தேவருலகில் தேவேந்திரன் நோயுற்றபொழுது அங்கிருந்த அஸ்வினி தேவர்கள் நோய் தீர்க்கும் மருந்தின் மூலிகை தேடி அலைந்தனர். நாரதரிடமும் இதுபற்றி முறையிட்டனர். "சிவபெருமானை நினைந்து தவம் புரிந்தால் மருந்து கிடைக்கும்' என்றார் நாரதர். தேவர்களின் தவத்திற்கு இணங்கி காட்சி கொடுத்த இறைவன், ஒளஷதகிரியில் உள்ள பலை, அதிபலை மூலிகையை கொடுத்தால் நோய் அகலும் என்றார். ஆனால் மூலிகை கிடைக்கவில்லை. இறைவன் அம்பாளையும் நினைத்து தவமிருக்கும் படியும் கூறியருளினார். அதன்படி அம்பாள், மறைந்திருந்த மூலிகையை ஒளியேற்றிக் காட்டி அருளினாள். தேவர்கள் மூலிகையை தேவேந்திரனிடம் கொடுக்க நோய் நீங்கப்பெற்றான். ஒளஷதகிரி மலையில் மண் எடுத்து நெற்றியில் பூசினால் அதுவே மருந்தாகும் எனக்கூறி சிவபெருமான் இங்கேயே கோயில் கொண்டதாகப் புராண வரலாறு உண்டு.
மண்ணை மருந்தாய் அருளும் இந்த ஒளஷதகிரீஸ்வரர் என்கிற மருந்தீஸ்வரர் ஆலயம் காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கச்சூரிலுள்ள சிறுகுன்றான ஒளஷதகிரியில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் ஒளஷதகிரீஸ்வரர் அல்லது மருந்தீஸ்வரர் என்று பெயர் பெற்றார். மூலிகைகள் இருந்த இடத்தில் இருளை அகற்றியதால் இத்தல அம்பிகை இருள்நீக்கி அம்பாள் (அந்தகார நிவாரணி) என அழைக்கப்படலானாள்.
சிவலிங்க வடிவில் காட்சியருளும் சிவபெருமானும் அபயவரதத்துடன் நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் அம்பாளும் மேற்கு நோக்கி அமைந்து அருள்கின்றனர். கருவறை திருச்சுற்றில் கணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை அமைந்துள்ளனர். வெளிப்பிரகாரத்தில் துவார கணபதி, சுப்பிரமணியர், பைரவர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் சந்நிதிகள் உள்ளன. நான்கு முகங்கள் கொண்டு சதுர்முக சண்டிகேஸ்வரர் காட்சி தருவது சிறப்பு. கோயிலின் தல விருட்சம் வேர்ப்பலாவாகும்.
நோய்வாய்ப் பட்டவர்கள் அவற்றிலிருந்து குணமடைய நம்பிக்கையோடு பௌர்ணமி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் கிரிவலம் வருவது இங்கு நடைமுறையில் உள்ளது. கொடி மரத்தின் அடியில் உள்ள மண்ணை எடுத்து உடல் நலம் குன்றிய இடத்தில் பூசினால் நலம் பெறலாம் என்கின்றனர்.
இத்தலத்து அம்பாளையும் ஈசனையும் வழிபட, திருமணத்தடை நீங்கும். குழந்தைப்பேறு கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது. 48 நாள்கள் பச்சைக் கற்பூரத்தால் அபிஷேகம் செய்து தீர்த்தத்தை சாப்பிட்டு வந்தால் இதய நோய், சரும நோய் தீரும். மேலும் அம்பாளை வழிபடுவதனால் கண் சம்பந்தமான நோய்கள் தீரும். இத்தல சதுர்முக சண்டிகேஸ்வரருக்கு ஏழு வாரங்கள் திங்கள்கிழமைதோறும் தேனாபிஷேகம் செய்து வந்தால் வயிற்றுவலி முதல் எல்லா நோய்களும் தீரும் என்கின்றனர் பக்தர்கள்.
சென்னை- செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் 43 கி.மீ. தொலைவில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் 3 கி.மீ. தூரத்தில் திருக்கச்சூர் உள்ளது. அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.
தொடர்புக்கு: 94453 56399/ 94441 03372.
நன்றி :- முனைவர் எஸ். ஸ்ரீகுமார்
தொகுப்பு : சீதா பாரதிராஜா
No comments:
Post a Comment