Wednesday 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள் ! - 15

                                                              மாமரம்
சிலர், ஏதேனும் நோய்வாய்ப்பட்டு, எப்போதும் மருந்து மாத்திரையுமாக, ஆஸ்பத்திரியும் ஊசியுமாக இருப்பார்கள். அவர்கள் பிறந்த நேரத்தில் ஆட்சி புரிந்த கிரகம், ராசி மற்றும் நட்சத்திர தோஷங்களும், கெட்ட கதிர் வீச்சுகளுமே இதற்குக் காரணம் என்கிறது வானவியல் மூலிகை சாஸ்திரம்!
கன்னி ராசியிலும், புதனின் ஆட்சியிலும், ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் செப்டம்பர் 22-ஆம் தேதி வரையிலும் பிறந்தவர்கள், பொதுவாக நோயாளிகளாகவும் இரட்டை மனநிலை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்தக் கிரகம், பஞ்ச பூதங்களில் மண்ணுடன் தொடர்பு கொண்டது. இவற்றின் கெட்ட கதிர்வீச்சுகள் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும். இந்தக் கிரக தோஷத்தை நீக்குவதற்கு மாமரம் உதவுகிறது. கன்னி ராசி மற்றும் நட்சத்திர மண்டலத்தின் நல்ல கதிர்வீச்சுகளைத் தன்னுள் நிரப்பிக்கொள்ளும் தன்மை மாமரத்துக்கு உண்டு!
மாமரத்தின் நிழலில் இளைப்பாறுபவர்களுக்கும், தினமும் 30 நிமிடம் மாமரத்தைக் கட்டிப் பிடித்தபடி இருப்பவர்களுக்கும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்கிறது ரெய்கி மருத்துவம். முக்கனிகளில் முதன்மையானதாகத் திகழ்கிறது, மாங்கனி!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், முத்துப்பேட்டை யில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது திருவுசாத்தானம் (கோயிலூர்) எனும் அற்புதத் தலம். பாடல்பெற்ற தலம் இது. இங்கே அமைந்துள்ள ஸ்ரீபெரியநாயகி அம்மன் சமேத ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் ஆலயத்தின் ஸ்தல விருட்சம் - மாமரம்.
ஊரின் நடுவே, ஐந்து நிலை ராஜகோபுரத்துடன், கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது ஆலயம். உள்ளே நுழைந்ததும், மூன்று நிலை கோபுரமும் உண்டு. இதனைச் சிங்களகோபுரம் என்பர். கருவறையில் சுயம்பு மூர்த்தமாக, இடதுபுறம் சற்றே சாய்ந்தும், குனிந்தும் லிங்க ரூபமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீமந்திரபுரீஸ்வரர்.
திருச்சுற்று மாளிகையின் தென்புறம், வடக்கு நோக்கியபடி, அசுரனை மிதித்த கோலத்தில் ஸ்ரீவடபத்ரகாளியும், ராகு மற்றும் கேதுவும் தனித்தனியே வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். அடுத்து, ஸ்ரீதட்சிணாமூர்த்தியும், ஸ்தல சூதவன விநாயகரும் காட்சி தருகின்றனர். பிராகார மேற்கில், வருணன், ஸ்ரீராமர் பூஜித்த லிங்கங்கள், இந்திரன், பிரம்மன், ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீசுப்ரமணியர் ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன. ஸ்ரீநடராஜர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீபைரவர், சந்திரன், சூரியன், நாயன்மார்கள் அறுபத்து மூவர், சப்தமாதர்கள் ஆகியோரும் தனித்தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். நவக்கிரக சந்நிதி மட்டும் இல்லை.
தெற்கு நோக்கியபடி, தனிக்கோயிலில் அருள்கிறாள் ஸ்ரீபெரியநாயகி. தென்மேற்கு மூலையில், சூத வனம் இருந்ததன் அடையாளமாக, மாமரங்கள் உள்ளன. சூத வனம் என்றால் மாங்காடு. மாமரங்கள் சூழ்ந்த காட்டில் தோன்றியதால், இங்கேயுள்ள ஸ்ரீவிநாயகருக்கு 'சூதவன விநாயகர்' என்று திருநாமம். இன்னொரு விஷயம்... இரண்டு கைகளில் மாவிலைக் கொத்துக்களையும், துதிக்கையில் மாங்கனியையும் ஏந்தியபடி காட்சி தருகிறார் இந்த விநாயகர்.
இங்கே அருள்பாலிக்கும்... மூன்று திருமுகம் மற்றும் மூன்று திருப்பாதங்களுடன் காட்சி தரும் ஜுரதேவரை வழிபட்டால், தீராத காய்ச்சலும் நீங்கும் என்பது நம்பிக்கை.
சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான இந்த ஆலயத்துக்கு இலக்குவன், ஜாம்பவான், சுக்ரீவன் ஆகியோர் புடைசூழ ஸ்ரீராமர் வந்து, இலங்கைக்குச் செல்ல, கடலில் பாலம் கட்டுவதற்கு, இறைவனிடம் மந்திராலோசனை பெற்றுச் சென்றார் (இந்தத் தலத்துக்கு அருகில் ஸ்ரீராமர் கோயில், ஜாம்பவான் ஓடை, அனுமன் காடு, சுக்ரீவன்பேட்டை, தம்பிக்குநல்லான் பட்டணம் என்னும் ஊர்கள் அமைந்துள்ளன). இதனால் ஈசனுக்கு, ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் எனத் திருநாமம் அமைந்ததாம்! கடலில் பாலம் கட்ட உதவியதால், உசாத்தானம் எனப் பெயர் அமைந்தது. அதேபோல், ஸ்ரீராமனுக்கு ஆலோசனை சொல்வதற்காக, தலை சாய்த்துப் பேசினாராம் ஈசன். இன்றளவும் அதே சாய்ந்த திருக்கோலத்தில் காட்சி தந்தருள்கிறார்.
வருண பகவான் சிவ பூஜை செய்து, சாப விமோசனம் பெற்ற தலம் இது. மார்க்கண்டேயன் மீது பாசக்கயிற்றை எமன் வீசியபோது, லிங்கத் திருமேனியிலும் விழுந்து தழும்பு ஏற்பட்டது திருக்கடையூரில். அந்தத் தழும்பு நீங்கிய திருத்தலம், திருவுசாத்தானம்.
சிங்கள தேசத்துக்குப் படையெடுத்துச் சென்றான் சோழ மன்னன். அப்போது சோழ வீரன் ஒருவன், 'எங்கள் அரசன் போரில் வென்றால், எனது தலையைப் பலியிடுகிறேன்' என்று ஸ்ரீதுர்கையிடம் பிரார்த்தித்தான். அதன்படி மன்னனும் வெல்ல, வீரன் தனது தலையை ஸ்ரீதுர்கைக் குப் பலி தரும் காட்சி, இந்த ஆலயத்தில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
பிராகாரத்தில், ஸ்தல விருட்சமான மாமரங்கள் இரண்டு உள்ளன. இதயத்துக்கு சக்தி தருவது, உடல் வளர்ச்சியை மேம் படுத்துவது, ஆண்மையைப் பலப்படுத்து வது, ஜீரண சக்தியை வழங்குவது, சிறுநீர்ப்பையின் குறைபாடுகளைப் போக்குவது எனப் பல மருத்துவ குணங்கள் கொண்டது, மாமரம். மாவிலைகளை உலர்த்திப் பவுடராக்கிச் சாப்பிட, பேதித்
தொல்லை நீங்கும். சர்க்கரை நோயாளி களுக்கு அருமருந்து இது! இலை மற்றும் தண்டுப் பகுதியைக் கஷாயமிட்டுச் சாப்பிட, தசைச் சுருக்கங்கள் நீங்கும்; ரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும். கஷாயத்தைக் கொண்டு வாய் துலக்கி னால், பல்வலி நீங்கும். தொண்டை வறட்சி சரியாகும். மாம்பழ விதைகளில்... வாந்தி, பேதி, மார்பு அழற்சி, தீப்புண்கள் ஆகியவற்றைக் குணப் படுத்தும் தன்மை உள்ளது. அமிலத் தன்மையையும் இது கட்டுப்படுத்தும். தவிர, மாதவிடாய்ப் பிரச்னை, ரத்த மூலம், நுரையீரல், சிறுநீர்ப்பை மற்றும் குழாய்களில் ஏற்படும் ரத்தப்பெருக்கு ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமையும் மாமரத்துக்கு உண்டு. கதவு, ஜன்னல், மேஜை ஆகியவை தயாரிக்கவும் மாமரம் பயன்படுகிறது. மாவிலையில் கிருமி நாசினித் தன்மை அதிகம் இருப்பதால், வீட்டு வாசல் மற்றும் பந்தலில் தோரணம் கட்டித் தொங்கவிடுகின்றனர்.
மாமரத்தைத் 'தேமா' எனக் குறிப்பிடுகிறார் கபிலர். தேமா, கலிமா என இரண்டு மாமலர்களைக் குறிஞ்சிப் பாட்டில் விவரிக்கிறார், அவர். 'செங்கொடுவேரி தேமா மணிச்சிகை', 'கரந்தை குளவி கடி கமழ் கலிமா' ஆகிய வரிகளுக்கு, நச்சினார்க்கினியர் 'தேமாம்பூ' என்றும், 'விரை கமழத் தழைத்த மாம்பூ' என்றும் உரை எழுதியுள்ளார்.
காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர், கொள்ளிடத்துக்குக் கிழக்கே 6 கி.மீ. தூரத்தில் நல்லூர்ப்பெருமணம் திருவெண் ணீற்று உமையம்மை, மயிலாடுதுறை ஸ்ரீமயூரநாதர், திருவானைக்காவலில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீஆம்ரவனநாதர் ஆகிய ஆலயங்களிலும் மாமரமே ஸ்தல விருட்சமாகப் போற்றப்படுகிறது.
                                                                                                - விருட்சம் வளரும்,

No comments:

Post a Comment