Wednesday, 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 28

ஸ்ரீராமபிரானின் திருநட்சத்திரம் புனர்பூசம். புதன் கிரகம், மிதுன ராசி ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது இது! புதன்கிழமை மற்றும் மே 21 முதல் ஜூன் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்களுக்கான கிரகம்- புதன்; இந்த நட்சத்திரத்துக்கு உரிய விருட்சம்- மூங்கில்!  
மேற்குறிப்பிட்ட நாட்களில், புனர்பூச நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகள், பூமிக்கு வரும். அதை மூங்கில் தனக்குள் வாங்கிக்கொண்டு பலனைத் தரும். அதேபோல், கெட்ட கதிர்வீச்சுகளால் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளையும் தீர்க்கும்.
வீண் செலவைத் தவிர்ப்பவர்கள்; உழைப்பால் சாதிப்பவர்கள்; கருணை குணம் கொண்டவர்கள், புனர்பூசக்காரர்கள். இவர்களில் ஒருசிலர் மூட்டு வலி, தோல் நோய், வாயுத் தொல்லை, தேக பலவீனம், காய்ச்சல், வலியுடன்கூடிய மாதவிலக்கு ஆகியவற்றால் அவதிப்படுவார்கள். இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், புனர்பூச நட்சத்திர தோஷம் விலகவும், இந்த நட்சத்திரக்காரர்கள் தினமும் அரை மணி நேரம் மூங்கில் மரத்துக்கு அருகில் இருப்பது சிறப்பு. இதனால், தேக வலிமை மற்றும் மன அமைதி கிட்டும்.
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள திருவேட்களம் திருத்தலத்தில், ஸ்ரீசற்குணாம்பாள் சமேத ஸ்ரீபாசுபதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தத் தலத்தின் விருட்சம்- மூங்கில் மரம். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம் இது. அருணகிரிநாதரும் இங்கேயுள்ள முருகப்பெருமானை உள்ளமுருகிப் பாடியுள்ளார். ஒருகாலத்தில் மூங்கில் மரங்கள் சூழ இருந்ததால், ஸ்ரீவேணுபுரம் என்றும் இந்தத் தலத்துக்குப் பெயர் அமைந்ததாம். வேடர்கள் அதிகம் வசித்ததால், திருவேட்களம் எனப் பெயர் பெற்றதாகவும் சொல்வர்.  
வனவாசத்தின்போது, இந்தத் தலத்தைச் சொல்லி, 'புனிதமான இந்த இடத்தில் இங்கேயே தவம் செய்க!’ என அர்ஜுனனுக்கு அருளினார் ஸ்ரீகிருஷ்ணர். அதன்படி மூங்கில் வனத்தில், மூங்கில் மரத்தடியில், கடும் தவம் புரிந்தான் அர்ஜுனன். அவனுடைய தவத்தைக் கலைக்கும்படி, முகாசுரன் என்பவனை ஏவிவிட்டான் துரியோதனன். பன்றியின் உருவில் வந்த முகாசுரன், அர்ஜுனனின் தவத்தைக் கலைக்க முயன்றான். இதில் கோபமுற்ற அர்ஜுனன், பன்றியின்மீது அம்பெய்தினான். அதேநேரம், அர்ஜுனனின் தவத்தில் மகிழ்ந்த சிவனார், வேடனைப்போல் உருவெடுத்து வந்தார்; அந்தப் பன்றி மீது தானும் அம்பெய்தினார். இரண்டு அம்புகளும் ஒரே நேரத்தில் பன்றியின் மீது பாய்ந்தன. அந்தப் பன்றி சுருண்டு விழுந்து, செத்தது. இப்போது பன்றியைக் கொன்றது யார் என இரண்டு பேருக்கும் தகராறு! இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர். இதில், தன்னிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் பறிகொடுத்தான் அர்ஜுனன். பிறகு, அக்னி பகவானிடம் பிரார்த்தித்துப் பெற்ற காண்டீபம் எனும் சக்தி வாய்ந்த வில்லால் சிவனாரின் தலையில் அடித்தான். அதனால் ஏற்பட்ட காயத்தை, இந்தத் தலத்தின் சிவலிங்கத் திருமேனியில் இன்றைக்கும் காணலாம்!  
