இந்த உலகிலேயே, மிகப் பெரிய அவமானம் எது தெரியுமா? கத்தியால் குத்தினாலோ, வாளால் அறுத்தாலோ வருவதைவிட நூறு மடங்கு வலியும் வேதனையும் தருவது எது என்று அறிவீர்களா? ஒருவரின் மொத்த கம்பீரத்தையும் தொலைத்து, கூனிக் குறுகச் செய்வது எது தெரியுமா? புறக்கணிப்புதான்! புறக்கணிப்பைப் போன்று கொடிதானது எதுவுமில்லை.
கடும் சொற்களால் காயப்படுத்த வேண்டும் என்றில்லை; ஒற்றை வார்த்தை கூடப் பேசாமல் ஒதுங்கி இருந்து விட்டாலே, அந்தப் புறக்கணிப்பைத் தாங்க முடியாமல், மனம் கதறும்; ரத்தம் கசிகிற வேதனையில் துடிதுடிக்கும்.
சேரமான் நாயனார் சிந்தித்தபடியே கயிலாயத்தின் வாசலில் நின்றிருந்தார். அவரது நாடி- நரம்பெல்லாம் தளர்ந்து விட்டிருந்தது. முகத்தில் இருள் படர, கம்பீரம் மொத்தத்தையும் இழந்து, சுந்தரர் வருகிற திசை நோக்கிக் காத்திருந்தார்.
'சதாசர்வ காலமும் சிவனாரையே தொழுதிருந்தாலும், ஏதோ தவறு செய் திருக்கிறேன் போலும்’ என யோசித்து யோசித்துப் பார்த்தார். 'சிவத்தைக் காதலியாக வரித்து, பூரித்துப் பாட்டு எழுதியது தவறோ..! தெய்வத்தை தெய்வமாகவே கருதாமல், பெண்ணாக, காதலியாக நினைத்தது பிசகோ...? சிவம் என்பது ஆண் அல்லவே..! ஆண்- பெண் பேதம் என்பதெல்லாம் சரீரத்துக்கு தானே? இறைச் சக்தியில் ஆணுமில்லை; பெண்ணுமில்லையே?! ஒருவேளை... 'என் கணவரை, நீ காதலியாகப் பார்த்தது தவறு’ என்று பார்வதிதேவியாள் நினைத்துவிட்டாளா?! அவளது கோபம்தான், இப்படி என்னைக் கூனிக்குறுக நிற்க வைத்துவிட்டதா?!’ - பலவாறாகச் சிந்தித்தார் சேரமான் நாயனார். அப்படிச் சிந்திக்கச் சிந்திக்க, இன்னும் இன்னும் குழப்பம்தான் மேலெழுந்தது. 'சுந்தரா... என் இனிய நண்பனே... சீக்கிரம் வா! உன் தோளில் சாய்ந்து அழுதால்தான், என் மனக் காயங்கள் யாவையும் ஆறும்; பாரங்கள் குறையும்’ எனக் கண்கள் மூடி, மனதுக்குள் சுந்தரரை நினைத்துக்கொண்டார்.
கண் திறந்து பார்த்தபோது, எதிரே சிறு புள்ளியென, வெள்ளை வெளேரென்று அந்த ஐராவதம், தன் மொத்த உடலைத் தூக்கிக் கொண்டும், சுந்தரரை அமர்த்திக்கொண்டும் பறந்தவாறு, வேகவேகமாக நெருங்கிக்கொண்டிருந்தது.
சுந்தரரைப் பார்த்ததும், ஓடிவந்து அவரின் தோளில் சாய்ந்துகொண்டார் சேரமான். மொத்த விவரத்தையும் சொல்லி முடிப்பதற்குள், அவரின் கண்களில் நீர் திரையிட்டது!
அனைத்தையும் கேட்ட சுந்தரர், சட்டென்று சேரமானின் கையைப் பிடித்துக்கொண்டு, விறுவிறுவென திருக் கயிலாய வாசலுக்கு வந்தார். சுந்தரரைப் பார்த்ததும் சிவகணங்கள் மகிழ்ந்து வரவேற்றனர். தோளில் பூமாலைகள் அணிவிக்கப்பட்டன; மார்பில், சந்தனங் கள் பூசப்பட்டன. உடலில் பன்னீர் தெளிக்கப்பட்டது. சுந்தரருடன் வந்த சேரமானுக்கும் மாலை, மரியாதைகள் செய்தனர்; சந்தனம் தடவினர்; பன்னீர் தெளித்தனர்.
உலகின் விசித்திரம் இதுதான்! மிகப் பெரிய அவமானம் நடந்தேறிய துக்கத்தில் இருந்து விடுபடுவதற்குள்ளேயே, அந்த அவமானத்தால் ஏற்பட்ட காயம் ஆறுவதற் குள்ளேயே, சட்டென்று ஒரு சந்தோஷம்; மிகச் சிறப்பானதொரு மரியாதை. பூரித்துப் போனார் சேரமான். வாஞ்சையுடன் சுந்தரரைப் பார்த்தார். தனது கையைக் கோத்து இறுக்கிக்கொண்டிருந்த சுந்தரரின் கையை மெள்ளத் தடவிக் கொடுத்தார். அதில் நன்றி தெரிந்தது; மனம் கொள்ளாத நிறைவு தெரிந்தது; எல்லையற்ற தோழமை வெளிப்பட்டது!
