'அதவத் தீங்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பழற் தூங்க’
துய்த்தலை மந்தி வன்பழற் தூங்க’
- என்கிறது நற்றிணை.
அத்தி மரம் ஆற்றங்கரையில் வளரும். இதன் கிளைகள் வெண்ணிறமானவை. இதன் கனி மிக மென்மையானது என்பதை, 'நண்டு மிதிக்க இதன் கனி குழையும்’ என்ற குறுந்தொகையின் வரிகள் உணர்த்துகின்றன.
- விருட்சம் வளரும்
திருப்பெயரை உச்சரித்தால்... எம பயம் இல்லை!
''மூலவர், லிங்க வடிவில் சுயம்புவாக இருக்கிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. திருவொற்றீஸ்வரருக்கு 4 கால பூஜை, அபிஷேகம், ஆராதனை உண்டு. வடிவுடை அம்மனுக்கு 3 கால பூஜை. பரிவார சந்நிதிகளுக்கு தினமும் 2 கால பூஜைகள்.
சப்த மாதர்கள் நடுவில், காளி உருவில் இருக்கிறாள் சாமுண்டீஸ்வரி. ஸ்ரீவட்டப்பாறை அம்மன் என்று போற்றப்படுகிறாள். மாசி மகம் 10 நாள் திருவிழாவை சிறப்பாக நடத்துகிறோம். ஆரம்பகாலத்தில் அத்திவனமாக இருந்ததால், அவுதம்ப க்ஷேத்திரம் என்ற பெயரும் இந்தத் தலத்துக்கு உண்டு''
''திருவொற்றியூர் என்று சொன்னாலே போதும்; எம பயம் இல்லை. இந்த முக்தித் தலத்தில், எள்ளும் தண்ணீரும் இறைத்து முன்னோரை வழிபட, சிவகதி கிடைக்கும். ஸ்ரீதியாகராஜரைத் தரிசிப்பவருக்கு மறுபிறவி இல்லை. சிவப் பரம்பொருள் அமர்ந்த நிலையில் இங்கு நடனம் ஆடுவது விசேஷம்!'' .
|
No comments:
Post a Comment