இதையடுத்து, ஆயுதமின்றி வெறும் கையால் சிவனாரிடம் மோதினான். இறுதியில், ஈசன் தனது உருவைக் காட்டி அருளினார். அதில் நெகிழ்ந்து நமஸ்கரித்தான் அர்ஜுனன். அவனுக்குப் பாசுபதம் எனும் சக்தி வாய்ந்த, அரிதான அஸ்திரத்தைப் பரிசாக அளித்தார் சிவனார். அவருடனான சண்டையில் உடைந்த காண்டீபம் மற்றும் அம்புகள் அனைத்தையும் திரும்பவும் பெற்றுக்கொண்டான் அர்ஜுனன். இங்கே, வேடனாக (கிராத மூர்த்தி என்பர்) அருள்பாலிக்கிறார் சிவனார்.  
16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கல்வெட்டுகளை ஆலயத்தில் காணலாம். கிழக்குப் பார்த்த கோபுரம்; முன்னே நாகலிங்க மரமும் தீர்த்தக் குளமும் உள்ளது. ஸ்ரீஸித்தி விநாயகர், ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீசுந்தரேஸ்வரர், ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீமகாலட்சுமி, சமயக்குரவர் நால்வர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.  
முன்மண்டபத்தில் சிவ-பார்வதி, வேடன் மற்றும் வேடுவச்சியாக, வேட்டை நாய் களுடன் காட்சி தரும் சிற்பம் வெகு அழகு! சிவனாரும் அர்ஜுனனும் சண்டையிடும் சிற்பக் காட்சியும் நுட்பங்கள் கொண்டது. இங்கே, சந்திர- சூரியர்களை வழிபட்டால், கிரகண தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகுமாம்.  
1909-ஆம் வருடம், கானாடுகாத்தானைச் சேர்ந்த கா.பெ.அ.பெத்தபெருமாள் செட்டியார், கோயிலைப் புதுப்பித்துக் கட்டினார். அவரது பரம் பரையினர், தற்போதும் கோயிலைப் பராமரித்து வருகின்றனர்.
மூங்கில் மரத்தைப் பிளந்தால், அதன் வயிற்றுக்குள் வெள்ளை நிறக் கட்டிகள் கிடைக்கும். இதையே மூங்கிலுப்பு என்பர். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் இதனைப் பயன்படுத்தினால், மலச் சிக்கல் அறவே தீருமாம். காயங்களை ஆற்றும்; உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்; இதயப் படபடப்பு, தலைச்சுற்றல் ஆகியவற்றுக்குச் சரியான நிவாரணி; வாந்தி மற்றும் பித்த வியாதிகளைத் தீர்க்கவல்லது என்கின்றன மருத்துவ நூல்கள். ரத்த மூலம், ஆஸ்துமா, பக்கவாதம், கண் நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும் வல்லமை உண்டு. கழை, வெதிர், வெதிரம், உந்தூழ் என சங்க இலக்கியங்கள் மூங்கிலைக் குறிப்பிடுகின்றன. குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம், குறுந்தொகை, அகநானூறு, பெரும்பாணாற்றுப்படை ஆகிய நூல்களிலும் மூங்கில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பாசூர், திருநெல்வேலி, திருவெண்ணெய் நல்லூர் ஆகிய தலங்களிலும் மூங்கில்தான் ஸ்தல விருட்சம்!  
- விருட்சம் வளரும்
'மனோ பலம் கூடும்!’
''ஸ்ரீசற்குணாம்பாளின் சந்நிதிக்கு எதிரில், நந்தி இருப்பது விசேஷம். ஒரு கையில் தாமரை, இன்னொரு கையில் நீலோத்பலம் (செங்கழுநீர் மலர்) கொண்டு காட்சி தரும் அம்பிகையை, ஸ்ரீமனோன்மணி என்றும் அழைப்பார்கள். அம்பாளுக்குச் சந்தனக்காப்பு சார்த்தி வணங்கினால், நினைத்தது யாவும் நடந்தேறும்'' என்கிறார் கோயிலின் செந்தில் குருக்கள்.  
இங்கு, ஸ்ரீதட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு முன் அமர்ந்து, காயத்ரி ஜபம் செய்தால், மாணவர்கள் கல்வி- கேள்வியில் சிறந்து விளங்குவார்கள்; தல விருட்சமான மூங்கில் மரத்தின் கீழே யுள்ள மண்ணை எடுத்து, வாய் பேச இயலாதவர்களின் நாக்கில் தடவினால், பேசும் ஆற்றலைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை!
''சோமவாரத்தன்று (திங்கட் கிழமை) 108 முறை வலம் வந்து, பிரார்த்தித்தால் மனோபலம் கூடும்; திறமை வெளிப்படும் என்பது ஐதீகம்!'' 

No comments:

Post a Comment