உள்ளே... தேவியுடன் நின்று வரவேற்றது பரம்பொருள். சிவ- சக்தியைக் கண்டதும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார் சேரமான். சுந்தரரும் நமஸ்கரித்தார்.
'என் தோழனே... இனிய சுந்தரா! என்ன வேண்டும் உனக்கு!’ என்று கேட்டார் சிவனார்.
''இதோ நிற்கிறானே சேரமான்... உங்களின் பக்தன் இவன். சொல்லப்போனால், என்னை விட அதிக அளவு, உங்கள் மீது பக்தி கொண்டிருப்பவன் இவன். 'திருக்கயிலாய ஞான உலா’ எனும் தலைப்பில், மிக அருமையான பாடல்களைப் படைத்திருக்கிறான். இதனை, இங்கே... திருக்கயிலாயத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்றுதான் இவனை அழைத்து வந்தேன்'' என்றார் சுந்தரர்.
இதைக்கேட்ட சிவபெருமான், ''நல்லது. திருக்கயிலாயத்தை அனைவரும் அறிவார்கள். ஆனால், திருக்கயிலாயத்துக்கு இணையான தலம் ஒன்றிருப்பதைப் பலரும் அறியவில்லை. சுந்தரா! அந்தத் தலத்தில், 'திருக்கயிலாய ஞான உலா’வை அரங்கேற்றினால், என்ன? திருக்கயிலாயத்துக்கு இணையான தலத்தில், சிவ- சக்தியாகிய எங்களின் பூரண சக்தியானது, அனவரதமும் குடிகொண்டு, அருள்பாலித்து வருகிறது. அதனால்தான், அரங்கேற்றத்தை அங்கே வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறேன் சுந்தரா... கோபம் கொள்ளாதே!’ என்று தோழனிடம் வாஞ்சையாகச் சொன்னார். பின்னர், பார்வதியின் பக்கம் திரும்பி, ''என்ன... சரிதானே தேவி?'' என்று கேட்க... ''ஆமாம், ஆமாம்... சுந்தரரின் இஷ்டத்தையும் கேட்டுச் செயல்படுங்கள். ஏனெனில், மூக்குக்கு மேலே கோபம் வந்துவிடும், அவருக்கு! அது சரி... உங்களின் ஸ்நேகிதர் உங்களைப் போலத்தானே இருப்பார்!'' என்று சொல்லிப் புன்னகைத் தாள் தேவி. தேவர்கள் உட்பட, அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். அந்தச் சிரிப்பில், அந்த இடமே மகிழ்ச்சியில் திளைத்தது.
''சரி... உங்களின் திருவுளப்படியே, பூலோகத் தில் திருக்கயிலாயத்துக்கு இணையான திருத்தலத்தில் அரங்கேற்றுவோம்'' என்று சொல்லிவிட்டு, சேரமானைப் பார்த்தார் சுந்தரர். சேரமான் மெள்ளத் தலையசைத்தவாறு, ''ஆமாம்... அந்தத் திருத்தலம் எங்கே இருக்கிறது? தலத்தின் பெயர் என்ன?'' என்று கேட்டார்.
விவரங்கள் சொல்லிவிட்டு, ''தலத்தின் பெயர்... திருப்பிடவூர்'' என்றார் சிவனார். ''திருப்பிடவூர்... திருப்பிடவூர்... திருப்பிடவூர்'' என்று மூன்று முறை வாய்விட்டு உச்சரித்த சுந்தரர், ''இப்போதே அங்கே செல்கிறோம். இந்த ஓலை நறுக்குகளை உங்களின் திருவடிகளில் வைக்கிறோம். அருளுங்கள் ஸ்வாமி!'' என்றபடி, சேரமானிடம் இருந்து ஓலை நறுக்குகளை வாங்கி, சிவனாருக்கு அருகே வந்தார். சேரமானும் உடன் வந்தார். ஓலை நறுக்குகளை இரண்டு பேருமாக சிவனாரின் திருப்பாதத்தில் சமர்ப்பித்தனர்.
''உங்களுக்குப் பக்கத்துணையாக, அரங்கேற் றத்துக்கான தலைமைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு இவரை அனுப்புகிறேன். உங்களுக்குக் கூடுதல் பலமாக அவர் இருப்பார்'' என்று சொல்லி, அந்தச் சபையில் இருந்த ஒரு முக்கியப் புள்ளியை அருகில் அழைத் தார் சிவனார். ஓலை நறுக்குகளை எடுத்து அவரிடம் கொடுத்தார். மூவரையும் கைதூக்கி ஆசீர்வதித்தார்.
சுந்தரரும் சேரமானும் சிவப் பரம்பொருளை நமஸ்கரித்துவிட்டுக் கிளம்பினர். அவர்களுடன், ஓலை நறுக்குகளை நெஞ்சில் அணைத்தவாறு அந்த முக்கியப் புள்ளியும் வந்தார்.
அவர்... மாசாத்தனார்; அதாவது சாஸ்தா!
இவர்கள் கிளம்பிய அந்தக் கணமே, சிவகணங் கள் திருப்பிடவூர் எனச் சொல்லப்படும் திருப்பட்டூரில் முகாமிட்டனர். எட்டுத் திசையி லும் பிரிந்து சென்று, எந்தத் தீய சக்தியையும் உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்; காவல் காத்தனர்.
திருப்பட்டூர் இன்னும் இன்னும் பொலி வானது; செழிப்பானது!
- பரவசம் தொடரும்
No comments:
Post a Comment